சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த இன்ப அதிர்ச்சி


தயாரிப்பாளர் கலைஞானத்தின் புதுவீட்டுக்கு திடீரென வருகை தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் அபூர்வராகங்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். வில்லன் வேடங்களில் நடித்துவந்த அவர் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் பைரவி. 1978-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை தயாரிப்பாளரும் எழுத்தாளருமான கலைஞானம் தயாரித்திருந்தார். கதாசிரியராகவும் கலைஞானம் பணியாற்றினார். 70 ஆண்டுகால திரை வாழ்க்கையில், கதாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமையை வெளிப்படுத்திய கலைஞானத்திற்கு தற்போது 90 வயதாகிறது.

19 வயதில் சினிமா உலகில் நுழைந்தவர். இவரது பைரவி படத்தின் வெற்றி விழாவில் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் சூட்டப்பட்டது. கலைஞானம் சொந்த வீடு இல்லாமல் தவித்து வந்தார். கலைஞானத்திற்கு கடந்த ஆகஸ்டு மாதம் இயக்குனர் பாரதிராஜா பாராட்டு விழா நடத்தினார். இந்த பாராட்டு விழாவில் ரஜினிகாந்தும் பங்கேற்றார். விழாவில் பேசிய நடிகர் சிவகுமார் கூறிய பிறகுதான் கலைஞானம் சொந்த வீடு இல்லாமல் இருப்பது அனைவருக்கும் தெரிய வந்தது.

இதையடுத்து பேசிய ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு வீடு வாங்கித் தருவேன் என்று பொதுமேடையில் சொல்லி உறுதி அளித்தார் சூப்பர்ஸ்டார் ரஜினி.

ரஜினி சொன்னபடி வீடு வாங்கிக் கொடுப்பதில் கலைஞானத்தைவிட தீவிரமாக இருந்தார். அந்த விழாவில் பேசிய மறுநாளே வீடு வாங்குவதற்கான தொகைக்கு செக் போட்டு ராகவேந்திரா மண்டப அலுவலகத்தில் கொடுத்துவிட்டுத்தான் ‘தர்பார்’ படப்பிடிப்பிற்குச் சென்றார் ரஜினி.

கடந்த 5.10.2019 வெள்ளியன்று… அமுதினி ஃபிளாட்ஸ், 34 விநாயகம் தெரு, வெங்கடேசன் நகர், விருகம்பாக்கம், சென்னை முகவரில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் 1320 சதுரடியில் மூன்று படுக்கையறைகளும், இரண்டு கார் பாக்கிங்களும் கொண்ட வீடு வாங்கப்பட்டது.

இன்று (07.10.2019) காலை பத்து மணிக்கு தான் வாங்கிக் கொடுத்த புதுவீட்டுக்கு ரஜினி வந்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் கலைஞானம். புது வீட்டின் பூஜையறையில் குத்துவிளக்கேற்றினார் ரஜினி. கூடவே பாபா படம் ஒன்றையும் பரிசளித்தார். தயாரிப்பாளர் கலைஞானம் தன் குடும்பத்தினரை ரஜினிக்கு அறிமுகம் செய்துவைத்தார். பிறகு வீட்டைச் சுற்றிப்பார்த்த ரஜினி… “வீடு தெய்வீகமா இருக்கு” என மகிழ்ச்சி தெரிவித்து விட்டு கிளம்பி சென்றார் நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.