தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின்தேர்தலில் முன்னேற்ற அணியின் செய்தியாளர் சந்திப்பு பிரசாத்லேப் திரையரங்கில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சங்கத் தேர்தலில் தனி அணியாகப் போட்டியிட்ட டி.சிவா தலைமையிலான அணி போட்டியிலிருந்து விலகியதுடன் முன்னேற்ற அணிக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துச் செயல்படத் தயாராகி விட்டது.
அதன் சங்கமமாக இந்த விழா அமைந்தது.
இவ்விழாவில் முதலில் வரவேற்றுப் பேசிய கௌரவச் செயலாளருக்குப் போட்டியிடும் கே.சதீஸ்குமார் (ஜேஎஸ்கே) பேசும்போது ”தயாரிப்பாளர்கள் ஒன்றேகுலம் என்று இருப்பவர்கள்.நாங்கள்ஒரே குடும்பம்.
இங்கே 1000 கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் விஷமிகள் ஊடுருவ விடமாட்டோம் .
இந்த அணிக்கு ஆதரவாக எஸ்.தாணுஅவர்களும் டி.சிவா அவர்களும் தோள் கொடுப்பது இதன் ஒற்றுமைக்குச் சாட்சி. எங்களை வழிநடத்தும் ஜே.கே. ரீத்தீஷ், சேரன் அவர்களுக்கு நன்றி.
தயாரிப்பாளர் சங்கம் தயாரிப்பாளர் சங்க மாகவே இருக்க வேண்டும். இதில் நடிகர் சங்கம் ஊடுருவ இடமில்லை. நடிகர் சங்க வாக்குறுதிகளையே அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர்களைப்போல நாங்கள் தரமற்ற விமர்சனம் செய்ய மாட்டோம். செயலில் காட்டுவோம்.” என்றார்.
தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஆர்.ராதாகிருஷ்ணன் பேசும் போது ” இந்த முன்னேற்ற அணியினர் வெறும் வாய்ச் சொல் வீரர்கள் அல்ல. நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்று விரிவாகப் பேசுவதில் விருப்பமில்லை. செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள். எங்கள் அணி சார்பில் முதல்கட்ட செயல்பாடுகளாக 10 முக்கிய வாக்குறுதிகளும் 10 நலத்திட்டங்களும் இப்போது அறிவித்திருக்கிறோம்.” என்றார்.
டி சிவா
தயாரிப்பாளர் டி.சிவா பேசும் போது” கடந்த காலத்தில் சங்கம் எதுவுமே செய்யவில்லை என்பது மிகவும் தவறு.கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் இரண்டைத் தவிர எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டோம். பல சிறு முதலீட்டுப் படங்கள் வெளிவர உதவியிருக்கிறோம் . சிறு முதலீட்டுப் படங்கள்125 படங்களில் 54 படங்களை சாட்டிலைட் உரிமைக்கு விற்றிருக்கிறோம். சேனல்கள் எப்.எம்..விளம்பரக் கட்டணங்களை 2500 என்பதை 900 என்றும்500 என்றும் குறைத்திருக்கிறோம்.
திருட்டு விசிடி பற்றி விஷால் இவ்வளவு பேசுகிறார். எங்கள் சங்கத்தில் அவருக்கே பொறுப்பு கொடுத்துத் திருட்டு விசிடியைக் கவனிக்கச் சொன்னோம். ஆனால் அவர் பொறுப்பேற்கவில்லை. எதுவுமே கண்டு கொள்ள வில்லை. அவரால் தயாரிப்பாளர்களுக்கு நன்மை செய்ய முடியாது.
விஷாலிடம் தயாரிப்பாளர் சங்கத்தில் அலுவலக நிர்வாகத்தினர் தொழில் முறை தயாரிப்பாளர்களாக இருக்க வேண்டும் என்றோம். கேட்க வில்லை. அவர்கள் தினமும் ஓட்டல், பார்ட்டி, பணம் கவர், தங்கம் என்று தயாரிப்பளர்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்களிடம் எப்படி நேர்மை இருக்கும்?
ஆயிரம் உண்டு இங்கு ஜாதி, அந்நியர் வந்திங்கு புகல் என்ன நீதி? தவறானவர்களை உள்ளே விட மாட்டோம். தயாரிப்பாளர்களின் வலி நடிகர்களுக்குத் தெரியாது. இந்த அணி வெற்றி பெறுவது உறுதி.” என்றார்.
ஜேகே ரித்தீஷ்
முன்னாள் எம்.பி நடிகர் ஜே.கே.ரித்தீஷ் பேசும் போது
” இப்போது எடுக்கிற 100 படங்களில் 95 படங்கள் ஓடுவதில்லை. தயாரிப்பாளர்கள் சிரமப்படுகிறார்கள். படம் வெற்றி பெற்றால் நடிகர் முதல் லைட்மேன் வரை பங்கு போடுவார்கள். தோல்வி அடைந்தால் தயாரிப்பாளர் மட்டுமே தாங்க வேண்டும்.
நடிகர் சங்கத்தில் பாலமுருகன் என்கிற தன் பிஏவை வைத்து நடிகர் சங்கத்தை விஷால் நிர்வாகம் செய்கிறார். தகுதி இல்லாத அவர் தவறு செய்கிறார். 100 பேரை சங்கத்திலிருந்து நீக்கியுள்ளார்கள். அப்படி ஒரு நிலை இங்கே வந்து விடக்கூடாது என்றுதான் இவர்களை நான் ஆதரிக்கிறேன்.” என்றார்.
கலைப்புலி எஸ் தாணு
கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது, ” இளைய தலைமுறைக்கு வழிவிட்டு நான் விலகியிருந்தேன். விஷாலின் பேச்சு, நடை, உடை, பாவனை பார்த்து தவறான முன் உதாரணமாகிவிடக் கூடாது என்றுதான் நான் இங்கு வந்தேன்.
தம்பி டி.சிவாவை முரளிதரன் முன் மொழிந்த போது சரி என்று நினைத்திருந்தேன். பலரும் ஏன் இத்தனை அணி என்று கேட்டார்கள். விஷாலின் யதேச்சதிகாரம், ஆணவம். அகங்காரம் கொஞ்ச நஞ்சமல்ல. அவரது நடவடிக்கை மிகவும் மோசமாக இருந்தது.
தேசிய விருது பெற்ற சேரனுக்கு 5000 ரூபாய் தரச் சொல்கிறார் 2012ல் ‘நீதானே என் பொன் வசந்தம் ‘ படத்துக்கான சிக்கலில் கௌதம்மேனன் நின்ற போது ஒரு கோடி ரூபாய் நான் உதவி செய்தேன்.
‘பாயும்புலி’ பட சிக்கல் வந்த போது விஷால் போனை ஆப் செய்து பதுங்கி விட்டார். பிரச்சினை வந்தால் பதுங்கும் நீயெல்லாம் பாயும் புலியா?
ஒரு முறை 50 லட்சரூபாய் பிரச்சினையில் என்னிடம் வந்து பவ்யமாகக் கெஞ்சினார்.
சங்கத்தில் சிரமப்படும் 1512 தயாரிப்பாளர்களில் 12 பேர் உன்னை வைத்துப் படமெடுத்தவர்கள். விஷால் தம்பி வாயை அடக்கிப் பேசு நாவடக்கம் தேவை. தம்பி விஷால் “மதகஜராஜா’ 30 கோடி பிரச்சினையில் உள்ளது.
நீ என்ன புரட்சி செய்தாய்? புரட்சிதளபதி என்கிறாயே.. உன்னைப் பற்றி ஏராளமான புகார்கள் இருக்கின்றன. வரும் 26ஆம் தேதி ஆதாரங்களுடன் வெளியிடுவேன்.
ஞானவேல்ராஜா என்னென்னவோ பேசுகிறார் கொம்பன்’ படத்துக்கு பிரச்சினை வந்தபோது அழுததும் நாங்கள் உதவியதும் நினைவில்லையா?
பிரகாஷ்ராஜ் ஏதேதோ பேசுகிறார் அவர் ஒழுங்காக நேரத்துக்குப் படப்பிடிப்பு போனதுண்டா? உங்கள் மேல் எவ்வளவு புகார்கள்?
இப்படிப்பட்டவர்களிடம் தயாரிப்பாளர் சங்கம் போகலாமா? ”
இவ்வாறு தாணு பேசினார்.
நிறைவாக தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் முன்னேற்ற அணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.