பிலிமில் எடுக்கப்படும் கடைசிப்படம் தகவல்!

பெண்ணைத் தெய்வமாக, நதியாக, தாய் மொழியாக, தாய்நாடாக பார்க்கிற -மதிக்கிற இந்த நாட்டில் இப்போது பெண்ணை காமக் கருவியாகப் போகப் பொருளாகப் பார்க்கும் சூழல் உள்ளது.

ஒரு பெண் தனியே பயணம் செய்கிறபோது அவளை இந்தச் சமுதாயம் எப்படிப் பார்க்கிறது அதனால் அவள் என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்கிறாள் என்பதைப் பற்றிய கதையே ‘தகவல் என்கிற படமாக உருவாகியுள்ளது.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஒரு சூழலில் கிடைக்கும் தகவல் அவனது வாழ்க்கையையே மாற்றியமைக்கும். அப்படி இப்படத்தில் வரும் ஒரு தகவல்தான் படத்தின் திருப்புமுனை, விறுவிறுப்புக்கு மையப்புள்ளி எல்லாமே.

இப்படத்தை கே.சசீந்தரா இயக்கியுள்ளார். இவர் பரதன்,ஜோஷி போன்ற பல இயக்குநர்களிடம் பணிபுரிந்து இருக்கிறார் தமிழில் தொலைக்காட்சி தொடர் இயக்கியவர். மலையாளத்தில் ‘வைடூர்யம்’ படம் இயக்கி பத்திரிகைகளின் பரவலான பாராட்டைப் பெற்றவர். அவர் இயக்கியுள்ள முதல் தமிழ்ப் படம்தான் ‘தகவல்’ .மோஷன் கிராப்ட் புரொடக்ஷன் மற்றும் எப்விஎம்எஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

தேஷா, ரிஷி, மயில்சாமி, டிம்பிள்ரோஸ், ஸ்ரீஷா, மாஸ்டர் விஷ்ணு நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு சிபி. ஜோசப் இவர் ஜீவாவின் உதவியாளர் இசை சாஜித்தென்றல் .நடனம் கூல் ஜெயந்த் ,பின்னணி இசை எஸ்.பி.வெங்கடேஷ் ,நிர்வாகத் தயாரிப்பாளர் ஒய். அசோக் குமார். தயாரிப்பு. ஜித்து ஜோஸ்.

காணாமல் போன காதலனைத் தேடிச் செல்லும் ஒரு பெண்ணின் பாதையும் பயணமுமே கதையின் உட்கரு.

கதைப் பயணிக்கும் பகுதியில் படக்குழுவும் பயணம் செய்துள்ளது. அப்படி மதுரை, கம்பம், தேனி, கள்ளக்குறிச்சி, ஒத்தப்பபாலம், மகாகனித் தோட்டம், ஆண்டிப்பட்டி என்று படக்குழுவினர் பயணித்துப் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

படம் தொழில்நுட்ப ரீதியாகவும் பேசப்படும் இப்படம் ‘ஆரி 435 ‘கேமராவால் பிலிமில் எடுக்கப்பட்டுள்ளது. அனேகமாக இது பிலிமில் எடுக்கப்பட்ட கடைசிப் படமாக இருக்கும்.

படத்தில் பயன்பட்டுள்ள லென்ஸ்கள் காட்சிகளை பிரமாண்டப் படுத்தியுள்ளன.

”தனியே பயணம் செய்யும் ஒவ்வொரு பெண்ணையும் இப்படம் யோசிக்க வைக்கும். இந்த சமூகத்தின் மீது கேள்விகள் கேட்கவைக்கும் ” என்கிறார் படத்தை இயக்கியுள்ள கே.சசீந்தரா.

‘தகவல்’ படத்தின் இறுதிக்கட்ட தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன

விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.