மிர்ச்சி சிவா, பவர்ஸ்டார் சீனிவாசன் என்கிற அதகள காம்பினேஷனில் உருவாகிவரும் படம் தான் ‘அட்ரா மச்சான் விசிலு’.. கச்சேரி ஆரம்பம் படத்தை இயக்கிய திரைவண்ணன் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு ரகுநந்தன் இசையமைக்க காசி விஷ்வா ஒளிப்பதிவு செய்கிறார். பிரசாத் லேபில் படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகளில் மும்முரமாக இருந்தவர், கொஞ்ச நேரம் ஒதுக்கி படம் பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
இந்தப்படத்துக்கு அட்ரா மச்சான் விசிலு என டைட்டில் வைக்க என்ன காரணம்..?
ஒரு காமெடியான படம்.. குடும்பத்தோடு பார்க்ககூடிய படம்.. அதுமட்டுமில்லாமல், சினிமா பேக்ரவுண்ட்ல எடுக்கப்படும் படம் என்பதால் பொருத்தமா இருக்கும்னு இந்த டைட்டிலை வச்சோம்….
இந்த படத்தோட கதையை ஒன்லைன்ல சொல்லுங்க பார்ப்போம்..
இருக்கிறவங்க இல்லாதவங்களுக்கு கொடுத்து உதவுங்க.. அந்த கடவுளுக்கு தெரியும்.. இவன் கிட்ட கொடுத்தா இவன் மத்தவங்களுக்கு உதவுவான்னு.. அதனால வச்சிக்கிட்டு இல்லைன்னு ஏமாத்தாதீங்க அப்படின்னு சொல்றோம். இந்த சீரியசான லைனை முழுக்க முழுக்க காமெடியா சொல்லியிருக்கோம்.
பர்ஸ்ட்லுக் போஸ்டர்ல பவர்ஸ்டாருக்கு எம்.ஜி.ஆர் முத்தம் கொடுக்கிற மாதிரி வச்சிருக்கீங்களே.. ஏன்?
எம்.ஜி.ஆரை மத்த எல்லாரும் பார்க்கிறத விட நாங்க பார்க்கிற பாய்ன்ட் ஆப் வியூ வேற.. முதல்ல எம்.ஜி.ஆர் அவர்களை சினிமாக்கரராத்தான் பார்க்கணும்.. அப்புறம்தான் சி.எம் மா பார்க்கணும். நாங்க அவரை ஒரு சினிமா கலைஞரா நினைச்சுத்தான் இந்த போஸ்டரை உருவாக்கினோமே தவிர இதுல வேற எந்த உள்நோக்கமும் இல்ல..
எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கிட்ட இருந்து எதிர்ப்பு ஏதாவது வந்ததா..?
இதுவரைக்கும் வரலை.. இனியும் கூட வராதுன்னு நம்புறேன்.. ஆனால் போஸ்டரை பார்த்து நல்லாருக்குன்னு சொன்னாலும், எங்க பிரண்ட்ஸ் சைட்ல இருந்தே ‘கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு’ன்னும் சொன்னாங்க..
ஏற்கனவே ரஜினியை கிண்டல் பண்ற படம்னு வேற சொல்றாங்க..? அதுக்கேத்த மாதிரி முரட்டுக்காளை ரஜினி கெட்டப்ல பவர்ஸ்டார்..?
வெளியில சொல்றாங்க தான். ஆனா நிச்சயமா அப்படி எதுவும் இதுல இல்ல.. நாங்களும் சினிமாக்காரங்கதான்.. எங்களுக்கு எல்லாரும் வேணும்.. தவிர சூப்பர்ஸ்டாரை கிண்டல் பண்ற அளவுக்கெல்லாம் நாங்க இன்னும் வளரலை. இது யாரையும் காயப்படுத்தாத படமா இருக்கும்.. படம் வந்ததும் உங்களுக்கே உண்மை என்னனு புரியும்..
லிங்கா விவகாரத்தில் ரஜினிக்கெதிரான விநியோகஸ்தர்கள் தான் இந்தப்படத்தை தயாரிச்சு இருக்காங்கன்னு சொல்லப்படுதே..?
இல்லவே இல்லை.. அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை கோபின்னு ஒரு தயாரிப்பாளர்தான் தயாரிச்சிருக்கார்.
‘கலாய்ப்பு மன்னன்’ங்கிறதால சிவாவை உள்ள இழுத்தீங்களா..?
இல்லைங்க.. இது முழுக்க முழுக்க காமெடி படம்.. கதையை ரெடி பண்ணிட்டு அப்புறம் தான் இதுக்கு சிவா பொருத்தமா இருப்பார்னு கூப்பிட்டோம்.. சிவா – பவர்ஸ்டார் காம்பினேஷன் இதுல நல்லாவே ஒர்க் அவுட் ஆகிருக்கு.. பர்ஸ்ட் ஹாப் மதுரைலயும் இடைவேளைக்கு பின்னாடி சென்னைலயும் நடக்கிற கதை இது.
பவர்ஸ்டார் – சிவா ஷூட்டிங் ஸ்பாட்ல ரெண்டு பேருக்கும் கலாட்டாவா இருந்திருக்குமே..?
தினசரி ஒரே கலாட்டா தான்.. பவர்ஸ்டார் சீரியஸா ஒரு ரியாக்சன் கொடுத்தாக்கூட சிவாவால சிரிப்பை அடக்கமுடியாம போய்டும்.. மதுரை, பட்டுக்கோட்டை, மதுக்கூர்னு ஷூட்டிங் எடுத்த பக்கமெல்லாம் பவர்ஸ்டாரை பார்க்கிறதுக்குனே ஒரு கூட்டம் வந்துடும்.
கதாநாயகி பத்தி சொல்லுங்களேன்..?
நைனா சர்வார் (Naina Sarwar) ங்கிற பெங்களூர் பொண்ணு தான் கதாநாயகி.. தமிழ்ல நாங்கதான் அறிமுகப்படுத்துறோம்.. ஆனாலும் கன்னடத்துல ஏற்கனவே நாலு படம் பண்ணிருக்காங்க..
ஜி.வி.பிரகாஷ் ஒரு பாட்டு பாடியிருக்கிறாரே..?
ஆமாங்க.. படத்தோட மியூசிக் டைரக்டர் ரகுநந்தனும் ஜி.வி.பிரகாஷும் பிரண்ட்ஸ்.. இந்தப்பாட்டை ஜி.வி.பிரகாஷ் பாடினா நல்லா இருக்கும்னு சொன்னேன்.. பாட்டு டியூனை கேட்டதும் ஜி.வி.பிரகாஷே நான் தான் இந்த பாட்டை பாடுவேன்னு உறுதியா சொல்லிட்டு பாடியும் கொடுத்திருக்கிறார். அஞ்சு பாட்டு.. அஞ்சும் அஞ்சுவிதமா ப்ரெஷா இருக்கும்.
படம் எப்போ ரிலீஸ் ஆகுது..?
வர்ற ஏப்-29 ல படத்தை ரிலீஸ் பண்றோம்.