சினிமாக்காரர்களை நிம்மதியாக தொழில் செய்ய விடாமல் புற்றீசல் போல ஒரு கூட்டமே பல மூலைகளில் இருந்து கிளம்பி வந்துகொண்டு இருக்கிறது. கார்த்தி நடித்த கொம்பன் படத்திற்கு ‘ஜாதி மோதல் அபாயம்’ என முலாம் பூசி எதிர்த்தார்கள் என்றால் இப்ப்போது கமல் நடித்துள்ள உத்தம வில்லனுக்கோ ஆன்மீக ரீதியான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கமல்ஹாசன் நடித்துள்ள உத்தம வில்லன் படத்தை திரையிட்டால் இந்துக்களின் மனம் புண்படுத்தும் விதமாக அமையும் என்று கூறி, அந்தப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி, காவல்துறை ஆணையரிடம், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மனு அளித்துள்ளது. இந்து மதத்தை புண்படுத்தும் விதமாக படத்தில் அப்படி என்னதான் இருக்கிறதாம்..?
“இந்தப்படத்தில் இந்து மதக் கடவுளான பெருமாளின் அவதாரங்களான தசாவதாரத்தை விமர்சித்து இருப்பதை தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம். பக்த பிரகலாதன், அவரது தந்தை இரணியன் உடனான உரையாடலை, வில்லுப்பாட்டாக ‘என் உதிரத்தின் விதை..’ என்னும் தொடங்கும் பாடல் வரியில் மிகைப்படுத்தி, பெருமாள் அவதாரத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பாடல் அமைந்துள்ளது. இது கோடிக்கணக்கான பெருமாள் பக்தர்களின் மனதை புண்படுத்தும் செயல். தொடர்ந்து இந்து மத எதிர்ப்பு கருத்துக்களால் தன்னை நாத்திகனாக காட்டிக்கொள்ளும் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் படத்தை திரையிட்டால் இந்துக்களின் மனம் புண்படுத்தும் விதமாக அமையும். எனவே, அந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டுகிறோம்” என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
‘உத்தம வில்லன்’ படம் வரும் மே-1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படி ஒரு கோணத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.