உண்மையைச் சொன்னால் அவதூறு என்பதா? விஷால் ஆவேசம்

உண்மையைச் சொன்னால் அவதூறு என்பதா என்று நடிகர் விஷால் ஆவேசமாகக் கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு;
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணி சார்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

‘பாண்டவர் அணி’ சார்பில்தலைவர் பதவிக்கு நடிகர் நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு நடிகர் விஷால், பொருளாளர் பதவிக்கு நடிகர் கார்த்தி, துணைத்தலைவர் பதவிக்கு நடிகர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

காலை 9.30 மணியளவில் அவர்கள் ஐவரும் நடிகர் சங்கத்துக்கான தேர்தல் அலுவலகம் வந்து மனுத்தாக்கல் செய்தனர்.

காலையிலிருந்தே தேர்தல் அலுவலகம் எதிரே துணை நடிகர்கள், வெளியூர்களிலிருந்து வந்த நாடக நடிகர்கள் என குவிந்த வண்ணம் இருந்தனர். ‘மாற்றம் வேண்டும்’, ‘மாற்றம் தேவை’ என்று கோஷம் போட்டபடி இருந்தனர்.

மனுத்தாக்கல் முடிந்ததும் நிருபர்களிடையே தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நாசர் பேசும்போது ” இதுதான் நடிகர் சங்கத்துக்கு நடக்கும் மகிழ்ச்சியான முதல் தேர்தல் என்பேன். நீண்ட நாட்களுக்குப்பிறகு எல்லா திரைப்பட நடிகர்களும், நாடக நடிகர்களும் சேர்ந்து உறவாடி சுதந்திரமான முறையில் நடக்கும் முதல் தேர்தல். ஜனநாயக பூர்வமான முறையில் வாக்களித்து நடக்க இருக்கும் முதல் தேர்தல் என்பேன்.இதுநாள் வரை இருந்த பிளவுகளைத் தவிர்த்து எல்லா நடிகர்களும் ஒர்றாக இணைந்து இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். அப்படி மகிழ்ச்சியாக நடக்கிற முதல் தேர்தல் இது.

நடிகர்கள் அனைவரிடமும் மாற்றம் வேண்டும் என்கிற எழுச்சியும் மாற்றம்வரும் என்கிற நம்பிக்கையும் காணப்படுகிறது. ” என்றார்.

நடிகர் விஷால் பேசும்போது ” இது பதவிக்காக நடக்கும் தேர்தல் அல்ல.சங்கத்துக்காகப் போராடுகிறோம் அதற்காக நடக்கும் தேர்தல் . அதற்காக நல்லதே நடக்கும்.இது ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து நடைபெறும் தேர்தல். அந்த மாற்றம் வரும் என்று நம்புகிறோம். நடிகர் சங்கக் கட்டடம் சம்பந்தமான ஒரு கேள்வியில் ஆரம்பித்தது இன்று மாற்றத்துக்கான தேர்தல் வரை வந்திருக்கிறது. எங்கள் மீது சினிமா நடிகர்கள், நாடக நடிகர்கள் அனைவருமே நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். தேர்ந்தெடுத்தால் நல்லவை அனைத்தும் செய்வோம். நல்லதே செய்வோம். ” என்றார்.

நடிகர் சங்கத்தில் அரசியலைக் கொண்டு வந்து விட்டதாக என்று சரத்குமார் கூறியுள்ளாரே என்று விஷாலிடம் நிருபர்கள் கேட்ட போது ”ஒரு அரசியல் கட்சியிலிருந்து கொண்டு அரசியல் கட்சி வைத்துக் கொண்டு அவர் இப்படிப் பேசியிருப்பது வேடிக்கையாகவே இருக்கிறது.” என்றார்.

நீங்கள் அவதூறு பேசுவதாகவும் அதற்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று சரத்குமார் கூறியுள்ளாரே என்று நிருபர்கள் கேட்ட போது ” நான் உண்மையைச் சொல்கிறேன். உண்மையைச் சொன்னால் அது அவதூறு ஆகுமா?இது பற்றி நான் பதிலளித்திருக்கிறேன். உண்மையைக் கூறியதற்கு வழக்கு போட்டால் அதையும் சந்திப்போம்”. என்றார்.

”தேர்தலில் எங்கள் அணியின்அறிக்கையில் இடம் பெற்றுள்ளவை என்னென்ன , செயல் திட்டம் என்னென்ன
என்பவை பற்றி எல்லா நடிகர்களுடனும் கலந்துரையாட இருக்கிறோம்.அதற்காக ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று மாலை கூட்டம் நடைபெறுகிறது” என்றும் விஷால் கூறினார்.