‘நான்’ படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து விஜய் ஆண்டனியும், இயக்குநர் ஜீவா சங்கரும் இணைந்து பணியாற்றி இருக்கும் திரைப்படம் ‘எமன்’. ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ மற்றும் ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்’ சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி இந்த படத்தை தயாரித்து இருக்கின்றனர்.
வர்த்தக ரீதியாக தனக்கென்று தனி இடம் பிடித்து இருக்கும் விஜய் ஆண்டனியின் அபார வளர்ச்சி, “நான்” படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு இணைந்து வரும் விஜய் ஆண்டனி – ஜீவா ஷங்கர் கூட்டணி, விநியோகம் மற்றும் விளம்பர யுக்தியை மிக சிறப்பாக கையாளும் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ என்று ஒரு வெற்றி படத்துக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக உருவாகிறது ‘எமன்’ திரைப்படம். சமீபத்தில் வெளியாகி, ஒட்டுமொத்த திரையுலகின் பாராட்டுகளையும் பெற்று இருக்கும் ‘எமன்’ படத்தின் டீசரே அதற்கு சிறந்த முன் உதாரணம்.
விஜய் ஆண்டனி இசையமைத்து நடித்திருக்கும் ‘எமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற பிப்ரவரி 4 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது. “ஒரு திரைப்படத்தின் வெற்றியை நிர்ணயிப்பது ரசிகர்கள். அவர்களின் அன்பும், ஆதரவும் தான் என்னுடைய வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம். எனவே ‘எமன்’ படத்தின் பாடல்களை என்னுடைய ரசிகர்கள் மத்தியிலும், பொதுவான சினிமா ரசிகர்கள் மத்தியிலும் வெளியிட ஆசை படுகிறேன். இந்த தருணத்தில் அவர்களை இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு அன்போடு அழைப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்” என்று உற்சாகமாக கூறுகிறார் விஜய் ஆண்டனி.