100% காதல் விமர்சனம்


படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் படிப்பில் படுகெட்டி. அவர் தான் எப்பொழுதும் படிப்பில் முதலிடம் பெறும் மாணவர். அவருக்கு தான் எப்பொழுதும் நம்பர் 1 ஆக இருக்க வேண்டும் என்பது ஒரு வெறியாகவே மாறிவிடுகிறது. இவருக்கு போட்டியாக யாருமே இல்லை.
இந்நிலையில் நாயகி ஷாலினி பாண்டே படிப்பிற்காக கிராமத்திலிருந்து நாயகன் ஜி.வி.பிரகாஷ் வீட்டிற்கு வருகிறார். நாயகி ஷாலினி பாண்டே ஒரு ஆவரேஜ் மாணவியாகத்தான் இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் போன்று படிப்பில் முதலிடம் பெறும் மாணவியாக இல்லை. படிப்பதற்கு மிகவும் திணறும் ஷாலினி பாண்டேவுக்கு ஜி.வி. பிரகாஷ் உதவி செய்கிறார்.
அப்போது நடைபெறும் ஒரு தேர்வில் ஷாலினி பாண்டே, நாயகன் ஜி.வி.பிரகாஷை முந்திக் கொண்டு முதலிடம் பிடித்து விடுகிறார். நம்பர் 1ல் வெறியாக இருக்கும் ஜி.வி பிரகாஷ், நாயகி மீது வெறுப்பாகிறார். மீண்டும் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று பல காய்களை நகர்த்துகிறார் ஜி.வி.பிரகாஷ்.
ஆனால், அடுத்ததாக நடைபெறும் தேர்வில் இவர்கள் இருவரும் இல்லாமல் மற்றொரு மாணவர் முதல் மதிப்பெண் பெறுகிறார்.
அதனால் நாயகன், நாயகி இருவரும் போட்டி போட்டுக் கொண்டு அவனை வீழ்த்த முடிவு செய்கிறார்கள்.
ஷாலினி பாண்டே அந்த மாணவனை காதலிப்பதாக நடிக்கிறார். இதனால் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.
இறுதியில் படிப்பில் முதலிடம் பிடித்தது யார்? ஷாலினி பாண்டே யாருடன் ஜோடி சேர்ந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை ஜி.வி.பிரகாஷ் சரியாக செய்து முடித்துள்ளார். படத்தின் முதல் பாதியில் வரும் இருவருக்கும் இடையேயான ஈகோ மோதலும் ரசிக்கும் வகையில் உள்ளது. ஷாலினி பாண்டே அழகிலும் கவர்ச்சியிலும் இளைஞர்களை கவர்ந்திருக்கிறார். மாமா என கொஞ்சி பேசும்போது நமக்கு இப்படியொரு மாமா பெண் இல்லையே என ஏங்க வைக்கிறார்.
மனோபாலா, அப்புக்குட்டி, சாம்ஸ் போன்ற காமெடி பயில்வான்கள் இருக்கிறார். இன்னும் கொஞ்சம் காமெடி காட்சிகளை சிறப்பாக அமைத்திருக்கலாம்.
ரேகா, தலைவாசல் விஜய், ஆர்வி.உதயகுமார், ஜெயசித்ரா, ஷிவானி பட்டேல் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
படத்திற்கு இசை அமைத்திருக்கும் ஜி.வி. பிரகாஷ் இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமைத்திருக்கலாம். பின்னணி இசை பரவாயில்லை.
2011ம் ஆண்டு 100% லவ் என்ற பெயரில் தெலுங்கில் வெளியான இப்படத்தை அப்படியே ரீமேக் செய்துள்ளனர். காலத்திற்கேற்றவாறு சிறிது மாற்றி அமைத்திருந்தால் ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் ரசித்திருப்பார்கள். இயக்குநர் சந்திரமௌலி இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.