2.O – விமர்சனம்


ரஜினி-ஷங்கர் கூட்டணி என்றால் காலம் கடந்து மிரட்டும் படங்களை கொடுப்பவர்கள் என்கிற பெயர் நிலைத்துவிட்டது. அந்தவகையில் மிகப்பெரிய வெற்றிபெற்ற எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக சுமார் எட்டு வருடங்கள் கழித்து வெளியாகியுள்ளது இந்த 2.O.. கபாலி, காலா என சீரியஸாக படம் பார்த்துவிட்டு, ரஜினியிடம் இருந்து ஜாலியான படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இந்தப்படம் தீனி போட்டுள்ளதா..?

படத்தின் கதையும் கொஞ்சம் புதுசுதான். சென்னையை சுற்றியுள பகுதிகளில் செல்போன்கள் அனைத்தும் திடீர் திடீரென வானத்தில் மாயமாகின்றன. விஞ்ஞானி வசீகரன் (ரஜினி) இதன் பின்னணியில் உள்ள மர்மத்தை டெக்னாலஜி உதவியுடன் துப்புதுலக்க, பறவைகளை காப்பற்றுவதற்காக போராடி உயிர்விட்ட சமூக ஆர்வலர் அக்சய் குமார் இதன் பின்னணியில் இருக்கிறார் என தெரியவருகிறது.

பறவை வடிவில் பயங்கர உருவமாக வரும் அக்சய் எதற்காக செல்போன்களை குறிவைக்கிறார், எதற்காக மொபைல்போன் சம்பந்தப்பட்ட நபர்களை கொல்கிறார் என்பதும் தெரியவருகிறது. அக்சய் தனது பக்க நியாயத்தை கூறி மக்களை அழிக்க கிளம்ப, அதை தனது சகாக்களான சிட்டி, 2.O, 3.O மற்றும் நிலா (எமி ஜாக்சன்) ஆகிய ரோபோக்களின் துணையுடன் வசீகரன் எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் மீதிக்கதை.

ஒரு ரஜினி இருந்தாலே அதகளம் பண்ணுவார். இதில் ஒன்றுக்கு நான்காக வருவதால் கேட்க வேண்டுமா என்ன..? இத்தனை வயதிலும் இவ்வளவு துடிப்புடன் செயல்பட முடியுமா என இளம் நடிகர்களுக்கே சவால் விட்டுள்ளார் ரஜினி. காமெடிக்கென தனி ஆட்கள் இல்லாமல் அந்த ஏரியாவையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டுள்ளார் ரஜினி. குறிப்பாக எந்திரன் சிட்டியைப்போல, இதில் கடைசி இருபது நிமிடம் வரும் 3.O வெர்ஷன் இனி குழந்தைகளின் பேவரைட் லிஸ்ட்டில் நீண்ட நாளைக்கு இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இடைவேளைக்குப்பின் தான், தனது முகத்தையே காட்டுகிறார் என்றாலும் மீதிப்படத்தில் விதவிதமான முகத்தோற்றத்தில் நம்மை அசரடிக்கிறார் அக்சய் குமார். கதைப்படி அவரையும் வில்லன் என சொல்லமுடியாதபடி அவரது கேரக்டரையும் நியாயப்படுத்தி இருக்கிறார்.

எமி ஜாக்சன் கேரக்டரை அழகாக படத்தில் கோர்த்துள்ள ஷங்கர் புத்திசாலித்தனமாகவும் அதேசமயம் காமெடியாகவும் அவரை பயன்படுத்தியுள்ளார். அடிக்கடி ஒலிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அந்த பின்னணி இசையே படத்துடன் நம்மை கட்டிப்போடு விடுகிறது. ஷங்கருக்கு இணையாக தனது பங்களிப்பை தந்துள்ளார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா.

பறவைகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஒருவன் இப்படி ஒரு போராட்டத்தில் இறங்குவானா என சாதாரணமாக நினைக்க வைக்காமல், பறவையினம் இருந்தால் மனித இனம் உயிர்வாழ முடியும் என்கிற கருத்தை 55௦ கோடியில் ஆணித்தரமாக சொல்ல ஷங்கரால் மட்டுமே முடியும்

படம் முழுதும் வரும் பிரமாண்ட சண்டைக்காட்சிகள் அசரடிக்கின்றன. ஷங்கர் படம் பார்க்கவேண்டுமேன்றால் காத்திருக்கத்தான் வேண்டுமென்பதையும் ஆனால் அதற்கான பலன் ரசிகர்களுக்கு நூறு சதவீதம் கிடைக்கும் என்பதையும் ஒவ்வொரு காட்சியமைப்பும் உணர்த்துகின்றன.

மொத்தத்தில் 2.O விஷுவல் ட்ரீட்