60 வயது மாநிறம் – விமர்சனம்


பெற்றோரின் மதிப்பை அறியாமல், மனித உறவுகளின் மகத்துவம் புரியாமல் வாழக்கை என எதையோ புரிந்துகொண்டு பணமே குறிக்கோள் என ஓடிக்கொண்டு இருக்கும் சில மனிதர்களுக்கு அதை புரியவைக்கும் சாட்டையடி தான் இந்த படம்.

அல்சீமர் எனும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர் பிரகாஷ் ராஜ். அவரது மகன் விக்ரம் பிரபு. அம்மா இறந்து விட்ட நிலையில் இந்த ஞாபகமறதி நோயுடன் தந்தையை சமாளிக்க முடியாமல் அவரை ஒரு இல்லத்தில் சேர்த்துவிட்டு வெளிநாடு செல்லும் முயற்சியில் இருக்கிறார் விக்ரம் பிரபு. அவ்வப்போது அவரை பார்த்து செல்லும் விக்ரம் பிரபு ஒருமுறை அவரை வெளியே அழைத்து சென்று, இல்லத்தின் வாசலில் விட்டுச்சென்றுவிட, வழி தவறி வேறு எங்கோ போய்விடுகிறார் பிரகாஷ் ராஜ்.

இந்த தகவலை அறிந்ததும் விக்ரம் பிரபுவும் அந்த இல்லத்தில் உள்ளவர்களின் உடல்நிலையை கவனித்துக்கொள்ளும் டாக்டரான இந்துஜாவும் சேர்ந்து பிரகாஷ்ராஜை தேடும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் ரியலிஸ்டேட் தொழில் செய்துவரும் தாதா ஒருவருக்கு அடியாளாக இருக்கும் சமுத்திரக்கனியிடம் எதிர்பாராமல் சிக்கிகுறார் பிரகாஷ்ராஜ்.

ஒரு கொலையை செய்து விட்டு அதற்காக தலைமறைவாக இருக்க வேண்டிய சூழலில் பிரகாஷ்ராஜையும் சேர்த்து கொண்டு நகருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள குமரவேல்-மதுமிதா வீட்டில் அவர்களை மிரட்டி அடைக்கலம் புகுகிறார் சமுத்திரக்கனி . எந்த தடயங்களையும் விட்டு வைக்கக்கூடாது என்பதற்காக, கூட இருக்கும் அனைவரையும் கொல்லச்சொல்லி சமுத்திரக்கனிக்கு உத்தரவிடுகிறார் தாத்தா.

அதே சமயம் தந்தையை காணாமல் தேட ஆரம்பிக்கும் விக்ரம் பிரபுவுக்கு தந்தையின் அருமை கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பிக்கிறது. கூடவே இந்துஜாவின் காதலும் கிடைக்கிறது. சமுத்திரக்கனியின் கைகளில் சிக்கிய பிரகாஷ் ராஜ் என்னவானார்? விக்ரம் பிரபுவால் பிரகாஷ்ராஜை சந்தித்து மீட்க முடிந்ததா ? என்பது மீதிக்கதை.

ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவராக பிரகாஷ்ராஜின் நடிப்பு ரொம்பவே அருமை. இதுவரை பல்லை கடித்துக்கொண்டு வசனம் பேசிய பிரகாஷ்ராஜை, இப்படி பார்ப்பது நமக்கு புது அனுபவமாக இருக்கிறது. தந்தையை புரிந்துகொள்ளாத மகனாக நடித்துள்ள விக்ரம் பிரபு ஹீரோயிசத்தை வீட்டா கேரக்டரை நம்பி இறங்கியுள்ளார். இது தொடரட்டும். அவருடன் படம் முழுவதும் பயணிக்கும் இந்துஜா நம்மை வசீகரிக்கிறார்.

இருந்தாலும் ஒரு இல்லத்தில் உள்ள அத்தனை நோயாளிகளுக்கும் டாக்டராக இருக்கும் ஒருவர், விக்ரம் பிரபுவுடன் சேர்ந்து ஒரே ஒரு நோயாளியை மட்டும் தேடிக்கொண்டே இருப்பது எந்த விதத்தில் சரி என தெரியவில்லை. ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கும் கருப்பு நாய், வெள்ளை நாய் என்கிற விஷயத்தை சமுத்திரக்கனி, தன்னுடைய கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களுக்கு அழகாக கடத்துகிறார்.

சற்றே சீரியஸான படத்தை குமரவேல் மதுமிதா அண்ட் கோ இருவரும் இணைந்து கலகலப்பாக கொண்டு செல்கின்றனர். போலீஸ் அதிகாரியாக வரும் பரத் ரெட்டி, கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். இந்த படத்தில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் விஜய் டிவி புகழ் சரத் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.

பின்னணி இசை இளையராஜா என்று சொன்னால், அப்படியா என ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு தான், இந்த படத்தில் தனது வேலையை கொடுத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. இந்துஜாவுடன் நட்பு ஏற்பட்டவுடன் விக்ரம் பிரபுவின் தந்தையை தேடும் பணியின் வேகம் குறைவதை தவிர்த்திருக்கலாம். இப்படி சின்ன சின்ன ஒதுக்கி தள்ளக்கூடிய குறைகள் இருந்தாலும், தந்தை மகன் உறவு குறித்த ஒரு அழுத்தமான பதிவாக, இந்த படம் நம் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துகொள்கிறது

60 வயது மாநிறம் – விமர்சனம், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இந்துஜா,குமரவேல், சமுத்திரக்கனி, மதுமிதா, ராதாமோகன், பரத் ரெட்டி