7 நாட்கள் – விமர்சனம்


தொழிலதிபர் பிரபு. தனது மகன் ராஜீவ் பிள்ளைக்கு கோடீஸ்வரர் வீட்டு பெண்ணை நிச்சயம் செய்கிறார்.. ஆனால் பல பெண்களுடன் நட்புகொண்ட தீராத விளையாட்டு பிள்ளையான ராஜீவ் சம்பந்தப்பட்ட சிடி ஒன்று தன்னிடம் இருப்பதாக பிரபுவுக்கு மர்ம நபரிடம் இருந்து மிரட்டல் வருகிறது.திருமணத்திற்கு ஏழு நாட்களே இருக்கும் நிலையில் தனது வளர்ப்பு மகன் கணேஷ் வெங்கட்ராமனிடம் இந்த பிரச்சனையை தீர்க்கும் பொறுப்பை ஒப்படைக்கிறார் பிரபு..

சிடி இருப்பதாக மிரட்டிய மர்ம நபர், கணேஷ் வெங்கட்ராமன் தன்னை நெருங்குவது கண்டு தன்னிடம் உள்ள சிடியை நண்பன் ஷக்தி வீட்டிற்குள் தூக்கிப்போட்டு விடுகிறார். ஆனால் அவர் தூக்கிப்போட்ட சிடி சக்தியின் வீட்டிற்குள் விழுவதற்கு பதிலாக, எதிர்வீட்டில் சக்தியிடம் எந்நேரமும் சண்டக்கோழியாக சிலுப்பும் நிகிஷா படேல் வீட்டுக்குள் விழுகிறது..

இதனால் சக்தியையும் நிகிஷாவையும் சிடிக்காக துரத்துகிறார் கணேஷ் வெங்கட்ராமன்… அந்த சிடியை கணேஷ் வெங்கட்ராமன் ஏழு நாட்களுக்குள் கைப்பற்றினாரா..? அந்த சிடியில் அப்படி என்னதான் இருந்தது..? குறித்தபடி மகனின் திருமணத்தை நடத்தினாரா பிரபு..? என்கிற கேள்விகளுக்கு சில சுவாரஸ்ய முடிச்சுகளுடன் விடைசொல்கிறது மீதிக்கதை.

நாயகன் ஷக்தி ஓடுகிறார்.. ஓடுகிறார்.. அப்படி ஓடுகிறார்.. கூடவே கதாநாயகி நிகிஷா பட்டேலையும் இழுத்துக்கொண்டு. ஆனால் சென்டிமென்ட் மற்றும் காமெடி காட்சிகளில் ஒரு நாயையும் துணைக்கு சேர்த்துக்கொண்டு கலகலப்பூட்டுகிறார்.

ஹீரோயின் நிகிஷா பட்டேலுக்கு சக்தியிடம் முரண்டு பிடித்து சண்டக்கோழியாக சிலுப்புவது தான் மெயின் வேலை.. ஆனால் அப்படி சண்டை போட்ட பாவத்திற்கு இடைவேளைக்கு பிறகு அவரை நல்ல ரன்னிங் ரேஸ் ஓடவிட்டுள்ளார் இயக்குனர். அதிலும் அவரை கலாய்க்கும் பிளாக்கி என்ற நாய் பேசும் வசனங்கள் சிரிப்பு வெடி தான் என்றாலும் அதற்கு வி.எஸ்.ராகவன் குரலில் மைண்ட் வாய் கொடுத்துள்ளது கொஞ்சம் ஓவர்தான்.

இந்த படத்தில் காக்கி யூனிபார்ம் போடாமல், கோட் சூட்டில் ஸ்டைலாக வலம் வரும் போலீஸ் அதிகாரி கணேஷ் வெங்கட்ராம் கதாநாயகனை விட மிக அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளார்.. வளர்ப்பு தந்தையின் மானத்தை காப்பாற்ற அவர் எந்த எல்லைக்கும் செல்ல துணிவது செஞ்சோற்று கடன் தீர்க்கும் நெகிழ்ச்சியான தருணம்.

மகனுக்காக உருகும், அதேசமயம் வளர்ப்பு மகனையும் விட்டுத்தராத கோடீஸ்வரர் கேரக்டரில் பிரபு செம பிட்டாக பொருந்துகிறார். கோடீஸ்வரனின் மகனாக காட்சிக்கு காட்சி பணத்திமிரை காட்டும் கேரக்டரில் ராஜீவ் பிள்ளை சரியான தேர்வென தன்னை நிரூபிக்கிறார். நாசர், எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, சின்னி ஜெயந்த், அங்கனா ராய் என மற்றவர்களும் நிறைவாக நடித்துள்ளனர்.

விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசைக்கு பாஸ் மார்க் போடலாம். எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமாக உள்ளது. அறிமுக இயக்குநர் கெளதம் வி.ஆர், திருப்பங்களுடன் கூடிய திரைக்கதை மூலம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்த முயற்சித்திருக்கிறார்.. அந்த சிடி அடிக்கடி தேவையில்லாமல் இடம் மாறும் காட்சிகளும், ஷக்தி-நிகிஷா அடிக்கடி சண்டையிட்டுக்கொள்ளும் காட்சிகளும் ஒருகட்டத்தில் எரிச்சலூட்ட்டவே செய்கின்றன.

சக்தியை பிடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தும் கணேஷ் வெங்கட்ராமன் அசட்டையாக இருப்பது ஏனோ..? தனது மகனை போலீஸ் விசாரிக்க அழைத்தார்கள் என்பதற்கே சி.எம்மை எச்சரிக்கிறார் பிரபு.. ஆனால் பிளாஸ்பேக் காட்சிகளில் வேறு கேசிற்காக குற்றவாளி கூண்டில் நின்று பின் விடுதலையாகிறார் ராஜீவ் பிள்ளை.. அந்த அளவு போவதற்கு பிரபு எப்படி இடம் கொடுத்தார்..? இப்படி நிறைய கேள்விகள் இருந்தாலும் ஒரு ‘ஆடுபுலி ஆட்டம்’ பார்த்த உணர்வை ஏற்படுத்தியுள்ளார் இயக்குனர் கௌதம் வி.ஆர்.