8 தோட்டாக்கள் – விமர்சனம்


ஒரு போலீஸ் அதிகாரியிடம் இருந்து அவரது துப்பாக்கி எட்டு தொட்டக்களுடன் பறிபோகிறது.. அதை கண்டுபிடித்து மீட்பதற்குள் எட்டு இடங்களில் தோட்டாக்கள் வெடிக்கின்றன.. இது நடந்தது ஏன்.. எப்படி என்பதை புதிய பாணியில் சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஸ்ரீகணேஷ்.

செய்யாத கொலைக்காக சிறுவயதிலேயே ஜெயிலுக்கு போகும் வெற்றி, பின்னாளில் ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டராகவே ஆகிறார்.. இன்ஸ்பெக்டர் மைம் கோபி கொடுக்கும் பணி நிமித்தமாக 8 தோட்டாக்கள் அடங்கிய துப்பாக்கியுடன் ரவுண்ட்ஸ் கிளம்புகிறார்.. அந்தோ பரிதாபம்.. அவரது துப்பாக்கி பிக் பாக்கெட் அடிக்கப்படுகிறது..

விஷயத்தை இன்ஸ் மைம் கோபியிடம் சொல்ல, அவரோ ஒரு நாள் அவகாசம் தருகிறேன்.. அதற்குள் கண்டுபிடி.. இல்லையென்றால் பிரச்சனை பெரிதாக்கும் என எச்சரிக்கிறார்.. ஆனால் காணாமல் போன துப்பாக்கி போகக்கூடாதவர் கைகளுக்கு போய் பல இடங்களில் வெடிக்கிறது. குறிப்பாக ஒரு வங்கிக்கொள்ளைக்கும் அதன் காரணமாக ஒரு பிஞ்சு குழந்தையின் மரணத்துக்கும் கூட காரணமாகிறது.

அந்த துப்பாக்கி கடைசியில் யார் கையில் சிக்கியது? அந்த துப்பாக்கியை வைத்து நடந்த கொலைகளுக்கான காரணம் என்ன? ஹீரோ இந்தப்பிரச்சனையில் இருந்து மீண்டாரா என்பதுதான் மீதிக்கதை..

கதாநாயகன் வெற்றி.. தயாரிப்பாளர் மகன் என்பதால் தனக்கென எந்த ஒரு பில்டப் காட்சியும் கேட்காத புண்ணியவான்.. அதற்கே அவரை பாராட்டலாம். போலீஸ் கெட்டப்புக்கு கச்சிதமாகப் பொருந்தியிருப்பதுடன் கதையின் கதாபாத்திரத்திற்கு தேவையான அளவு படத்துடன் ஒன்றி நடித்துள்ளார்.

கதாநாயகி அபர்ணா பாலமுரளிக்கு தமிழில் நல்ல ஒரு அறிமுகம் இந்தப்படத்தில் கிடைத்திருக்கிறது.. தனது வேலையை காப்பற்றிக்கொள்ள காதலனையே சிக்கவைக்கும் காட்சியில் ‘அடப்பாவி’ என சபாஷ் போடவைக்கிறார் அபர்ணா..

படத்தின் முக்கிய தூண்.. தனது ஓய்வூதியத்தை வாங்க இவர் அல்லல்படும் காட்சியும் தனது குடும்ப, அவர்களால் படும் மனக்கஷ்டம் ஆகியவற்றை விளக்கும்போது நம் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்கிறது. துக்கையை கண்டுபிடிக்கும் விசாரணைப்படை போலீஸ் அதிகாரியாக நாசரின் நடிப்பில் மிடுக்கு..

படத்தின் இன்னபிற கதாபாத்திரங்களும் யதார்த்தமாக படத்தை நகர்த்த உதவியிருக்கிறார்கள்.. தினேஷ் கே.பாபுவின் ஒளிப்பதிவும் பாராட்டும்படி இருக்கிறது. சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. சுந்தர மூர்த்தியின் இசையில் பாடல்கள் ஒன்றிரண்டு சுகம்.. அதேசமயம் பின்னணி இசை கதையின் ஓட்டத்துக்கு துணை நின்றிருக்கிறது.

படத்தின் மிகப்பெரிய பலமே திரைக்கதையும், வசனங்களும்தான்… இதுவரை அதிகமாக யாரும் கையாளாத ஒரு கதைக்களத்தை வைத்து புதிய கோணத்தில் கதை சொல்ல முயற்சித்திருக்கிறார். கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்த விதமும் அவர்களை வேலை வாங்கிய விதமும் ஒரு அனுபவப்பட்ட இயக்குனரின் திறமையை பறைசாற்றுகின்றன.

8 தோட்டாக்கள் – விறுவிறுப்பு