83 – விமர்சனம்

இந்த தலைமுறையை முதலாவதாகவும், போன தலைமுறைகளை திரும்பவுமாக 1983-ல் நடந்த கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் இயக்குநர் கபீர் கான்.

கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தங்களை துச்சமென மதித்த அத்தனை பேர் முகங்களிலும் கரியைப்பூசி ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் டன் கணக்கில் அள்ளித்தந்த அந்த தருணங்களை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் கபீர் கான்.

கபில்தேவாக வரும் ரன்வீர் சிங் முதல் 83 இல் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற அணியிலிருந்து அத்தனை பேரையும் பிரதிபலித்த நடிகர்கள் அனைவருமே சிறப்பாக நடித்து சம்பந்தப்பட்ட நிஜ ஹீரோக்களை நம் கண் முன் கொண்டு வந்திருக்கிறார்கள்.

மைதானத்திற்குள் பெளலிங், பீல்டிங், பேட்டிங் என்று ஒரு ஆல்ரவுண்டராக ஜொலித்த, மைதானத்திற்கு வெளியே தனது அரைகுறையான ஆங்கிலத்தில் பேசினாலும் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லி தனது அணியினருக்கு ஊக்கமும் எதிரிகளுக்கு சவாலையும் கொடுக்கும் கபில்தேவை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார் ரன்வீர் சிங். அவரது மனைவியாக வரும் தீபிகா படுகோனிடம் Do or Die க்கு பதிலாக Do and Die என்று சொல்லிமிடத்தில் தீபிகாவுடன் சேர்ந்து நாமும் சிரிக்கிறோம் என்றாலும், கபில் தேவின் அந்த குழந்தைத்தனமான உள்ளம் நம்மை என்னவோ செய்துவிடுகிறது.

அணியினர் பயணம் செய்யும் பேருந்தில் கமல்ஹாசனின் ஏக் து ஜே கேலியே படத்தில் வரும் I don’t know what you say பாடலை வைத்து கபில்தேவின் ஆங்கிலத்தை கலாய்க்கும் ஸ்ரீகாந்த் அட நம்ம ஜீவாதாங்க, அழகு. அத்துடன் முக்கியமான கட்டங்களில் ஜீவாவுக்கு நடிக்க நிறையவே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. அதில் மட்டுமல்லாமல், மைதானத்திற்குள்ளும் அதிரடி காட்ட எங்க டீமிலும் ஆள் இருக்கான் டா என்று காட்டிய ஸ்ரீகாந்தின் அனல் பறக்கும் பேட்டிங்கை அற்புதமாக பிரதிபலித்திருக்கிறார், ஜீவா.

உலகக்கோப்பையை வென்ற அன்றைய அணியின் மேலாளர் மான் சிங்காக நடித்திருக்கும் பங்கஜ் திரிபாதியும், இந்திய தேசியகொடியுடன் கிரிக்கெட் பார்க்க வரும் சிறுவன் முதல் அண்ணன் மடியில் அமர்ந்து அன்றைய பைனலை கண்டுகளிக்கும் நம்ம குட்டி சச்சின் வரை அத்தனை பேரும் ரசிகர்கள் மனதில் நின்றுவிடுகிறார். கவாஸ்கர் முதல் ரவிசாஸ்திரி வரையில் நடித்திருக்கும் அத்தனை பேரின் படப்பிடிப்பிற்கு முந்தைய கடின உழைப்பு , படத்தில் நன்றாகவே தெரிகிறது. கவாஸ்கரின் கிளாசியான பேட்டிங்கை தஹிர் ராஜ் பாஷின் அற்புதமாக திரையில் கொண்டு வந்திருக்கிறார்.

தொழில் நுட்பரீதியாக அஸிம் மிஸ்ராவின் ஒளிப்பதிவும் , ஜூலியஸ் பாக்கியத்தின் பின்னணி இசை பிரீத்தமின் பாடல்களுக்கான இசை என்று சிறப்பாக இருக்கின்றன.

இன்னாராக இவர் என்பதை ரசிகர்களுக்கு தெளிவாக விளக்கிச் சொல்லும் பொருட்டு விமான நிலையத்தில் ஒரிஜினல் வீரர்களின் பாஸ்போர்ட்டுகளை காட்டும் காட்சி அற்புதம்.

குழந்தைகளுடன் 83 படத்தை பார்த்து மகிழுங்கள்.