சினிமாவில் ஹீரோக்கள் அரசியல் பேசி பார்த்திருக்கிறோம்.. ஆனால் கதாநாயகிகள் அரசியலை அழுத்தமாக, தைரியமாக பேசிய படங்கள் விஜயசாந்தியின் படங்களுக்கு பின் ஏனோ வந்ததே இல்லை.. அந்தக்குறையை தீர்க்கும் விதமாக ‘அறம்’ படம் மூலமாக நடப்பு அரசியலை, மோசமான ஆட்சி அதிகாரத்தை கிழிகிழி என கிழித்து கேப்பையை நட்டிருக்கிறார் நயன்தாரா..
ஆழ்குழாய் கிணறுகளில் குழந்தைகள் தவறிவிழும் விபத்து என்பது செய்திகளில் அவ்வப்போது நாம் பார்க்கும் விஷயம் தான்.. ஆனால் அதை பார்த்து ஒரு சில வினாடிகள் உச் கொட்டிவிட்டு கடந்து விடுகிறோம்.. ஆனால் அதன் பயங்கரம், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அனுபவிக்கும் துயரம் இதையெல்லாம் நம்மையும் உணர வைத்திருக்கிறது இந்த ‘அறம்’..
குடிதண்ணீர் வசதியே இல்லாத கருவேல மரங்கள் நிறைந்த கிராமத்தில் ஆழ்குழாய் கிணற்றுக்காக தோண்டப்பட்டு மூடப்படாத குழியில் ஐந்து வயது சிறுமி எதிர்பாரதவிதமாக விழுந்து விடுகிறாள்.. கொந்தளிக்கும் மக்களையும் சமாளித்து அலட்சியப்போக்குடன் பணியாற்றும் அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு அந்த குழந்தையை மீட்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறார் கலெக்டர் நயன்தாரா.
அரசிடம் இருக்கும் வசதிகள் அந்த குழந்தையை காப்பாற்ற உபயோகப்படாது என்பதை உணரும் நயன்தாரா, அரசியல்வாதி, அதிகாரிகளின் எதிர்ப்பையும் துணிந்து ரிஸ்க்கான முடிவு ஒன்றை தானே எடுத்து அதை செயல்படுத்துகிறார். அது அவரது வேலைக்கே வேட்டு வைக்கிறது. அப்படி நயன்தாரா எடுத்த ரிஸ்க் என்ன..? அதனால் அந்த குழந்தையை காப்பற்றமுடிந்ததா..? அப்படியே காப்பாற்றி இருந்தால் அவர் எதற்காக தனது பணியை ராஜினமா செய்கிறார்..? என்கிற கேள்விகளுக்கு விறுவிறுப்பான விடை சொல்கிறது மீதிப்படம்..
இதையே வேறு இயக்குனர் வேறு ஒரு நடிகையை வைத்து படமாக்கியிருந்தால் டாக்குமென்ட்ரி படமாக, பத்தோடு பதினொன்றாக ஆகியிருக்கும். ஆனால் அறச்சீற்றம் கொண்ட இயக்குனர் கோபி நயினாரும், தனது அற்புதமான, உணர்ச்சிப்பூர்வமான, மிகையில்லாத நடிப்பால் நயன்தாராவும் அக்மார்க் கமர்ஷியல் படமாக விறுவிறுப்பாக மாற்றியிருக்கிறார்கள்.
படம் முழுதும் குழந்தையை மீட்க, ஒரு கலெக்டராக மட்டுமில்லாமல், ஒரு சக மனுஷியாக அவர் பதறுவது இப்போதைய அதிகாரிகளில் இந்த பதறும் மனம் கொண்ட நல்ல உள்ளங்களை காணோமே என்கிற உண்மை முகத்தில் அறைகிறது.. மோசமான அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும் சகட்டுமேனிக்கு சாடுகிறார் நயன்தாரா. ஆனால் அவை அத்தனையும் இருநூறு சதவீதம் யதார்த்தம்.
ஒரு கலெக்டர், அதிலும் ஒரு பெண் மக்களுக்காக தனது கடமையை ஆற்றுவது என்பது அவ்வளவு சாதாரணம் இல்லை என்பதை காட்சிக்கு காட்சிக்கு சம்மட்டி அடியாக தனது நடிப்பால் நிரூபித்திருக்கிறார் நயன்தாரா. அதிலும் குழந்தையை காப்பாற்ற இறுதியில் அவர் எடுக்கும் ரிஸ்க், அதை தொடர்ந்து நகரும் நிமிடங்கள் நம்மை பதட்டத்திலேயே வைத்திருக்கின்றன.
சாதாரண தொழிலாளியாக வரும் பெயிண்டர் ராம்ஸ், அவர் மனைவியாக வரும் சுனுலட்சுமி, மகனாக நடித்துள்ள சின்ன காக்கா முட்டை பையன், அரசியல்வாதியாக வேல.ராமமூர்த்தி, அதிகாரியாக ‘வழக்கு எண்’ முத்துராமன், அரசு டாக்டர், வெகு(ளி) ஜனத்தின் பிரதிபலிப்பாக வரும் பழனி பட்டாளம் என அனைவருமே சம்பந்தப்பட்ட இடத்தில் உலவும் கதாபாத்திரங்களாக இருப்பது படம் முழுதும் நம்மை கவனம் சிதறாமல் ஒன்ற வைக்கிறது.
இந்த அத்தனை காட்சிகளையும் விரக்தி, வேதனை, பயம், சந்தோசம் என்கிற கலவையாக மாற்றும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறது ஜிப்ரானின் பின்னணி இசை. கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போல அவ்வளவு நேர்த்தியான ஒளிப்பதிவை ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளதுடன், யதார்த்தத்தை முகத்திலும் அறைந்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்.
இந்தப்படத்தின் இயக்குனர் கோபி நயினார் நம்பிக்கை மிகுந்த வரவாக நம் கண்களுக்கு தெரிகிறார். படம் துவங்கிய கால்மணி நேரத்திலேயே நம்மை ஒருவித படபடப்பு, பயத்துடன் இறுதிவரை கட்டிப்போடும் திறமை இவருக்கு வெகு சாதாரணமாக கைவந்திருக்கிறது. இங்கே நடப்பது மக்களுக்கான ஆட்சி இல்லை, வேலை பார்ப்பது மக்களுக்கான அதிகாரிகள் இல்லை என்பதை பொட்டில் அடித்தாற்போல சொல்லியிருக்கிறார்.
ராக்கெட் விட்டு சாதனை படைக்கும் நம் நாட்டில் இன்னும் ஆழ்குழாய் கிணறு விபத்துக்களில் சிக்கிய உயிரை காப்பாற்ற முடியாத அவலத்தை முதல் படத்திலேயே இவ்வளவு தைரியமாக சொல்லியிடிருப்பது பாராட்டுதலுக்குரியது. இதுபோன்ற இயக்குனர்களுக்கு நயன்தாரா கைகொடுத்திருப்பது அவர் மீதான மரியாதையை அதிகரித்துள்ளது.
அறம் – பார்த்தேயாக வேண்டிய நல்ல படம்..