அரண்மனை 3 – விமர்சனம்

அரண்மனை 3 படத்தை சுந்தர் சி யின் அவ்னி மூவிஸ் சார்பாக குஷ்பு தயாரிக்க சுந்தர் சி இயக்கியுள்ளார்.. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

அரண்மனை 1 & 2 போலவே ஒரு அரண்மனை பங்களா அதில் யாராவது ஒருவர் கொல்லப்படுவார். அவர் பேயாக வந்து கொன்றவர்களை பழி வாங்குவார். இதிலும் அதே தான்.ஆனால் அந்த கதையை தன் வழக்கமான பார்முலா படி நட்சத்திர பட்டாளங்களுடன் கலர்ஃபுல்லாக காமெடியாக மிக பிரம்மாண்டமாக சொல்லியிருக்கிறார் சுந்தர் சி.

ஜமீன்தார் சம்பத் தன் மகள், அக்கா, தங்கை உள்ளிட்ட சொந்தங்களுடன் மிகப்பெரிய அரண்மனையில் வாழ்கிறார். அந்த அரண்மையில் இருக்கும் பெண் அநியாயமாகக் கொல்லப்பட, அவர் சம்பந்தப்பட்டவர்களைப் பழிவாங்க துரத்துகிறார்.அவரைக் கொன்றது யார்.? என்ன காரணம்.? என்பதே படத்தின் கதை.

சார்பட்டா பரம்பரையில் முறுக்கேறிய ஆர்யா இதிலும் அதே உடல்வாகுடன் தோற்றமளிக்கிறார். ராஷிகண்ணாவுடன் ஆர்யாவுக்கு நல்ல கெமிஸ்ட்ரி இருந்தும் அதற்கான காட்சிகள் இல்லை. இதில் ஆர்யாவும் பேயாக வருகிறார். ஆனால் பயமில்லை. முக்கியமாக ஆர்யா ஏன் பேயாக வருகிறார்? என்பதற்கான காரணங்கள் சரியாக இல்லை. சுந்தர் படம் என்றால் நாயகி ஒரு காட்சியிலாவது பிகினி உடையில் கவர்ச்சியாக வருவார். இதில் ராஷி கண்ணா அப்படி சில்லுன்னு வந்து ரசிகர்களை சூடேற்றுகிறார். ஆண்ட்ரியா அசத்தல்.. அழகாகவும் வருகிறார். அசிங்கமாகவும் வருகிறார். அழவும் வைக்கிறார். பயமுறுத்தியும் செல்கிறார்.

படத்தின் இயக்குனர் சுந்தர் சி இதில் ஆர்யாவை விட அவரே ஹீரோவாக தெரிகிறார். கிட்டத்தட்ட ஆர்யாவை பேய் வில்லனாக்கிவிட்டார். விவேக் யோகிபாபு மனோபாலா.. இந்த மூவரின் கூட்டணி படத்திற்கு ப்ளஸ்.. பேயிடம் அடிவாங்கும் காட்சிகளிலும் இவர்கள் ஒளிந்து கொள்ளும் காட்சிகளில் கலகலப்புக்கு பஞ்சமில்லை.திருமணமாகி 15 வருடத்திற்கு பிறகும் கன்னி கழியாத விவேக் & மைனா காட்சிகள் ரசிகர்களுக்கு ட்ரீட்.

சாக்‌ஷி அகர்வால் & டிக் டாக் நளினி காட்சிகள் ஓகே ரகம். வில்லனாக சம்பத் & வேல ராமமூர்த்தி, மதுசூதன் ராவ் ஆகியோர் தங்கள் அனுபவ நடிப்பில் தங்கள் கேரக்டர்களுக்கு உயிரூட்டியுள்ளனர்.மேலும் அமித் பார்கவ், வின்சென்ட் அசோகன், விச்சு விஸ்வநாத், செல் முருகன் இவர்களுடன் சுந்தர் சி-யின் யுனிட் ஆட்கள் நிறைய பேருக்கு வாய்ப்பளித்துள்ளார்.

திரைக்கதை வேங்கட் ராகவன்.. வசனம் பத்ரி.. இசை சத்யா சி.. ஆண்ட்ரியா பாடும் அம்மாவின் தாலாட்டு… செங்காத்தாளே… பாடல் அனைவரையும் ரசிக்க வைக்கும். ஆர்யா & ராஷி ஜோடிக்கு ஒரு டான்ஸ் சாங்… ஒரு மெலோடி சாங் என கொடுத்துள்ளார். ரசவாச்சி, தீயாகத் தோன்றி பாடல்கள் இரண்டையும் ரசிக்கலாம்.யுகே செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் கண்களுக்கு விருந்தளிக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சி செட் அரங்கம் பிரமிக்க வைக்கிறது.

சுந்தர் படம் என்றால் ஜாலியா இருந்தா போதும் என நினைப்பவர்கள் ரசிகர்கள். அதை காப்பாற்றியிருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் கிராபிக்ஃஸ் பேய் பைட் & சிலை சிங்கம் எழுந்து வந்து பேயை கொல்வது குழந்தைகளை நிச்சயம் பயமுறுத்தும்.