அசுரன் – விமர்சனம்


தனுஷ் ஒரு விவசாயி. தனுஷின் மனைவி மஞ்சு வாரியர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் மற்றும் 1 பெண் குழந்தை. மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

அதே ஊரில் வாழந்து வருபவர் ஆடுகளம் நரேன். நரேனுக்கு தொழிற்சாலை கட்ட நிலம் தேவைப்படுகிறது. தனுஷுக்கு சொந்தமான நிலத்தில் தொழிற்சாலை கட்ட முடிவு செய்கிறார் நரேன். இதனால் எதாவது பிரச்சனை செய்து தனுஷ் நிலத்தை அபகரிக்க நினைக்கிறார்.

இதனால் ஏற்படும் பிரச்சனையில் தனுஷின் மூத்த மகன், நரேனை அசிங்கப்படுத்தி விடுகிறார். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த நரேன் தனுஷின் மூத்த மகனை கொன்று விடுகிறார்.

தனது அண்ணனை கொன்ற நரேனை தனது தந்தை தனுஷால் ஒன்று செய்ய முடியாது என்று நினைக்கும் இரண்டாவது மகன் கென் கருணாஸ் நரேனை கொலை செய்கிறார்.

நரேனை தனுஷின் இரண்டாவது மகன் கொன்ற பிறகு இந்த பிரச்சனை மேலும் விஸ்வரூபமடைகிறது. மூத்த மகனை போல் இரண்டாவது மகனையும் இழந்து விடக் கூடாது என்று நினைக்கிறார் தனுஷ். அதன்பின் தனுஷின் அசுர ஆட்டம் ஆரம்பமாகிறது.

தனுஷ் தனது அசுர ஆட்டத்தின் மூலம் தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

தனுஷ் சிவசாமி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பது மிக அழகு. பல காட்சிகளில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார். அதிலும் நாயகி மஞ்சு வாரியர் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்கும்போது, தனுஷின் முகத்தில் இருக்கும் பரிதவிப்பு, பிரமாதம். தனுஷின் மனைவியாக வரும் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி கிராமத்து பெண்ணாக மனதில் நிற்கிறார்.

மூத்த மகனாக வருபவர் சிறப்பாக நடித்திருக்கிறார். இரண்டாவது மகனாக வரும் கென் கருணாஸ் நடிப்பில் மிரள வைத்திருக்கிறார். இவரை பார்க்கும் போது சிறு வயது தனுஷை பார்ப்பது போல் இருக்கிறது. 16 வயது சிறுவனுக்கே உரிய படபடப்பு, கோபம், பயம் எல்லாவற்றையும் தொடர்ந்து முகத்தில் தக்கவைக்கிறார். இவருக்கும் தனுஷுக்கும் இடையேயான காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

ஊர் தலைவராக வரும் ஆடுகளம் நரேன், இன்ஸ்பெக்டராக வரும் பாலாஜி சக்திவேல், தனுஷின் மச்சானாக வரும் பசுபதி, வக்கீலாக வரும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் தங்களுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தை பூமணியின் ‘வெக்கை’ நாவலைத் தழுவி இயக்கி இருக்கிறார் வெற்றிமாறன். படம் முழுவதும் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி மக்களுக்கு இடையேயான பிரச்சனையை சொல்லியிருக்கிறார். தாழ்ந்த சாதி குடும்பத்தை சேர்ந்த விவசாயி, பல போராட்டங்களில் தன் குடும்பத்தை எப்படி வழி நடத்தி செல்கிறார் என்பதை திரைக்கதையாக கொடுத்திருக்கிறார்.

ஜிவி.பிரகாஷின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. திரைக்கதை ஓட்டத்திற்கு இவரது பின்னணி இசை பெரிதும் உதவி இருக்கிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவும் அபாரம்.

அசுரன் திரைப்படம் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணிக்கு மேலும் மெஹா ஹிட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.