சினிமாவில் டைரக்டராக துடிக்கும் ஜெய்யிடம் பேய்க்கதை ஒன்றை உருவாக்கி வரச்சொல்கிறார் தயாரிப்பாளர் ஒருவர். இதற்காக மனைவி அஞ்சலி, தனது அண்ணன் மகன் பப்பு நண்பர்கள் யோகிபாபு மற்றும் ஒருவரை அழைத்துக்கொண்டு ஊட்டிக்கு செல்கிறார் ஜெய். அங்கே ஏற்கனவே தனது நண்பன் சொன்ன ரிசார்ட்டில் தங்கும் ஜெய், பேய் இருப்பதாக சொல்லப்படும் பாழடைந்த வீட்டிற்கு செல்ல முயற்சிக்க, போலீஸ் அவரை தடுகிறார்கள்.
அதை தொடர்ந்து வரும் நாட்களில் ஜெய்யின் அண்ணன் மகனிடம் சில மாற்றங்கள் தெரிகின்றன.. போகப்போக அஞ்சலிக்கும் அதை தொடர்ந்து ஜெய்க்கும் தங்களது ரிசார்ட்டில் குட்டிச்சிறுமியான பேய் ஒன்று இருப்பதையும் அண்ணன் மகனுக்கு பிரண்ட் ஆக ஆகி விட்டதையும் உணர்கிறார்கள்.
உடனே அந்த ரிசார்ட்டை காலிசெய்து ஊருக்கு கிளம்ப முயல, அவர்களை தடுப்பதற்காக சிறுவனின் உடலில் புகுந்து கொள்கிறது அந்த குட்டிப்பேய். அவர்களுக்கு உதவி செய்ய வரும் பாதிரியார் ஜாய் மேத்யூஸ் மூலமாக குட்டிப்பேயும் அவரது அம்மாவான ஜனனி ஐயரும், அவரது காதலனும் (அதுவும் ஜெய் தான்) கொல்லப்பட்டது தெரிய வருகிறது.
அவர்களை கொன்றது யார்..? தங்களை கொன்றவர்களை பேய்கள் பழி வாங்கியதா..? கொன்றவர்களை விட்டு விட்டு சம்பந்தமில்லாமல் இவர்களை பேய் மிரட்டுவது ஏன்..? இதில் ஜெய்யின் பங்கு என்ன என்பதற்கு மீதிப்படம் விடை சொல்கிறது.
பேய்ப்படங்களில் வரும் வழக்கமான கிளிஷே காட்சிகள் அனைத்தும் இந்தப்படத்திலும் இடம் பெற்றுள்ளன. அதே சமயம் மொத்தப்படத்திலும் திகிலுடன் சேர்ந்து காமெடி காட்சிகளால் கலகலப்பும் ஊட்ட முயற்சித்திருக்கிறார்கள்.
ஜெய் தான் ஒரு நல்ல நடிகர் என்பதை இதிலும் நிரூபித்திருக்கிறார். அவர் தன்னை சுற்றி போட்டுக்கொண்டிருக்கும் மாயவலையை உடைத்துவிட்டு வெளியே வந்தால் சினிமாவில் அவருக்கான நிலையான இடத்தை தக்க வைத்துக்கொள்ள இன்னும் வாய்ப்பு இருக்கிறது.
கணவனின் லட்சியத்திற்காக துணை நிற்கும் அன்பு மனைவியாக வரும் அஞ்சலியிடம் க்ளைமாக்ஸை நெருங்கும் காட்சிகளில் மட்டும் வழக்கமான ‘டீச்சர்த்தனம்’ வந்து ஒட்டிக்கொண்டு விடுகிறது. பிளாஸ்பேக் காட்சிகளில் கொஞ்ச நேரமே வந்தாலும் உருக்கமான நடிப்பால் நம் மனதில் பதிந்து விடுகிறார் ஜனனி ஐயர். அவருக்கான காட்சிகளை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கி இருக்கலாம்.
திகில் படத்தில் காமெடி என்பது கஷ்டமான ஒன்று. ஆனாலும் யோகிபாபு படம் முழுக்க அதை சவாலாக ஏற்று, பல இடங்களில் நம்மையறியாமலேயே சிரிக்க வைக்கிறார். வில்லன் குரூப்பில் நாகிநீடு, ராம்ஸ் ஆகியோர் வழக்கம்போல கடந்து செல்கின்றனர்.
ஹாரர் படம் என்பதுடன் லொக்கேஷன் ஊட்டி என்பதால் ஒளிப்பதிவாளர் சரவணன் டபுள் டூட்டி பார்த்திருக்கிறார். பின்னணி இசையில் பல இடங்களில் பயப்படுத்துகிறார். பல ஹாலிவுட் படங்களை பார்த்து தான் காப்பியடித்தேன் என தைரியமாக கூறிய இயக்குனர் சினிஷ், சமீபத்தில் தமிழில் வெளியான ஒரு பேய்ப்படத்தின் மையக்கருவை எடுத்து அந்தப்படத்தைப்போலவே பிளாஸ்பேக்காக வைத்திருக்கிறோம் என்பதை கவனிக்காமல் விட்டுவிட்டாரோ..?
அதேசமயம் இதுவரை வந்த பேய்ப்படங்களில் இல்லாதவாறு அந்த பாதிரியார் கேரக்டரில் ஒரு ட்விஸ்ட் வைத்து, ‘அடடே’ என நம்மை ஆச்சர்யப்படவும் வைக்கிறார் இயக்குனர் சினிஷ். தேவையான அளவுக்கு உங்களை பயப்படுத்தவும், தேவைக்கு அதிகமாகவே உங்களை சிரிக்க வைக்கவும் இந்த ‘பலூன்’ உத்தரவாதம் தருகிறது.