நேர்மையான மத்திய அமைச்சர் ஜெயராம்.. அது பிடிக்காமல் அவர்மீது களங்கம் சுமத்த நினைக்கும் முதலமைச்சர், சிபிஐ அதிகாரியான ஆஷா சரத்திடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கிறார். ஆஷாவும் இதன் ஒரு பகுதியாக ஜெயராமிடம் செகரட்டரியாக வேலைபார்த்த, தனது காதலன் உன்னி முகுந்தனையே சுட்டுக்கொன்ற கொலைக்குற்றத்திற்காக தற்போது சிறையில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அனுஷ்கா மூலம் சில தகவல்களை பெற விரும்புகிறார்.
அதற்காக ரகசிய விசாரணை நடத்த தனது டீமுடன் யாருமே நெருங்க பயப்படும் பாகமதி பங்களாவுக்குள் அனுஷ்காவை அடைத்து வைக்கிறார் ஆஷா சரத். பகலில் விசாரணை நடந்தாலும் இரவில் சில அமானுஷ்ய நிகழ்வுகள் அனுஷ்காவையும் காவலுக்கு வெளியே நிற்கும் இரண்டு போலீஸ்காரர்களையும் அதிரவைக்கின்றன. ஒருகட்டத்தில் அனுஷ்கா மீது ஒரு காலத்தில் ராணியாக வாழ்ந்து தற்கொலை செய்துகொண்ட பாகமதி என்கிற பெண்ணின் ஆவி புகுந்து கொண்டு ஆட்டுவிகிறது.
ஆனால் இதெல்லாம் தங்களை திசைதிருப்ப அனுஷ்கா வேண்டுமென்றே நடத்தும் நாடகம் என நினைக்கிறார் அந்த டீமில் உள்ள போலீஸ் அதிகாரியும் இறந்துபோன உன்னி முகுந்தனின் அண்ணனுமான முரளி ஷர்மா. தனது தம்பியின் மரணத்துக்கு அனுஷ்காவை பழிவாங்க தான் மட்டும் தனியே பாகமதி பங்களாவுக்கு செல்கிறார். ஆனால அங்கே போனதும் அவர் நினைத்ததற்கு மாறாக நடக்கிறது..
அனுஷ்கா ஏன் நேர்மையான தனது காதலனையே சுட்டுக்கொல்ல வேண்டும்..? பாகமதி யார்…? அவளது ஆவி ஏன் அனுஷ்காவை சித்தரவதை செய்கிறது..? உன்னி முகுந்தனின் அண்ணனுக்கு தெரியவந்த உண்மை என்ன..? இந்த நிகழ்வுகளில் ஜெயராமின் பங்கு என்ன என பல கேள்விகளுக்கு கடைசி இருபது நிமிடம் விடை சொல்கிறது.
அனுஷ்கா என்றாலே நூறு சதவீதம் தனது கேரக்டருக்காக மெனக்கெடுபவர் என்பதை இதிலும் நிரூபிக்கிறார். குறிப்பாக பாகமதி பங்களா சம்பந்தப்பட்ட காட்சிகளில் மிரட்டலான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். அனுஷ்காவின் காதலனாக வரும் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கும் நிறைவான கேரக்டர். மத்திய மந்திரியாக அலட்டல் இல்லாத நடிப்பு ஜெயராமுடையது. கதையின் திருப்பத்திற்கு வித்திடுபவரும் அவரே.
பாபநாசம் படத்திற்குப்பின் அதேபோன்று சிபிஐ அதிகாரியாக தனது கேரக்டரில் மிடுக்கு காட்டியுள்ளார் நடிகை ஆஷா சரத். அவருடன் கூடவே வரும் போலீஸ் அதிகாரியான முரளி ஷர்மாவுக்கு நியாயமான கேரக்டர்.. நியாயமான நடிப்பை வழங்கியுள்ளார்.
படத்தில் பாகமதி பங்களா சம்பந்தப்பட்ட த்ரில்லிங் காட்சிகள் அருமையாக படமாக்கப்பட்டுள்ளன தமனின் பின்னணி இசை ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை நம்மை பயத்திலேயே வைத்திருகிறது. மதியின் ஒளிப்பதிவும் ஆர்ட் டைரக்டரின் பங்களிப்பும் பிரமிக்க வைக்கின்றன.
ஹாரர் படங்களுக்கான வழக்கமான கிளிஷேக்கள் இருந்தாலும் கூட, பாகமதி எபிசோடில் திகிலுடனும் மற்றும் புறக்கதையில் சில திருப்பங்களுடன் தொடர்வதும் என ஹாரர த்ரில்லர் படங்களிலேயே கொஞ்சம் மாற்றி யோசித்திருக்கிறார் இயக்குனர் அசோக்..