பிகில் – விமர்சனம்


தலைநகர் சென்னையின் மையப்பகுதியில் ஒரு கல்லூரி அமைந்துள்ளது. அந்தக் கல்லூரியை இடிக்க நினைக்கும் அமைச்சர், அதற்குப் பதிலாக அரக்கோணம் அருகில் புதிய கல்லூரி கட்டித் தருவதாக கூறுகிறார். இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுகிறது. மாணவாகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தனது அடியாட்கள் மூலம் மாணவர்கள் அடித்து விரட்டுகிறார் அமைச்சர்.

மாணவர்கள் அனைவரும் மைக்கேல் (மகன்-விஜய்) வசிக்கும் பகுதியில் தஞ்சமடைகின்றனர். அங்கு அவர்களை தேடிவருகிறது அமைச்சரின் அடியாட்கள் அடங்கிய கும்பல். அவர்களை அடித்து துவம்சம் செய்து விரட்டுகிறார் விஜய். இதனால் பயந்து போன அமைச்சர் கல்லூரியை இடிக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்குகிறார்.

இந்நிலையில் நாயகி நயன்தாராவுக்கு திருமண ஏற்பாடுகளை செய்கிறார் தந்தை ஞானசம்பந்தன். ஆனால் நயன்தாரோவோ, விஜயைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி திருமணத்தை நிறுத்தி விடுகிறார்.

இது ஒரு புறமிருக்க, தமிழ்நாடு பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளரான கதிரை, வில்லன் டேனியல் பாலாஜி கத்தியால் கழுத்தில் குத்தி விடுகிறார். டேனியல் பாலாஜி ஏற்கனவே விஜய்யின் எதிரி ஆவார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் கதிர்.

பயிற்சியாளர் இல்லாததால் தமிழ்நாடு கால்பந்தாட்ட அணி முக்கியமான போட்டியில் பங்கேற்க இயலாத ஒரு சூழல் உருவாகிறது. இந்த அணியில், ரெபா மோனிகா, இந்துஜா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட வீராங்கனைகள் உள்ளனர்.

தமிழ்நாடு கால்பந்தாட்ட அணியை எப்படியாவது போட்டியில் பங்கேற்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார் மருத்துவமனையில் உள்ள கதிர். அவர் விஜயை பயிற்சியாளராக ஆக்கலாம் என்று கூற, அணியின் மேலாளரோ ஒரு ரவுடியை எப்படி பயிற்சியாளராக ஆக்குவது என்று கேட்கிறார்.

இப்போது ஆரம்பிக்கிறது பிகிலின் பிளாஷ்பேக்.

ராயப்பன் (தந்தை விஜய்) ராயபுரம் பகுதியையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அவரின் மகன் தான் பிகில். அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு தொந்தரவுகளை தரும் டேனியல் பாலாஜியின் தந்தையை தட்டிக் கேட்கிறார் ராயப்பன். இதனால் ராயப்பன் மீது பகை கொண்டு அவரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டி தக்க சமயத்திற்காக காத்திருக்கிறார் டேனியல் பாலாஜியின் தந்தை.

தன்னைபோல் தனது மகனும் ரவுடி ஆகிவிடக்கூடாது என என்னும் ராயப்பன், பிகிலை கால்பந்தாட்ட வீரனாக மாற்ற வேண்டும் என தீர்க்கமாக உள்ளார்.

“இந்த விளையாட்டால தான் நம் அடையாளங்கள் மாறும்” என மகனுக்கு அறிவுரை கூறுகிறார் தந்தை ராயப்பன். மகன் பிகிலும் கால்பந்தாட்டத்தில் கவனம் செலுத்தி படிப்படியாக முன்னேறுகிறார். பிகிலுக்கு இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கிறது.

இதற்காக பிகில் டெல்லி புறப்படும் வேளையில், ராயப்பனை டேனியல் பாலாஜியின் தந்தை கொன்றுவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பிகில், டேனியல் பாலாஜியின் தந்தையை கொன்றுவிடுகிறார். தந்தை இறந்ததால், ராயபுரம் மக்களை பாதுகாக்க வேண்டும் என பிகில் முடிவெடுக்கிறார். இதனால் பிகில் கால்பந்து விளையாட முடியாமல் போகிறது. பின்னர் மைக்கேலாக வாழ்ந்து வருகிறார்.

விஜய்யின் பின்னணியை கதிர் மூலம் தெரிந்து கொண்ட அணியின் மேலாளர் விஜய்யை பயிற்சியாளராக நியமிக்கிறார். ஆனால் ரவுடி எப்படி பயிற்சியாளராக ஆக முடியும் என்று கூறி கால்பந்தாட்ட வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்திய கால்பந்து அசோசியேசன் தலைவராக இருக்கும் ஜாக்கி ஷெராப், தமிழக கால்பந்தாட்ட அணிக்கு பல்வேறு தொல்லைகளைத் தருகிறார்.

இந்தத் தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து விஜய், பெண்கள் கால்பந்தாட்ட அணியை வெற்றி பெற வைத்தாரா? தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றினரா? என்பதை அட்டகாசமான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார் அட்லி.

தந்தை மற்றும் மகன் கதாபாத்திரங்களில் விஜய் வாழ்ந்திருக்கிறார். இரு கதாபாத்திரங்களுக்கும் தகுந்தாற் போல் அவர் காட்டியிருக்கும் உடல் மொழி, நடை போன்றவை அசத்தல்.

ஆக்ஷன் காட்சிகள் படத்திற்கு மாஸாக அமைந்துள்ளன. அதுவும் இடைவேளைக்கு முன்னர் இரயில் நிலையத்தில் நடக்கும் சண்டைக் காட்சி ரசிகர்களுக்கு ஆக்ஷன் விருந்து.

செண்டிமெண்ட் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி முத்திரை பதித்துள்ளார் விஜய்.

கதாநாயகி நயன்தாரா, பெண்கள் அணியினருக்கு பிசியோதெரபிஸ்டாக வருகிறார். அவருடைய கதாபாத்திரத்திற்கு நயன்தாரா கனகச்சிதமாக பொருந்துகிறார். வில்லன்கள் டேனியில் பாலாஜி மற்றும் ஜாக்கி ஷெராப் தங்களது வில்லத்தனத்தால் மிரட்டுகின்றனர்.

யோகிபாபு, விவேக், கதிர், ஆனந்தராஜ், சவுந்தரராஜா என அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். கால்பந்தாட்ட வீராங்கனைகளாக வரும் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா என ஒவ்வொருவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.

படத்திற்கு மேலும் வலு சேர்த்திருப்பது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை. பாடல்கள் ஏற்கனவே ஹிட்டான நிலையில், பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. விஜய் வரும்போது ஒலிக்கும் பின்னணி இசைக்கு தியேட்டரே அதிர்கிறது.

மொத்தத்தில் பிகில் தீபாவளி சரவெடி.