பிருந்தாவனம் – விமர்சனம்


இயக்குனர் ராதாமோகனின் படங்கள் எப்போதுமே உணர்வுப்பூர்வமானவை.. அதிலும் அவரது பேவரைட் ஏரியாவான சினிமா பின்னணியில் நடிகன்-ரசிகன் என்கிற கதைக்களத்தில் இந்த ‘பிருந்தாவனம்’ படத்தை கொடுத்திருக்கிறார். பிருந்தாவனம் நம் மனதில் பூ பூக்க வைக்கிறதா..? பார்ப்போம்..

வாய் பேசமுடியாத, காதுகேளாத அருள்நிதி, அநாதை காப்பகத்தில் வளர்ந்தவர். எம்.எஸ்.பாஸ்கரின் ஆதரவுடன் ஊட்டியில் சலூன் கடையில் வேலை பார்க்கும் அருள்நிதிக்கு கூடவே வேலை பார்க்கும் டவுட் செந்தில் தான் நண்பன்.. விவேக் படங்கள், வரத்து காமெடிதான் அருள்நிதியின் உலகம். இன்னொரு பக்கம் அருள்நிதியை துரத்தி துரத்தி காதலிக்கிறார் பணக்கார பெண் தான்யா..

ஒருமுறை விடுமுறையில் ஊட்டிக்கு வரும் நடிகர் விவேக்கிற்கு ஏதேச்சையாக உதவும் வாய்ப்பு அருள்நிதிக்கு கிடைக்கிறது. அருள்நிதியின் குணங்களால் ஈர்க்கப்பட்டு அவருடன் நட்பாகிறார் விவேக். கூடவே டவுட் செந்திலுக்கும் தான்யாவுக்கும் இவர்களின் நட்பு தெரிய வந்து அவர்களுக்கும் விவேக்குடன் நட்பாகிறார்கள்..

தான்யா தனது காதலை அருள்நிதியிடம் வெளிப்படுத்த விவேக்கிடம் உதவி கேட்கிறார்.. ஆனால் விவேக் அதை சொன்னதும், அருள்நிதி அதை மறுத்து விடுகிறார்.. அதன் பின்னணியில் மனதை வலிக்க செய்யும் நுட்பமான வலி ஒன்று அருல்நிதியிடம் இருப்பது தெரியுஅ வருகிறது..

அது என்ன என்பதை விவேக்கால் கண்டுபிடிக்க முடிந்ததா, அருள்நிதி-தான்யா காதலை சேர்த்துவைக்க முடிந்ததா என்பதுதான் மீதிக்கதை].

ஒரு ரசிகனின் வாழ்வில் நுழைந்த ஹீரோ என்கிற ஒன்லைனை வைத்துக்கொண்டு அழகான திரைக்கதையால் பூமாலை தொடுத்திருக்கிறார் இயக்குனர் ராதா மோகன். வாய் பேசாத, காதுகேளாதவராக நடிப்பில் மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்திருக்கிறார் அருள்நிதி.. தன்னைப்பற்றிய உண்மை தெரிந்து மற்றவர்கள் முன் கூனிக்குறுகி நிற்கும் காட்சிகளில் அருள்நிதி அந்த ‘கண்ணன்’ கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.

ஆரம்ப காட்சியில் அறிமுகமாவதில் இருந்து க்ளைமாக்ஸ் வரை படத்தின் இன்னொரு ஹீரோவாகவே வருகிறார் விவேக்.. அதிலும் நடிகர் விவேக்காகவே அவர் வரும்படி அவரது கேரக்டரை அமைத்திருந்தாலும் கூட, படத்தின் காமெடி காட்சிகளில் அதுவே பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துவிடுகிறது.. நீண்ட நாட்கள் கழித்து விவேக் புல் பார்முக்கு திரும்பியுள்ளதோடு, கூடவே குணச்சித்திர நடிப்பிலும் நெகிழ வைத்திருக்கிறார்.

கதாநாயகி தான்யா வெகு இயல்பாக தனது கேரக்டரை பிரதிபலித்திருக்கிறார் தான்யா.. அந்த அளவுக்கு அழகாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் ராதாமோகன். தான்யா படத்திற்கு இன்னொரு பிளஸ் பாயின்ட் தான். இன்னொரு காமெடியனாக படம் முழுக்க வரும் ‘டவுட்’ செந்தில் தனது எதிர்கால வாய்ப்புகள் இந்தப்படத்தில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்து பல காட்சிகளில் அதை தனது நகைச்சுவை நடிப்பால் வெளிப்படுத்தவும் செய்கிறார்..

எம்.எஸ்.பாஸ்கரிடம் இருக்கும் ஆத்மார்த்தமான கலைஞனை எப்போதும் அழகியலோடு காட்டுவது ராதாமோகனுக்கு மட்டுமே கைவந்த கலை.. இந்தப்படத்திலும் நம்மை நெகிழ வைக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்.. அதிலும் விவேக்கை யாரென கேட்பதும், தான்யாவிடம் அருள்நிதி பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதும் ‘நச்’. பஞ்சு சுப்பு, செல் முருகன் என மற்ற கதாபாத்திரங்கள் சிரிக்கவும் நெகிழவும் வைக்கிறார்கள்..

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை நெகிழ்ச்சியான காட்சிகளில் நம் மனதை பிசைகிறது. ஊட்டியே அழகு. அதை எம்.எஸ்.விவேக் ஆனந்தின் கேமரா இன்னும் கவித்துமாக படமாக்கி இருக்கிறது. ஒரு சாதாரண இளைஞனின் வாழக்கை, ஒரு சினிமா நடிகரால் எப்படி மாறுகிறது என்பதை எந்தவித செயற்கை பூச்சும் இல்லாமல் இயல்பாகவே படமாக்கியுள்ளார்

ராதாமோகன். அருள்நிதியின் தொழிலுக்கு விவேக் தானே பணம் கொடுத்து உதவி செய்திருக்க முடியும் என்றாலும், அப்படி செய்யாமல் வங்கிக்கடனுக்காக அருள்நிதிக்கு ஜாமீன் போடும் ஒரு காட்சி அதற்கு ஒரு சாம்பிள்.. காதலை ஏற்க மறுக்கும் அருள்நிதியின் பயம் அவர் பக்கத்தில் இருந்து பார்க்கும்போது நியாயமானதுதான் என்கிற விதமாகவும் பின் மற்றவர்கள் பார்வையில் அதை உடைப்பதையும் ராதாமோகன் தெளிவாக கையாண்டு இருக்கிறார்.

படத்தில் அனைவருமே பாசிடிவ் கேரக்டர்களாக வலம் வருவது புதிய உணர்வை தருகிறது.. குடும்பத்துடன் பார்க்கும் ஒரு படமாக அழகியலுடன் இந்த பிருந்தாவனத்தை உருவாக்கியுள்ள இயக்குனர் ராதாமோகனுக்கு பாராட்டுக்கள் பல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *