சுதந்திர தினத்தன்று சென்னையில் ஒரு குறிப்பிட்ட மூன்று பகுதிகளில் 5௦ வீடுகளில் அடுத்தடுத்து கொளையடிக்கின்றனர் முகமூடி திருடர்கள். அதில் ராணுவத்தில் பணியாற்றும் விஷாலின் வீடும் ஒன்று. விஷாலின் குடும்ப கவுரவத்தின் அடையாளமாக நினைக்கும் பரம் வீர் சக்ரா விருது மெடலையும் எடுத்து செல்கின்றனர். இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியான தனது காதலி ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு உதவியாக இணைந்துகொண்டு அந்த மெடலை மீட்பதற்காக துப்பு துலக்குகிறார் விஷால்.
இந்த கொள்ளைக்கு பின்னால் இரண்டு இளைஞர்கள் இருப்பதும், அவர்களை இயக்குவது ஒரு இளம் பெண்ணான ரெஜினா என்பதும் தெரியவருகிறது. ஒரு பெண் எதற்காக கொள்ளைக்காரியாக மாறினாள், விஷால் தனது குடும்பத்தின் பொக்கிஷமான தந்தையின் விருது மெடலை ரெஜினாவிடம் இருந்து மீட்டாரா என்பது மீதிக்கதை.
விஷாலுக்கு வழக்கம்போல துடிப்பான, போர்க்குணம் கொண்ட, அநியாயத்தை தட்டிக்கேட்கின்ற இளைஞன் கதாபாத்திரம். குறைவின்றி செய்திருக்கிறார். பல இடங்களில் அதிரடி சாகசம் செய்யாமல், மூளையை பயன்படுத்தும் கதாபாத்திரமாக, இதில் கொஞ்சம் அடக்கியே வாசித்துள்ளார். தனது காதலியை காப்பாற்றுவதற்காக மருத்துவமனையில் போலீஸ்காரரை அவர் பயன்படுத்தும் விதமும், திருட்டு போன பைக்கை உடனடியாக கண்டுபிடிக்க அவர் கையாளும் டெக்னிக்கும் ‘வல்லரசு’ விஜயகாந்த் லெவல்.. இதேபோன்று இன்னும் இரண்டு படங்கள் நடித்தால், போட்டியே இல்லாமல், சினிமாவில் அடுத்த விஜயகாந்த் இடத்தை பிடித்து விடுவார் விஷால்.
ரெண்டு காட்சிகளில் மட்டுமே யூனிபார்ம், மற்ற நேரங்களில் எல்லாம் மப்டி என விறைப்பும் வீராப்புமான போலீஸ் அதிகாரியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் கெத்து காட்டுகிறார். விஷாலுக்கு இணையாக யோசிக்க விடாமல்மல், விஷாலின் யோசனைகளை விமர்சிக்கும் விதமாக இவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருப்பதுதான் மைனஸ்.
ஒரு புது முயற்சியாக, வில்லியாக ரெஜினாவை மாற்றியுள்ளார்கள். அவர் செய்யும் வில்லித்தனம் ஓகே என்றாலும், அதை வெளிப்படுத்தும் விதம் செயற்கையாகவே இருக்கிறது. காமெடி என்கிற பெயரில் கான்ஸ்டபிள் ரோபோ சங்கர் நேரங்காலம் தெரியாமல் கடுப்பேற்றுகிறார். அவருக்கான சரியான வசனங்களை உருவாக்காத, அவரை சரியாக பயன்படுத்தாத இயக்குனரைத்தான் குறை சொல்ல வேண்டும்.. நீண்டநாளைக்கு பிறகு கே.ஆர்.விஜயா.. வழக்கம்போல பாந்தமான நடிப்பு.
யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையால் படத்திற்கு வலு கூட்டியுள்ளார். அதேசமயம் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியனின் கேமராவுக்கு மிகப்பெரிய வேலைகள் எல்லாம் கொடுக்கப்படவில்லை.
வெறும் கொள்ளையர்களாக இல்லாமல் டெக்னாலஜியை பயன்படுத்தி கொளையடிக்கும் ரெஜினா, அதை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் சிம்பிளாக கொள்ளையடிக்காமல், வீடுகளுக்கே ஆளனுப்பி இவ்வளவு ரிஸ்க் எடுத்து கொள்ளையடிக்க வேண்டுமா என்ன..? அதேபோல ரெஜினா என்ன யோசிப்பார் என விஷால் முன்கூட்டியே யூகிப்பது எல்லாம் சரியான சினிமாத்தானம். அதேசமயம் மக்களுக்கு இலவசமாக சேவை செய்கிறோம் என்கிற பெயரில் உருவாக்கப்படும் செயலிகள் எந்தவிதமாக மக்களின் தகவல்களை திருட உதவுகின்றன என்பதை வெளிச்சம் போட்டு காட்டியதற்காக இயக்குனர் ஆனந்தனை பாராட்டலாம். இருந்தாலும் இரும்புத்திரை போல இன்னொருமுறை பிரியாணி விருந்தை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு சாம்பார் சாதம் போட்டு ஏமாற்றியுள்ளார் இயக்குனர் இயக்குனர் ஆனந்தன்.