சார்லி சாப்ளின்-2 ; விமர்சனம்


பத்து வருடங்களுக்கு முன் வந்து ஹிட்டடித்த சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்தப்படம்.

நமக்கு நெருங்கிய ஒருவர் மீது திடீரென யாரோ ஒருவர் சொன்னதை கேட்டு ஒரு சந்தேகம் தோன்ற, அவரிடம் அதை கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளாமல் நாமாகவே ஒன்றை நினைத்துக்கொண்டு நேரில் கேட்க மனம் வராமல் ஒரு கடிதமாக அல்லது போன் மெசேஜ் நமது கோபத்தை வார்த்தைகளால் வடித்து அனுப்பி விடுவோம்..

ஆனால் அவர்மீது தவறில்லை என அடுத்த நிமிடமே நமக்கு தெரியவரும்போது அப்படி நாம் அனுப்பிய மெசேஜை அவர் பார்த்துவிடக் கூடாது என ஒரு பதைபதைப்பு வருமே.. அப்படி அவருக்கு தெரிந்துவிட்டால் என்ன நடக்கும் என்கிற டென்ஷன் இருக்குமே.. அதுதான் இந்த சார்லி சாப்ளின்-2 படத்தில் மையக்கரு.

இப்படி ஒரு வேலையைத்தான் பிரபுதேவா, தனது நண்பன் விவேக் பிரசன்னாவின் பேச்சை கேட்டு, தனது காதலி நிக்கி கல்ராணியை சந்தேகப்பட்டு அவரையும் அவரது குடும்பத்தையும் சகட்டு மேனிக்கு திட்டி அப்படி ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புகிறார். இத்தனைக்கும் நாளை மறுநாள் இருவருக்கும் திருப்பதி கோவிலில் திருமணம் நடைபெற இருக்கிறது

இந்த நிலையில் நிகி மீது தவறு இல்லை என தெரிந்த பின்பு, அவர் அந்த மெசேஜை பார்க்கவில்லை என்பதும் தெரிந்த பின்பு, அதை அவரது போனை கைப்பற்றி மெசேஜை அழிப்பதற்கு அவரைத் தேடி பறக்கிறார்.

நிக்கி கல்ராணி அந்த மெசேஜை பார்த்தாரா..? அப்படி பார்ப்பதற்குள் என்ன குழப்பங்கள் நடந்தன..? அப்படி பார்த்து விட்டார் என்றால் அதன் பின்பு என்னென்ன சங்கடங்கள் நடந்தன என்பதற்கு மீதி கதை விடை சொல்கிறது

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.. அவசரப்பட்டு எதையும் செய்யாதே என்கிற ஒன்லைனை எடுத்துக்கொண்டு முழுநீள காமெடி தோரணமாக தொங்கவிட முயற்சி செய்துள்ளார்கள். மிகப்பெரிய நகைச்சுவை பட்டாளம் என எதுவும் இல்லாமல் பிரபுதேவாவையும் விவேக் பிரசன்னாவையும் மட்டுமே வைத்து காட்சிகளை அழகாக சமாளித்துள்ளார் இயக்குனர்..

பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நகைச்சுவையான நடிப்பை பிரபுதேவாவிடம் பார்க்க முடிகிறது. உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம் தான்.. குறிப்பாக பெயர் மாறாட்ட காமெடியில் செமையாக கலாட்டா செய்துள்ளார் பிரபுதேவா..

அவருக்கு ஏற்ற வகையில் காமெடியிலும் கவர்ச்சியிலும் ஈடுகொடுத்து நடித்திருக்கிறார் நாயகி நிக்கி கல்ராணி. அவர் ஒருத்தர் போதாதென்று கூடவே அதா சர்மா என்பவர் இறக்கிவிட்டு கவர்ச்சியில் அதகளம் பண்ண வைத்திருக்கிறார்கள்.

இவர்களுக்கெல்லாம் டப் கொடுக்கும் வகையில் இளைய திலகம் பிரபு தன் பங்கிற்கு ஜமாய்த்திருக்கிறார். சின்ன சின்ன வில்லன் ரோல் பண்ணிக்கொண்டிருந்த விவேக் பிரசன்னாவை காமெடிக்கு ரூட் மாற்றி விட்டுள்ளது இந்த படம்.. அதுவும் அவருக்கு செட்டாகவே செய்கிறது
தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கோலிசோடா சீதா, பிரபுதேவாவின் நண்பனாக வரும் அரவிந்த் ஆகாஷ், தோழியாக வரும் இந்த கலக்கல் பார்ட்டி, சில் காட்சிகளே வந்தாலும் பட்டைய கிளப்பும் ரவிமரியா உள்ளிட்ட பலரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஏற்கனவே அம்ரேஷின் இசையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் திரையில் பார்க்கும்போது எழுந்து ஆட தோன்றுகிறது படத்திற்கு மிகப்பெரிய பலம் இந்தப்பாடல்.

பிரபுதேவா நிக்கி கல்ராணிக்கு அனுப்பிய மெசேஜை அவர் பார்த்து விடுவாரா, இல்லை பிரபுதேவா அதை கைப்பற்றி அழித்து விடுவாரா என காட்சிக்கு காட்சி ஒருவித பரபரப்பை ஏற்றிக்கொண்டே சென்றுள்ளார் இயக்குனர் சக்தி சிதம்பரம்.

மேலும் காதலிப்பவர்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் நம்ப வேண்டும்.. காதலில் சந்தேகம் என்பது இருக்கக்கூடாது.. அப்படியே இருந்தாலும் கேட்டுத் தெளிவு பெறவேண்டும் என்பதை அழகான ஒரு மெசேஜ் ஆக சொல்லி கலகலப்பாக அனுப்பி வைக்கிறார் இயக்குனர் சக்தி சிதம்பரம்