ஒன்பது வருடத்திற்கு முன் வெளியான சென்னை-28 படம் தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்ட் செட்டர் ஆனது.. அதன்மூலம் ஒரு மாஸ் இயக்குனரும் மக்களின் மனதில் நன்கு பதிந்த நான்கைந்து மினிமம் கியாரண்டி ஹீரோக்களும் தமிழ்சினிமாவுக்கு கிடைத்தது வரலாறு.. தற்போது அதே டீமை வைத்து அந்தப்படத்தின் இரண்டாவது இன்னிங்சை ஆடியிருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.
முதல் பாகத்தில் இருந்த நண்பர்களில் பலரும் பெரும்பாலும் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிடுகின்றனர்.. அவர்களில் அரவிந்த் ஆகாஷ் கிரிக்கெட் பரிசுப்பணத்தை எடுத்துக்கொண்டு காதலியுடன் தலைமறைவானவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.. பிரேம்ஜிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.. தன்னுடன் வேலை பார்க்கும் சனா அல்தாப்பை ஐந்து வருடங்களாக காதலித்து வருகிறார் ஜெய். கிட்டத்தட்ட கிரிக்கெட்டையே மறந்து விட்டார்கள்.
இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள சனாவின் கிராமத்தில் ஜெய்-சனா திருமணம் நடைபெற முடிவு செய்யப்படுகிறது.. நண்பர்கள் அனைவரும் திருமணத்திற்காக தேனிக்கு புறப்படுகின்றனர்.. போன இடத்தில்தான், சில வருடங்களுக்கு முன் பணத்துடன் தலைமறைவான அரவிந்த் ஆகாஷ் அங்கிருப்பதை கண்டுபிடிக்கின்றனர்.
அவர் உள்ளூரில் ஒரு கிரிக்கெட் டீமை மெயிண்டன் பண்ணுவதும் அவருக்கு போட்டியாக உள்ளூர் பிஸ்தாவான வைபவ் குடைச்சல் கொடுப்பதும் தெரிய வருகிறது. அரவிந்த் கெஞ்சினார் என்பதற்காக உள்ளூரில் நடக்கும் இரண்டு போட்டிகளில் கலந்துகொள்ள சம்மதிகிறார்கள் நண்பர்கள். முதல் போட்டியில் வெற்றியும் பெறுகிறார்கள்.
ஆனால் இவர்களை அடுத்த போட்டியில் வெற்றிபெற விடாமல் தடுக்க குயுக்தியாக யோசிக்கும் வைபவ், ஒரு ஆட்டக்காரி சொப்பனசுந்தரியான மனீஷா யாதவை இந்த டீமுடன் ஆடிப்பாட வைத்து, ஜெய்யுடன் அவர் நெருக்கமாக இருப்பது போன்று போட்டாவாக எடுத்து, அதை வைத்து மிரட்டுகிறார்.. வேறு வழியின்றி இந்த டீமும் மிரட்டலுக்கு பணிந்து வெற்றியை விட்டுக்கொடுக்கிறது. ஆனாலும் வைபவின் நண்பன் அபிநய் மூலம் அந்த போட்டோக்கள் ஊர் முழுவதும் பரவ, ஒரே களேபரமாகி ஜெய்யின் திருமணம் நின்று விடுகிறது.
கல்யாண் கோஷ்டி சோகத்துடன் ஊரைவிட்டு கிளம்புகிறது. சென்னை திரும்பியதும் அவரவர் மனைவியின் டார்ச்சர்களால் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் பிரிகிறார்கள். இவர்களது நலம் விரும்பியான சலூன் கடை இளவரசுவும் பிரேம்ஜியும் இவர்களை ஒன்றிணைத்து, மீண்டும் ஜெய்யின் திருமணத்தை முயற்சி எடுக்கிறார்கள்..
நண்பர்கள் அனைவரும் வீட்டிற்கு தெரியாமல் ஒன்று சேர்ந்து மீண்டும் தேனிக்கு கிளம்புகிறார்கள். அங்கு மீண்டும் ஒரு கிரிக்கெட் மேட்ச் அவர்களை வரவேற்கிறது.. கூட சிக்கலும்.. அந்த மேட்ச்சையாவது வெற்றிகரமாக ஆடினார்களா, ஜெய்யின் திருமணத்தை நடத்தினார்களா என்பது க்ளைமாக்ஸ்.
முதல் பாகத்தில் சென்னை.. இதில் தேனி மாவட்ட கிராமம்.. அவ்வளவுதான் வித்தியாசம்.. ஆனால் முதல் பாகத்தில் இருந்த அதே கேலி, ஜாலி கிண்டல், கலாட்டா, கோபம், நட்பு, காரம் என எதிலுமே கொஞ்சம் கூட குறை வைக்காமல் சுவையான பிரியாணி கிளறியிருக்கிறார் வெங்கட் பிரபு..
ஜெய் முகத்திலும் நடிப்பிலும் முன்னைவிட பக்குவம் தெரிகிறது… சிவாவின் கவுண்டர்கள் வழக்கம்போல பவுன்சர்களாக ரசிகர்களை அட்டாக் பண்ணி சிரிக்க வைக்கின்றன… அழுகுணி அரவிந்த் ஆகாஷும், பிதாமகன் விக்ரம் கெட்டப்பில் வரும் மஹத்தும் ரசிக்க வைக்கிறார்கள். நிதின் சத்யா, இனிகோ பிரபாகர், விஜய் வசந்த், பிரேம்ஜி உள்ளிட்ட மற்ற யாருமே சோடை போகவில்லை.
கதாநாயகியாக சனா அல்தாப்.. கேரளத்து வரவு.. கலையான முகத்துடன் நன்றாக நடிக்கவும் செய்துள்ளார். விஜயலட்சுமி உள்ளிட்ட நண்பர்களின் மனைவிகள் அனைவருமே படபட பட்டாசாக பொரிவது ஜாலி காலாட்டா. இந்த டீமில் புதிதாக நுழைந்துள்ள வைபவ் ஜாலியான வில்லனாக மிரட்டி இருக்கிறார்.
இடைவேளைக்குப்பின் என்ட்ரி ஆகும் இளவரசு, ஒரு கட்டத்தில் அமைச்சர் உதவியுடன் நண்பர்கள் டீமை காப்பற்றுவது சூப்பர் ஐடியா. படவா கோபி மற்றும் உள்ளூர் கிரிக்கெட் வர்ணனையாளர் இருவரும் கிரிக்கெட் விளையாட்டை ஜாலியாக கண்டுகளிக்க உதவி இருக்கின்றனர். சனாவின் மாமாவாக வரும் சுப்பு பஞ்சு காமெடி கலந்த வீரத்தனம் காட்டுகிறார்.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கின்றன. க்ளைமாக்ஸில் முதல் பாகத்தில் வந்த பழைய குட்டிப்பையன்கள் டீமை களமிறக்கி ட்விஸ்ட் அடித்திருப்பது உண்மையிலேயே புதுமையான யுக்தி. மேட்ச்சில் எந்த விறுவிறுப்பும் குறையாமல் பார்த்துக்கொண்டதிலேயே படத்தின் வெற்றி உறுதியாகிவிடுகிறது.
இந்த இரண்டாவது இன்னிங்ஸின் மூலம் மீண்டும் ஒரு இமாலய சிக்ஸர் அடித்திருக்கிறார் வெங்கட் பிரபு..