தொன்னூறுகளில் பள்ளியில் படிக்கும் ஜெயம் ரவி தனது காதலை சக மாணவி சம்யுக்தாவிடம் சொல்வதற்காக பரிசுடன் செல்கிறார். அந்தப்பரிசு ரவுடி கே.எஸ்.ரவிகுமாரிடம் செல்ல, அதை கைப்பற்றும் முயற்சியில் விபத்தில் சிக்கி கோமாவுக்கு செல்கிறார் ஜெயம் ரவி.. 16 வருடங்கள் கழித்து சுயநினைவுக்கு திரும்பும் அவருக்கு கடன் பிரச்சனை தலைக்கு மேல் நிற்பது தெரிய வருகிறது..
இத்தனை வருடங்களில் புதிதாக மாறிவிட்ட உலகத்தை எதிர்கொள்வதற்கு தடுமாறும் ஜெயம் ரவிக்கு, தன்னிடம் இருந்து சிலை பறிபோன விஷயமும் அது தற்போது கோடிக்கணக்கில் விலைபோகும் பொருள் என்றும் தெரிய வருகிறது.. அது தற்போது எம்.எல்.ஏவக இருக்கும் கே.எஸ்.ரவிகுமார் வசம் இருப்பது தெரியவருகிறது. நண்பன் யோகிபாபுவுடன் சேர்ந்து அந்த சிலையை திருடி, தனது கடனை எல்லாம் செட்டில் செய்ய நினைக்கிறார் ஜெயம் ரவி.. அவரால் அது முடிந்ததா..? இறுதியில் என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்.,
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி இரண்டு காலகட்டங்களுக்கு ஏற்றார் போல் திறமையாக நடித்திருக்கிறார். 90ஸ் கிட்ஸ்சாக சிறுவயதில் தொலைத்த பல்வேறு விஷயங்களை தற்போது தேடி அலையும் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்.
நாயகிகளாக நடித்திருக்கும் காஜல் அகர்வால், மற்றும் சம்யுக்தா ஹெக்டே இருவரும் அழகு பதுமையாக வந்தாலும் ஜெயம் ரவி- காஜலுக்கான காதல் காட்சிகளில் எந்த ஈர்ப்பும் புதுமையும் இல்லை. பள்ளிப்பருவ சம்யுக்தா ரசிகர்களை ரொம்பவே கவர்கிறார்.
ஜெயம் ரவிக்கு பக்க பலமாக படம் முழுவதுமே நகைச்சுவை கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் கலகலப்பான நடிப்பை அள்ளிக் கொடுத்துள்ளார் யோகிபாபு. குறிப்பாக இவர் கொடுக்கும் ஒன்லைன் கவுண்டர்கள் எல்லாமே சிரிப்பு சரவெடி. சில காட்சிகளே வந்தாலும் கே.எஸ்.ரவிகுமார் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.
ஹிப்ஹாப் ஆதி பல வருடங்களாக போட்டுக்கொண்டிருக்கும் அதே இசை. இன்னும் எத்தனை ஆண்டுகள் என்பது தெரியவில்லை. க்ளைமாக்ஸ் சென்னை வெல்ல காட்சி வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று என்றாலும் அதை படமாக்கிய விதம் பிரமிக்க வைக்கிறது.
பல இடங்களில் இரட்டை அர்த்த வசனம் தேவை தானா? என்கிற கேள்வியும் எழுகிறது. எல்லாம் மாறினாலும் எமோஷன் மாறாது, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிமையான நாம் பக்கத்திலிருக்கும் உறவுகளுக்கான முக்கியத்துவத்தைக் கொடுப்பதில்லை, பிரச்சினையின் போது மட்டும் சேராமல் எப்போதும் சேர்ந்தே இருப்போம் என இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். இந்தப்படத்தில் சொல்லியிருக்கும் கருத்து வரவேற்க தக்கதுதான்.