தேவராட்டம் – விமர்சனம்


பெற்றோரை இழந்த நிலையில் அக்கா வினோதினியின் அரவணைப்பில் ஆறுக்கு பெண்களுக்கு தம்பியாக வளர்கிறார் கௌதம் கார்த்திக். வக்கீலுக்கு படித்து இருந்தாலும் அநியாயம் நடப்பதை கண்டால் ருத்ரமூர்த்தி ஆகிவிடுவார். உள்ளூர் பணக்காரரின் மகன் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையோடு விளையாட, அவனுக்கு கோர்ட்டு மூலம் தண்டனை வாங்கித்தர கௌதம் முயற்சிக்கிறார். ஆனால் மதுரை ரவுடி பெப்ஸி விஜயனின் மகன் அவனுக்கு அடைக்கலம் தருகிறார். இதனால் ஏற்படும் மோதலில் இந்த இரண்டு பேரையுமே போட்டுத்தள்ளுகிறார் கௌதம் கார்த்திக்.

மகனே தனது உயிர் என்றும் வாழும் பெப்சி விஜயன் தனது மகனின் காரியம் நடக்கும் 16 ஆம் நாள் கௌதம் கார்த்திக்கின் தலையை எடுப்பதாக சபதம் செய்கிறார். இதனால் கௌதமின் அக்காக்கள் மற்றும் மாமாக்கள் அனைவரும் அவரை பத்திரமாக இருக்கும்படி கொடைக்கானலுக்கு அனுப்பி வைக்கின்றனர்.. அவரை வரவழைக்க இங்கே அவரது குடும்பத்திற்கு குறி வைக்கும் பெப்ஸி விஜயன் தனது சபதத்தை நிறைவேற்றினாரா..? அவரிடம் இருந்து தப்புவதற்காக, குடும்பத்தை காப்பாற்றுவதற்காக கௌதம் கார்த்திக் என்ன செய்கிறார் என்பது கிளைமாக்ஸ்.

கௌதம் கார்த்திக் ஆக்சன் ஹீரோவாக மாறி இருக்கும் படம் இது. சண்டைக் காட்சிகlளில் சும்மா தெறிக்க விடுகிறார்.. பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமையைக் கண்டு பொங்குகின்ற ஒரு வீரத்தமிழனின் உருவமாகவே நமக்கு தெரிகிறார் கௌதம் கார்த்திக்

கதைக்கு பெரிய திருப்பம் தராவிட்டாலும் நாயகனுக்கு பக்கபலமான ஒரு கதாபாத்திரமாக மஞ்சிமா மோகன் அழகாக பொருந்தியிருக்கிறார்.

ஆறு சகோதரிகளில் மூத்தவராக வரும் வினோதினியும் அவரது கணவராக வரும் போஸ் வெங்கட்டும் கௌதமின் மீது மகன் போன்ற பாசத்தை வெளிப்படுத்தும் காட்சியில் நெகிழ வைக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல அந்த குடும்பத்தில் உள்ள மற்ற சகோதரிகளும் பாசத்தைக் கொட்ட மற்றும் அவர்களது சூரிய சக்தி சரவணன் உள்ளிட்ட மீதி ஐந்து பேரும் காமெடி செண்டிமெண்ட் என இரண்டையும் கலந்து கட்டி அடிக்கிறார்கள்.

கொஞ்ச நேரமே வந்தாலும் வேலராமமூர்த்தி கதாபாத்திரம் செம்மை. மகனுக்காக எந்த அளவுக்கும் இறங்கும் பாசக்கார தந்தையாக பெப்சி விஜயனை வில்லனாக நீண்ட நாளைக்கு பிறகு பார்க்க முடிகிறது.

கதாபாத்திர வடிவமைப்பை பார்க்கும்போது இது இன்னொரு கடைக்குட்டி சிங்கமோ என நினைக்க வைத்தாலும், கதை சொல்லும் விதத்தில் ரூட்டை மாற்றி இருக்கிறார் இயக்குனர் முத்தையா. குறிப்பாக தற்போது தமிழ்நாட்டையே கலக்கிவரும் பாலியல் பலாத்கார கொடூரங்களுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார். அப்படிப்பட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நயவஞ்சகர்களை ஏதாவது செய்ய வேண்டுமே எனத் துடிக்கும் ஒவ்வொருவரின் உணர்வுகளுக்கும் வடிகாலாக இந்தப்படம் இருக்கிறது என்பது மட்டுமே உண்மை இது சாதியை உயர்த்தி பிடிக்கும் படம் என்கிற அடையாளம் எந்த ஒரு இடத்திலும் இல்லை என்பதும் உண்மை