தேவி – விமர்சனம்


இயக்குனர் ஏ.எல்.விஜய் முதன்முறையாக ஹாரர் ஏரியாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார், அதில் பிரபுதேவா நடித்திருக்கிறார் என்பதாலேயே எதிர்பார்புடன் வெளியாகி இருக்கும் படம் தான் ‘தேவி’.

மும்பையில் வேலைபார்க்கும் கோயமுத்தூர்க்காரரான பிரபுதேவுக்கு அல்ட்ரா மாடர்ன் பெண்ணை திருமணம் செய்யவேண்டும் என்பது ஆசை.. ஆனால் ஊரில் சாகக்கிடக்கும் பாட்டியின் விருப்பத்தின்பேரில், அவருக்கு மாடு மேய்க்கும் தமன்னாவை மணம் முடித்து மும்பைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.. திருமண விபரம் நண்பர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக வேறொரு லோக்கல் ஏரியாவில் வீடு மாறுகிறார் பிரபு.

அந்தவீட்டிற்கு வந்த நாளில் இருந்து தமன்னாவின் நடவடிக்கையில் மாற்றங்கள்.. போகப்போகத்தான் அந்த வீட்டில் சினிமா ஆசை நிறைவேறாமல் ஒரு பெண் தற்கொலை செய்து இறந்து போனதும், தற்போது அது தன்னுடைய ஆசையை நிறைவேற்ற தமன்னாவின் உடலை பயன்படுத்துவதும் பிரபுதேவாவுக்கு தெரியவருகிறது.. பேய் புகுந்த தமன்னாவின் நடவடிக்கையால் பிரபல நடிகரான சோனு சூட்டின் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.

ஆர்ப்பாட்டம் பண்ணாத அமைதியான பேயாக இருப்பதால், ஒரு படத்தில் நடித்து முடித்ததும் தமன்னாவை விட்டு விலகிவிட வேண்டும் என பேயிடம் அக்ரிமென்ட் போட்டு, அதன் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கிறார் பிரபுதேவா.. இந்தநிலையில் நடிகையாக உலாவரும் தமன்னா மீது சோனு சூட் காதல் கொண்டு, திருமணம் செய்ய முயற்சிக்கிறார்.. பேயும் ஒரு படத்துடன் தமன்னாவை விட்டு போக மறுக்கிறது.. இந்த இரண்டு சிக்கல்களும் எப்படி முடிவுக்கு வருகிறது என்பதுதான் க்ளைமாக்ஸ்.

பேய்ப்படங்கள் என்றால் கட்டாயம் எல்லோரையும் பயமுறுத்தித்தான் ஆகணுமா என்ன..? அதற்கு நேர்மாறாக அழகான பேய்ப்படம் ஒன்றை எடுத்து ஆச்சர்யப்பட வைத்துள்ளார் ஏ.எல்.விஜய்.. கதாநாயகனாக மீண்டும் அடியெடுத்து வைத்திருக்கும் பிரபுதேவா பத்து வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இன்னும் யூத்தாக மாறியுள்ளார்.

தப்பித்தார் தமன்னா. பின்னே பேய் என்பதற்காக ‘கொடூர முகபாவங்களை காட்டி, கோரமாக முகத்தினை காட்டி’ என எந்த வேலைகளும் இல்லாமல் ஜஸ்ட் லைக் தட் பார்வை, பேச்சாலேயே அந்த வேலையை செய்துவிடுகிறார். கிராமத்துப்பெண், மாடர்ன் கேர்ள் என இரண்டுக்கும் வித்தியாசம் காட்டி நடித்துள்ளார்.

ஒரு ஹீரோ என்கிற அளவிலான கேரக்டரில் வந்துபோவதால் சோனு சூட்டை பற்றி பெரிதாக சொல்லமுடியவில்லை.. பாலாஜியை வைத்து காமெடி வண்டியை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்த முயற்சி செய்திருக்கிறார்கள்.. கொடூர வில்லனாக பார்த்த முரளி ஷர்மாவை இப்பக்கூட காமெடியாக நடிக்கவைக்க முடியுமா என்ன..? ஆச்சர்யம் தான். மந்திரவாதியாக நாசரும் உதவியாளராக சதீஷும் ஒரே காட்சியுடன் தங்களது கடமையை முடித்துக்கொள்கின்றனர். ஆர்.வி.உதயகுமார், மலையாள ஜாய் மேத்யூ ஆகியோரும் உண்டு..

பேய்வீட்டை பேய்வீடு அல்லாத மாதிரி காட்டியதற்காகவே மனுஷன் நந்தனின் ஒளிப்பதிவுக்கு சபாஷ் சொல்லலாம். மற்றபடி பிரபுதேவாவின் ஆட்டத்தில் யாதொரு குறையும் இல்லையென்றாலும் அவரது ஆட்டத்திற்கு தீனி போடும் பாடல்கள் இல்லை என்பதும் உண்மை.

பேய்ப்படங்களில் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு, அதில் சரியான விகிதத்தில் நகைச்சுவையையும் கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் விஜய்.. அதனாலேயே படம் மெதுவாக நகர்வது போன்ற ஒரு உணர்வு.. மேலும் நம்மவர்களுக்கு பேய்ப்படங்களை திகிலுடனேயே பார்த்து பழகி விட்டதால் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதுதான் தெரியவில்லை..

Rating:3/5