ஒரு நாய் பேயாக மாறினால்..? அதுவும் நாய் உருவத்தில் வராமல் ஒரு கார் உருவத்தில் வந்தால்..? போதாதென்று நயன்தாராவையும் இந்த ஆட்டத்திற்கு துணைக்கு இழுத்துகொண்டால்..? இந்த முத்தான மூன்று அம்சங்களை வைத்து வெகு சுலபமாக ஒரு வெற்றிப்படத்துக்கு தேவையான திரைக்கதையை அமைத்து சுவாரஸ்யம் குறையாமல் அடித்து தூள் கிளப்பியிருக்கிறார் அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி.
எம்.ஜி.ஆர்-சிவாஜி காலத்து மாடல் கார்களை வாங்கி கால் டாக்ஸி ஆரம்பிக்க நினைக்கும் நயன்தாரா அப்பா தம்பி ராமையாவின் சேமிப்பைக்கொண்டு ஒரு பழைய மாடல் கார் ஒன்றை வாங்குகிறார்.. வாங்கிய கொஞ்ச நாட்களிலேயே அந்த காரில் அமானுஷ்ய சக்தி ஒன்று இருப்பதையும், இது போதாதென்று சாலையில் நடந்து சென்ற வடமாநில வாலிபன் ஒருவனை விரட்டி விரட்டி மோதிக்கொல்வதையும் கண்டு அதிர்ச்சியாகிறார் நயன்தாரா….
பின்னர் தான் நயன்தாராவுக்கு அந்த கார் பற்றியும் அந்த காருக்குள் புகுந்திருக்கும் ‘டோரா’ என்கிற நாயின் ஆன்மா பற்றியும் தெரிய வருகிறது.. யார் இந்த டோரா..? அது காருக்குள் எதற்காக புக வேண்டும்..? அதிலும் நயன்தாராவின் வீட்டை தேடி ஏன் அவரவேண்டும்..? வடமாநில வாலிபனை ஏன் கொல்லவேண்டும்..? என பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகவே பதில் சொல்கிறது மீதிக்கதை..
படம் முழுவதும் காமெடி, சென்டிமென்ட், லைட் ஆக்சன் என நயன்தாராவுக்கு 24×7 டூட்டி கொடுத்திருக்கிறார்கள். சும்மா சொல்லக்கூடாது. மொத்தப்படத்தையும் அசால்ட்டாக சுமந்திருக்கிறார் நயன்தாரா. காரின் ரேடியேட்டர் மூட்டி எவிடென்சை போகிறபோக்கில் பேச்சுவாக்கில் அவர் அசால்ட்டாக உடைக்கும் இடம் செம.. அதிலும் கர்ச்சீப்பில் கண்ணாடி துண்டுகளை ரவுடி ஒருவனை அட்டாக் பண்ணும் இடத்தில் விஜய், அஜீத்தெல்லாம் தோற்றார்கள் போங்கள். க்ளைமாக்ஸ் காட்சியில் வில்லனை நேருக்கு நேர் நயன்தாரா சந்திக்கும் கட்சி பரபரப்பின் உச்சம்.
மோசமான போலீஸ் அதிகாரியா.. கூப்பிடு ஹரீஷ் உத்தமனை என்பார்கள்.. ஆனால் நயன்தாராவுக்கு ஜோடி என்று இல்லாவிட்டாலும் நல்லவராக அதேசமயம் கெடுபிடியான போலீஸ் அதிகாரியாக ஹரீஷ் உத்தமனுக்கு இதில் புது யூனிபார்ம் கொடுத்திருக்கிறார்கள். நன்றாகத்தான் இருக்கிறது. நயன்தாராவின் அப்பாவாக தம்பி ராமையா.. அவரது காமெடி சில இடங்களில் (மட்டும்) ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. மகளை செல்லமாக ‘பவளப்பாப்பா’ என அவர் கொஞ்சலாக கூப்பிடுவதே தனி அழகு..
நயன்தாராவை அழகாக காட்டுவதிலும் டோராவை காட்டி திகிலூட்டுவதிலும் தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு கச்சிதம். படத்தில் முக்கியமான கேரக்டர்களாக வரும் அந்த அழகு குழந்தையும் அந்த டோரா நாயும், சாகசங்கள் செய்து பயமுறுத்தும் அந்த காரும் குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்து வரும் வேலையை கச்சிதமாக செய்துவிடும் என்பதில் ஐயமில்லை.. க்ளைமாக்ஸில் கால்மணி நேர காட்சிகள் நம்மை இருக்கை நுனியில் அமரவைக்கின்றது. காமெடி, த்ரில், சென்டிமென்ட் எல்லாம் சரிவிகிதத்தில் கலந்த இந்தப்படம் குழந்தைகளுக்கான சம்மர் ஸ்பெஷல் ட்ரீட் என்பதில் ஐயமில்லை.
கார் நயன்தாராவின் வீட்டுக்கு வரும் வரையிலும், வந்த பின்னும் என ஆரம்பத்தில் கதை மெதுவாக நகர்ந்தாலும் போகப்போக சூடு பிடிக்கிறது. அறிமுகமான முதல் படத்திலேயே முன்னணி ஹீரோவான நயன்தாராவை வைத்து திறம்பட இயக்கியதிலும் கமர்ஷியலாக அதேசமயம் புதிய பாணியில் உறுத்தல் இல்லாமல் ஒரு ஹாரர் படம் பண்ணியதிலும் அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி வெற்றிக்கோட்டை எளிதாக தொட்டுள்ளார்.