படத்தின் நாயகன் ரிச்சர்ட் ஜாமினில் வெளிவந்து இருக்கும் ஒரு கைதி. விழுப்புரம் அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர். இரட்டை கொலை வழக்கில் கைதாகி ஜெயிலுக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.
ஜாமினில் வெளிவந்த ரிச்சர்ட்ஸ் சென்னையில் ராயபுரத்தில் தனது நண்பர் வீட்டில் தங்குகிறார். ராயபுரத்தில் உள்ள பதிவாளர் அலுவலகம் அருகே டீ விற்று வருகிறார்.
அங்கே திருமண பதிவு விஷயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதையும் போலி திருமணங்கள் நடத்தப்படுவதையும் கண்டுபிடிக்கிறார். இதற்கு அரசு அதிகாரியான பதிவாளரும் உடந்தை என்பதால் இந்த குற்றத்தை பொறி வைத்து பிடிக்க ரிச்சர்டு திட்டமிடுகிறார்.
இந்த சூழலில் போலி திருமணங்கள் செய்து வைக்கும் நபர்களை கொன்று அதன் வீடியோக்களை கமிஷனருக்கே அனுப்பி வைக்கிறார். இதையடுத்து ரிச்சர்ட் என்ன செய்தார்? அவர் மனைவி திரெளபதிக்கு என்ன ஆனது? திருமண மோசடிகளுக்கு அவர் தீர்வு கண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகன் ரிச்சர்ட் பொறுமை ஆக்ரோசம் என அனைத்துவிதமான முக பாவனைகளையும் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.
அவரது மனைவியாக வரும் ஷீலா ராஜ்குமாரும் சிறப்பாக நடித்துள்ளார். சமூகத்திற்காக அவர் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் கைதட்டல் பறக்கிறது. சிறிய கதாப்பாத்திரமாக இருந்தாலும் கருணாசுக்கு நிறைவான கதாபாத்திரமாக அமைந்துள்ளது.
திருமண மோசடிகளை பற்றி விளக்கும் விழிப்புணர்வு படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மோகன் ஜி.
ஜூபினின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. மனோஜ் நாராயணனின் ஒளிப்பதிவில் நேர்த்தி பளிச்சிடுகிறது.
மொத்தத்தில் ‘திரெளபதி’ விழிப்புணர்வு படமாக வெளிவந்துள்ளது