எச்சரிக்கை ; இது மனிதர்கள் நடமாடும் இடம் – விமர்சனம்


பணம் என வரும்போது மனிதர்கள் தங்களது உண்மை நிறத்தை தமக்கு நெருங்கியவர்களிடமே கூட எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்கிற கருவை வைத்து வெளியாகியுள்ள படம் தான் இது..

தனது அக்காவை கொன்ற அவரது கணவனை பதிலுக்கு தான் கொலைசெய்துவிட்டு சின்னவயதிலேயே ஜெயிலுக்கு போகிறார் கிஷோர். அதனால் அக்கா பையன் விவேக் ராஜகோபால் ஆதரவில்லாமல் அனாதையாக வளர்கிறார். சில வருடங்கள் கழித்து விடுதலையாகி வெளியேவரும் கிஷோர் விவேக் ராஜகோபாலுக்கு பெரிய அளவில் பணம் ஏற்பாடு செய்து பரிகாரம் தேட நினைக்கிறார்.

அதற்காக அவரையும் கூட்ட சேர்த்துக்கொண்டு ரியல் எஸ்டேட் அதிபர் ஜெயகுமார் மகளான வரலட்சுமியை கடத்தி, அவரது தந்தையிடம் எட்டுகோடி ரூபாய் பணம் கேட்கிறார் ஜெயகுமாரோ ரிட்டையர்டு போலீஸ் அதிகாரியான சத்யராஜின் உதவியை நாடுகிறார்.

சுவாச குறைபாடு உள்ள ஒரே மகளை விட்டு எங்கேயும் வெளியே போகமுடியாத சத்யராஜூக்கோ தனது மகளின் மருத்துவ செலவுக்கு கோடிக்கணக்கில் பணம் தேவை. . இதை மனதில் வைத்து அவர் ஒரு பக்கம் காய் நகர்த்த, இன்னொருபக்கம் தாங்கள் கடத்திவந்த வரலட்சுமி தனது விவேக் ராஜகோபாலின் காதலி என கிஷோருக்கு தெரியவருகிறது. கூடவே தனக்கு பங்கு தராமல் அவர்கள் போடும் தனி திட்டமும் தெரிய வருகிறது.

இப்போது கிஷோர் புது திட்டம் போடுகிறார். யாருடைய திட்டம் ஜெயித்தது.? அந்தப்பணம் யாருக்கு போய் சேர்ந்தது என்பது க்ளைமாக்ஸ்.

கடமை, சென்டிமென்ட், தந்திரம் என கலவையான உணர்வுகளை தனது நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார் சத்யராஜ். படம் முழுதும் வந்தாலும் வரலட்சுமிக்கு ஒரே இடத்தில், அதுவும் கட்டிலில் கட்டிப்போடப்பட்டு கிடக்கும் நிலை என்பதால் அதில் முடிந்தவரை ஸ்கோர் பண முயற்சித்திருக்கிறார். அவரது காதலனாக் புதுமுகம் விவேக் ராஜகோபால் பொருத்தமான தேர்வு… நல்ல நடிப்பும் கூட..

கதையின் நாயகன் போல படம் முழுதும் வரும் கிஷோர் அதிகம் பேசாமல் செயலில் தனது பங்களிப்பை கொடுத்திருக்கிறார். வரலட்சுமியின் தந்தையாக வரும் ஜெயகுமார் நடிப்பு படு யதார்த்தம். யோகிபாபு வரும் இடங்களில் எல்லாம் நம்மை சிரிக்க வைத்தலும், அவருக்கு வேலை என்னவோ அதிகம் தரப்படவில்லை.

ஆள் கடத்தல் படத்தில் என்னனென்ன அம்சங்கள் இடம்பெறுமோ அத்தனையும் இதில் உள்ளது. ஆனால் இடைவேளைக்குப்பின் தேவையில்லாத செயற்கைத்தனம் வந்து ஒட்டிக்கொள்கிறது.. கிளைமாக்ஸில் மகள் மூலமாக அந்த பணம் கற்றுத்தரும் பாடத்தை அமைதியாக ஏற்கும் சத்யராஜ் கதாபாத்திரம் பலருக்கும் ஒரு பாடம்.