கல்லூரி செல்லும் ஆனந்தி பஸ்ஸில் ஏறும்போது தனது கால் செருப்பில் ஒன்றை தவறவிடுகிறார். அதேசமயம் சிரியாவில் வேலைபார்க்கும் அவரது தந்தை ஜெயபிரகாஷ் சில தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார். ஆனந்தியின் அப்பா கடத்தப்பட்ட அதே நேரத்தில் ஆனந்தியின் செருப்பு தொலைந்த விஷயத்தை சுட்டிக்காட்டும் பெண் சாமியாரிணி மீண்டும் அந்த செருப்பை பார்த்தால் உன் தந்தையின் உயிர்க்கு ஒன்றும் ஆகாது என குறி சொல்கிறார்.
ஆனந்தியை நீண்ட நாட்களாக பின் தொடர்ந்து ஒருதலையாக காதலிக்கும் பாண்டி, அந்த செருப்புக்களை தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார். வழியில் தவறவிட்ட செருப்பும், பஸ்ஸில் கழட்டிவிட்ட இன்னொரு செருப்பும் ஒன்றாக சேர்ந்து திரும்ப கிடைத்ததா, ஆனந்தியின் தந்தை உயிருடன் கிடைத்தாரா..? பாண்டிக்கு காதல் கைகூடியதா என்பது மீதிப்படம்..
ஹீரோவாக கோலிசோடா குண்டு பையன், அந்தப்பையனுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத கயல் ஆனந்தி ஜோடி என அவ்வளவாக பெரிய நட்சத்திரங்கள் இல்லாத ஒரு படத்தை, எப்படி நேர்த்தியாக எடுக்க முடியும் என ஆச்சர்யம் காட்டியிருக்கிறார் இயக்குனர் ஜெகன்நாத்.
பசங்க, கோலிசோடா படங்களில் நடித்த நான்கு பேரில் காமெடி சிறுவனாக பார்க்கப்பட்ட ‘சுமார் மூஞ்சி குமாரான’ பாண்டி தனது அபாரமான நடிப்பினால் நம்மை அசரவைக்கிறார். படம் முழுதும் கையில் கட்டுடன் ஒருதலை காதல், கோபம், இயலாமை, விரக்தி என கலந்துகட்டி அடித்திருக்கிறார் பாண்டி.
ஆனந்திக்கு நிறைவான கேரக்டர்.. படம் முழுதும் காதல் பற்றிய உணர்வே இல்லாமல், தந்தையின் உயிர் காப்பாற்றப்படவேண்டும் என பதைபதைக்கும் கேரக்டரில் அதற்கான நியாயத்தை சரியாக செய்திருக்கிறார் ஆனந்தி. படத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரம் யோகிபாபு.. இந்தப்படம் அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் என உறுதியாக சொல்லலாம்.
அரசியல்வாதியாக வரும் கே.எஸ்.ரவிகுமார், செருப்பு தைக்கும் லிவிங்ஸ்டன், குட்டியானை ஓனர் சிங்கம்புலி, தங்கைக்காக ஒற்றை செருப்பை வாங்கும் பாலசரவணன், குறிசொல்லும் ‘ஈசன்’ சுஜாதா, அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் என இந்தப்படத்தில் இடம்பெற்ற மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் மீட்டர் மீறாமல் யதார்த்தமான பங்களிப்பை தந்துள்ளார்கள்.
படம் முழுதும் மழைக்கால மூடை அற்புதமாக நம் மனதில் ஏற்றியிருக்கிறது சுகவேலனின் ஒளிப்பதிவு. சிம்பிளான கதை தான் ஆனால் அதை துளியும் போரடிக்காமல் கொண்டு செல்வதில், அதற்கான திரைக்கதை அமைப்பில் தான் இயக்குனர் ஜெகன்நாத் நம்மை கட்டிப்போட்டு உட்கார வைக்கிறார். செருப்பு கிடைத்தால் அப்பா உயிருடன் கிடைத்து விடுவாரா என்றால், அந்த நம்பிக்கையில் என்ன தவறு இருக்கிறது என்பதை படம் முழுதும் காட்சிகளால் நியாப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஜெகன்நாத்,
ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு படம் இயக்கியுள்ள ஜெகன்நாத், இந்தமுறை கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டுவிட கூடாது என தீயாய் வேலைபார்த்திருக்கிறார்.. எந்த இடத்திலும் ‘கூட குறைச்சல்’ இல்லாமல் அங்குலம் அங்குலமாக, காட்சிகளை கவனமாக செதுக்கியிருக்கிறார்.
சாதாரண படம் என ஒதுக்காமல் இந்தப்படத்தை பார்க்க செல்பவர்களுக்கு நிச்சயம் புது அனுபவம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.