எழுமின் – விமர்சனம்


தற்காப்பு கலையின் அவசியத்தை வலியுறுத்தி வெளியாகி உள்ள படம் தான் இந்த எழுமின். மேலும் சிகரெட். மது என எந்த காட்சிகளும் இல்லாமல் இந்தப்படத்தை எடுத்துள்ளதற்காக தயாரிப்பாளரும் இயக்குனருமான வி.பி.விஜிக்கு முதலில் ஒரு பூச்செண்டு கொடுத்து வாழ்த்து சொல்லலாம்.

தொழிலதிபரான விவேக்-தேவயானியின் மகன். அர்ஜுன். பாக்ஸிங் சாம்பியன். இவனுக்கு அஜய், கவின், வினித், அர்ஜுன், சாரா, ஆதிரா என ஆறு நண்பர்கள். . ஒவ்வொருவரரும் குங்பூ, சிலம்பம், கராத்தே, பாக்சிங் என ஒவ்வொரு கலையில் திறமைசாலிகள். அதேசமயம் மற்றவர்கள் அனைவரும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

கோச்சிங் கொடுக்கும் அகாடமி நடத்திவரும் அழகம்பெருமாள், பீஸ் கட்டவில்லை என அர்ஜுனை தவிர மற்றவர்களை வெளியே அனுப்பிவிடுகிறார். ஆனால் இந்த குழந்தைகளின் காட்பாதர் போல விளங்கும் விவேக், அதே மாஸ்டரை வைத்து தனிப்பயிற்சி கொடுக்க வைக்கிறார்.

அப்படி நடக்கும் போட்டியில் அர்ஜுன் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் திடீரென ஏற்படும் மாரடைப்பால் உயிரை விடுகிறான். மகனின் இழப்பால் துவண்டு போகும் விவேக்கிற்கு, போட்டிக்கு செலக்ட் ஆன மற்ற குழந்தைகளைகளுக்கு பதிலாக வேறு பிள்ளைகளை அழகம்பெருமாள் தேர்வு செய்வது அதிர்ச்சி அளிக்கிறது.

இதனால் கோபமான விவேக், தனது மகனின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டும், இந்த குழந்தைகளுக்கு கோச்சிங் கொடுப்பதற்காகவும் தானே ஒரு அகாடமி ஆரம்பித்து, இந்த ஐவரையும் பைனல் போட்டிக்காக ஐதராபாத் அனுப்பி வைக்கிறார். ஆனால் வழியிலேயே இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகிறது.. அதேசமயம் காரில் சென்ற கோச் மற்றும் குழந்தைகள் யாரையும் காணவில்லை.

குழந்தைகளுக்கு என்ன ஆனது..? அவர்களால் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள முடிந்ததா..? என்பது மீதிக்கதை.

ஒரு பண்பட்ட தந்தையாக விவேக் இதில் பண்பட்ட ஒரு குணசித்திர நடிகராக தன்னை நிரூபித்திருக்கிறார். குறிப்பாக தனது மகன் இறந்துபோகும் காட்சியில் அந்த உணர்வை வெளிப்படுத்தும் விவேக் இதுவரை நாம் பார்த்திராத புதிய மனிதராக தெரிகிறார். மற்ற குழந்தைகளுக்காக அவர்களின் பெற்றோர்களிடம் மன்றாடும் காட்சியும் மனதை நெகிழ வைக்கிறது.

விவேக்கின் மனைவியாக, பாசமான அம்மாவாக, மற்ற குழந்தைகளையும் தனது குழந்தையாக அரவணைக்கும் தாயாக நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார் தேவயானி. அகாடமி நடத்துபவராக வரும் அழகம்பெருமாளின் நடிப்பிலும், வசனத்தை வெளிப்படுத்தும் உடல்மொழியிலும் அவ்வளவு யதார்த்தம்.

போலீஸ் அதிகாரியாக வரும் பிரேம்குமார் ஒரு துடிப்பான போலீஸ் அதிகாரியாகத்தான் நம் கண்களுக்கு தெரிகிறார். கோச்சாக வரும் நபரும், வில்லனாக வரும் நபரும் சரியான தேர்வு. செல் முருகனும் தன் பங்கிற்கு சிறப்பிக்கிறார். அஜய், கவின், வினித், அர்ஜுன், சாரா, ஆதிரா என்கிற ஆறு குழந்தைகளும் ஆறு தூண்களாக இருந்து படத்தை தாங்கி பிடிக்கின்றனர். குறிப்பாக அந்த கால்மணி நேர க்ளைமாக்ஸ் காட்சியில் உலுக்கி எடுத்து விடுகின்றனர்.

ஸ்டண்ட் மாஸ்டர் மிராக்கிள் மைக்கேல் ராஜும் இயக்குனர் வி.பி.விஜியும் குழந்தைகளின் ஆக்சன் காட்சிகளை மிகைப்படுத்தல் இல்லாமல் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்தப்படம் இடைவேளைக்கு பின்னும் போட்டி, பயிற்சி, டோர்னமென்ட் என நகர்ந்திருந்தால் வழக்கமான ஒரு படமாக மாறியிருக்கும்.. ஆனால் அதன்பின் விறுவிறுப்பான த்ரில்லராக மாறியதில் இயக்குனர் வி.பி.விஜியின் புத்திசாலித்தனம் நன்றாகவே தெரிகிறது. அதுதான் படத்திற்கு பலமும் கூட.

இன்று தற்காப்பு கலை பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கு எவ்வளவு அவசியம் என்பதை இந்தப்படத்தை பார்க்கும் பெற்றோர்கள் புரிந்துகொள்வார்கள். மொத்தத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை விரும்பும் ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுடன் சென்று பார்க்கவேண்டிய படம் இது