பெற்றோரை விட்டு தெரிந்து தனியாக வேலைக்காரி வினோதினியின் உதவியுடன் மிகப்பெரிய வீட்டில் வசித்து வருகிறார் டாப்ஸி. அவரது வேலையே வீட்டில் இருந்தபடி வீடியோ கேம்ஸ் வடிவமைப்பதும் விளையாடுவதும் தான், அப்படிப்பட்டவர் ஒரு சமயத்தில் தனது கையில் குத்தியிருக்கும் டாட்டூவால் மிகுந்த வலியை பெறுகிறார் அதுகுறித்து மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறும்போது தான் அந்த டாட்டூவில் ஒளிந்துள்ள ஒரு மர்மமான விஷயம் அவருக்கு தெரிய வருகிறது.
அந்த டாட்டூவுக்கும் இறந்துபோன ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வருகிறது. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக தன்னை தாக்க வரும் 3 முகமூடி மனிதர்களிடம் இருந்து தப்பிக்க போராட்டம் நடத்துகிறார் டாப்ஸி.. யார் இந்த முகமூடி மனிதர்கள்..? அவர்கள் ஏன் டாப்ஸியை கொல்ல முயற்சிக்க வேண்டும்…? அவர்களிடம் இருந்து டாப்சியால் தப்பிக்க முடிந்ததா..? அந்த டாட்ட்டூவுக்கும் டாப்ஸிக்கும் என்ன தொடர்பு என பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதி விடை அளிக்கிறது.
ஹாரர் கலந்த திரில்லர் பாணியிலான கதை.. ஆனாலும் ஹாரரை குறைத்து திரில்லிங்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகப்படுத்தியுள்ளார்கள். டாப்ஸி இந்த படத்தில் விதவிதமான கலவையான உணர்வுகளை தனது அழகான நடிப்பால் வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் இடைவேளைக்கு பின்னர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே உலாவரும் அவருக்கான வேலை மிகவும் கடினமானது தான். அதையும் அழகாக செய்திருக்கிறார்.. உண்மையிலேயே அவரை பாராட்டியே ஆக வேண்டும்..
அவரது வீட்டு வேலைக்காரியாக வரும் வினோதினி நம் வீட்டு பெண் போலவே அவ்வளவு யதார்த்தமாக இருக்கிறார். தான் வேலை பார்க்கும் குடும்பத்திற்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறார் என்பதை காட்சிக்கு காட்சி அவரது கதாபாத்திரம் மூலம் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள் தவிர டாட்டூ வரையும் விஜே ரம்யா இந்த படத்தில் ஓரளவு கவனம் ஈர்க்கிறார். படத்தின் மிகப் பெரிய பலமே வசந்த்தின் ஒளிப்பதிவும் ரான் எதன் யோகனின் பின்னணி இசையும் தான். மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் அந்தப் படத்தைப் போலவே இந்தப்படத்திலும் நிமிடத்திற்கு நிமிடம் நம்மை திரில்லிங்கிலேயே உட்கார வைத்துவிடுகிறார்.
குறிப்பாக அந்த மூன்று முகமூடி மனிதர்களுக்கும் டாப்ஸி-வினோதினிக்கும் நடக்கும் போராட்டம் பதைபதைக்கச் செய்கிறது.. ஆனால் அந்த முகமூடி மனிதர்களை நாம் பெண்கள் எதிர்பாராமல் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாகவே நினைக்க வேண்டியிருக்கிறது.. வீடியோ கேமில் விளையாடும்போது ஒன்றுக்கு மூன்றாக சாய்ஸ் கொடுப்பது உண்டு.. நம் நிஜ வாழ்க்கையில் நம்மை எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள அப்படி மூன்றுமுறை சான்ஸ் கிடைக்குமா என்பது உறுதியாக சொல்ல முடியாது அதனால் அதை ஒரே தடவையில் கிள்ளி எறிய முயற்சிக்க வேண்டும், அதிலும் குறிப்பாக பெண்கள் என்கிற கருத்தை வலியுறுத்துவதாகத்தான் இந்த படத்தை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.. திரில்லிங் பிரியர்களுக்கு இந்த படம் உற்சாகத்தையும் கொடுக்கும்.