ஜீனியஸ் – விமர்சனம்


படத்தோட ஹீரோ ரோஷன் சாப்ட்வேர் கம்பனில வேலை பார்க்குறவர்.. அதி புத்திசாலி.. மத்தவங்க ஒரு மாசத்துல முடிகிற வேலையை இவரு ஒரு வாரத்துல முடிச்சுருவாரு. இதனால முதலாளி எல்லா வேலையும் இவர் தலைல கட்டுறாரு. ஒருகட்டத்துல அதிகமா யோசிச்சு யோசிச்சு அவரோட மூளையே ஜாம் ஆகி நின்னுறுது. பதறியடிச்சு டாக்டர் கிட்ட தூக்கிட்டு போறாங்க.. டாக்டர் ஜெயபிரகாஷ் அவரை பரிசோதிச்சுட்டு அவருக்கு எதோ ஒரு புதுவிதமான நோய் இருக்குன்னு சொல்றாரு.

மேலும் டாக்டர் அவரை மனோவசியப்படுத்தி பார்த்ததுல ரோஷன் சின்ன வயசுல எவ்வளவு ஜாலியா இருந்தான், தாத்தா பாட்டி ஊருக்கு போய், ஆத்துல குதிச்சு விளையாடி எப்படி என்ஜாய் பண்ணினான் அப்படின்னெல்லாம் தெரியவருது. அவங்க அப்பா ஆடுகளம் நரேன், அம்மா மீரா கிருஷ்ணன் இவங்க ரெண்டு பேரும் கட்டாயப்படுத்தமாலேயே, எல்லாத்துலயும் பர்ஸ்ட் மார்க் வாங்குறான்.. எல்லா போட்டிலேயும் பர்ஸ்ட் வர்றான்.. ஆனா யாரோ ஒரு புண்ணியவான், போகுற போக்குல உங்க பையனை இன்னும் நல்ல ட்ரெய்ன் பண்ணீங்கன்னா பெரிய லெவல்ல வருவன்னு ரோஷன் அப்பா காதுல ஓதிட்டு போறாரு..

அன்னையோட தொலஞ்சது ரோஷனோட சந்தோசம் எல்லாம்.. அதுவரைக்கும் பையன் என்ன மார்க் வாங்குறான்னு கூட தெரியாம பிராக்ரஸ் ரிப்போர்ட்ல கையெழுத்து போட்டு வந்த ஆடுகளம் நரேன், அதுக்கப்புறம் அவனை நாலுவிதமான டியூஷன், நைட் ஸ்டடி, கோச்சிங் கிளாஸ்னு தூங்கக்கூட நேரமில்லாம பெண்டை நிமுத்துறாரு. லீவுல சொந்த ஊருக்கு போக கூடாது, வெளியில பிரண்ட்ஸோட போய் விளையாட கூடாதுன்னு ஏகப்பட்ட கண்டிசன். அப்படி படி படின்னு போட்டு அவனை பிராண்டி எடுத்தார்ல, அதோட விளைவுதான் கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி இன்னைக்கு அவர் பையனோட மனநலமே பாதிக்குற அளவுக்கு கொண்டு வந்து விட்ருச்சு..

இனியாவது கொஞ்ச நாளைக்கு வேலை, டென்சன்னு இல்லாம ரிலாக்ஸா இருக்க முடிஞ்சா ஒருவேளை ரோஷன் நார்மல் ஆகலாம்னு சொல்றாரு. அவரை நார்மல் ஆக்குறதுக்கு அவரோட அப்பா, அம்மா, அப்புறம் அப்பாவோட ப்ரண்ட் சிங்கம்புலி எல்லாம் சேர்ந்து முயற்சி எடுக்கிறாங்க.. இதுல சிங்கம்புலி நல்லதுன்னு நெனச்சு பண்ணின ஒரு காரியம் ரோஷன் விஷயத்துல ஏடாகூடமா மாதிரி ஆகிப்போகுது.. ஆனா அந்த கெட்டதுலயும் நல்லது ஒன்னு நடக்குது.. அது என்னான்னு தெரிஞ்சுக்க விரும்பினா ஒரு எட்டு இந்த படத்துக்கு போயிட்டு வந்துருங்க பாஸ்.

ஹீரோ ரோஷன் புது ஆளுதான் என்றாலும் டைரக்டர் சுசீந்திரன் ரொம்பவே புத்திசாலித்தனமா அவரோட கேரக்டரை வடிவமைச்சு இருக்கிறதால, அவரும் படத்தோட ஒரு கேரக்டராத்தான் நமக்கு தெரியுறாரு.. சிரிக்கவும் தெரியாத, அழவும் தெரியாத ஒரு கேரக்டர் அப்படிங்கிறதுனால ஹீரோவுக்கு உண்மையிலேயே இதுல எதுவும் சரியா வரலைனாலும் கூட, அட என்னமா நடிக்கிறார்ப்பா அப்படிங்கிற மாதிரி மேட்ச் ஆகிடுது. ஆனா அதேசமயம் ரோஷனும் குறை சொல்ற அளவுக்கெல்லாம் நடிக்கல.. சில நேரம் அவரை அறியாமலேயே காமெடி பண்ணி நம்மள சிரிக்க வைக்கவும் செய்யுறாரு.

ஹீரோயின் பிரியா லால் கேரளாப்பொண்ணு.. தமிழ்ல்ல இதான் பர்ஸ்ட். ஒரு சாயலுக்கு நம்ம மடோனா செபாஸ்டியன் மாதிரி கூட தெரியுது. ஆனா நடிப்புல செம ஷார்ப். ஆடுகளம் நரேன் பையனை படி படினு சொல்லி டார்ச்சர் பண்ற அன்பான அப்பா. அம்மா மீரா கிருஷ்ணனுக்கு பையன் இப்படி ஆயிட்டானேன்னு, அதுக்கு காரணமான அப்பா மேல கோபத்த காட்டுற கேரக்டர்.. சரியா பண்ணிருக்காங்க.

கதை சீரியஸ் தான். ஆனா ஜாலிய கொண்டு போறாங்க. சிங்கம் புலி வந்தபின்னாடி நடக்குற கலாட்டாக்கள் நல்ல காமெடிதாம்ப்பா. அதே மாதிரி தாத்தா ஆடுகளம் ஜெயபாலன், ஹீரோ ப்ரண்டா வர்ற போராளி திலீபன்னு கதைக்கு எத்த கேரக்டர்களா புடிச்சு போட்டுருக்கார் சுசீந்திரன்.

இசை யுவன் சங்கர் ராஜா.. பரபரன்னும் இல்ல, அதே சமயம் மந்தமாவும் இல்ல.. கதைக்கேத்த மாதிரி வளைஞ்சு கொடுத்து இசையமைச்சிருக்காரு. மெசேஜ் சொல்ற படம் தான் என்றாலும் அதை போரடிக்காம சொல்றதுல தான் தன்னோட ஆட்டத்தை ஆடியிருக்கார் சுசீந்திரன். அதுவுமில்லாம படமும் ஒண்ணே முக்கா மணி நேரத்துக்கும் கம்மியாத்தான் ஓடுது. அதனால ஆரம்பிச்சதும் தெரியாது முடிஞ்சதும் தெரியாது.

இந்தப்படத்தை பார்த்துட்டு டியூஷன் செண்டர்லேய்யும் கோச்சிங் செண்டர்லயும் கூட்டம் குறைஞ்சதுன்னாலும், தெருவுலயும் கிரவுண்டிலேயும் பசங்க விளையாடுறது அதிகமாச்சுன்னாலும் அதுதான் இந்தப்படத்துக்கு கிடைச்ச வெற்றி..