படத்தின் நாயகன் ஜீவா காஷ்மீரில் போர் குண்டுகளுக்கு மத்தியில் பிறக்கிறார். அவரை நாடோடியாக இருக்கும் ஒருவர் எடுத்து வளர்க்கிறார். அதனால் ஜீவாவும் நாடோடியாக வளர்கிறார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அவரது வாழ்க்கை பயணிக்கிறது. சீனியர் என்னும் ஜீவாவை வளர்த்தவரும் சே என்னும் குதிரையும் தான் அவருக்கு எல்லாமே… சீனியர் மறைவுக்கு பின் தனியாகிறார்.
நாகூரில் ஜீவா தங்கியிருக்கும் போது அங்கு கட்டுப்பாடான குடும்பத்தில் இருக்கும் நடாஷாவிற்கு ஜீவா மீது காதல் ஏற்பட்டு அவருடன் வந்து விடுகிறார். இருவரும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக நாடோடி வாழ்க்கை வாழ்கிறார்கள். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடாஷாவுக்காக வீடு எடுத்து வசிக்கின்றனர். அப்போது அந்த பகுதியில் ஏற்படும் மதக்கலவரம் அவர்களது வாழ்க்கையையே சின்னாபின்னமாக்குகிறது. அதன் பின் அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகன் ஜீவா ஜிப்ஸியாகவே கதாபாத்திரத்தோடு ஒன்றி வாழ்ந்து இருக்கிறார். முதல் பார்வையில் கலகலப்பாக நடித்திருக்கும் ஜீவா இரண்டாம் பாதியில் ரசிகர்களை நெகிழ வைக்கிறார்.
நடாஷா சிங் அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடித்துள்ளார். அழகாகவும் இருக்கிறார். அவரது தந்தையாக வரும் லால் ஜோஸ் கட்டுப்பாடு மிக்க இஸ்லாமியரை கண் முன் கொண்டு வந்துள்ளார். கேரள கம்யூனிஸ்டாக சன்னி வேய்ன், கலவரத்தை நடத்தும் வன்முறையாளராக விக்ராந்த் சிங் உள்ளிட்ட அனைவருமே சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்கள்.
கர்நாடக எல்லையில் காவேரியை வைத்து அரசியல்வாதிகள் நடத்தும் கலவர காட்சியில் தொடங்கும் படம், முடியும் வரை உண்மைகளின் குவியல்களாகவே இருக்கிறது. மதக்கலவரம், விசாரணைக்கைதி, நாடோடிகளான ஜிப்ஸிக்களின் வாழ்க்கை என செய்திகளாக நாம் கடக்கும் சம்பவங்களை நிஜத்துக்கு வெகு நெருக்கமாக படம் பிடித்து காட்டி நம்மை நிலைகுலைய செய்கிறார் ராஜூமுருகன்.
அழகான காதல் கதையையும், நாடோடி வாழ்க்கையையும் சேர்த்து மனிதத்தின் முக்கியத்துவத்தை படைப்பாக்கி இருக்கிறார் ராஜூ முருகன். இன்றைய காலகட்டத்துக்கு மிக மிக அத்தியாவசியமான படமாக வெளியாகி இருக்கிறது.
மொத்தத்தில் கனமான காதலைச் சொல்லி இருக்கிறது இந்த ஜிப்ஸி திரைப்படம்.