இயல்பாகவே பெண்களை மதித்து நடக்கும் ஆண்களுக்கு இந்தப் படம் பிடிக்காது, ஒருவேளை அவர்கள் இறைவி படத்தை பார்க்க நேரிட்டால் பெண்களை மதித்துப்போற்றத்தெரியாத ஆண்கள் மீது கோபம் வரும், அவர்களை நம்பி ஏமாறும் பெண்கள் மீது அதைவிட அதிகமாகக் கோபம் வரும்.
இயல்பாக மரணமடையும் முன்பே , ஒரு ரசனைகெட்டவனுக்கு வக்கப்பட்ட பெண் அந்த கணமே மரணித்துவிடுகிறாள் அல்லது அவளது உணர்வுகள் செத்துப்போய்விடுகின்றன, வடிவக்கரசி.
காதலித்து மணந்தாலும் கணவன், கயவனாக மாறிவிடுகிறான், கமலினி முகர்ஜி.
காதலித்துக் கைப்பிடித்தவன் தன்னைப்பற்றி யோசிக்காமல், தற்கொலை செய்துகொள்ள தனித்துவிடப்பட்டவள், தன் வயதிற்கே உரிய காம இச்சைகளை தனக்குப் பிடித்த இன்னொருவனிடம் தணித்துக்கொள்கிறாள், பூஜா.
பெண்பார்க்க வந்த பத்தே நிமிடத்தில் பெரியவர்களின் பேச்சைக்கேட்டுத் தனது வாழ்க்கையை முற்றிலும் அ ந் நியனாக வந்து நிற்கும் ஒருவனிடம் நம்பிக்கையுடன் ஒப்படைத்தாலும், அடுத்து வரும் நம்பிக்கையில்லாத நாட்களையே எதிர் நோக்கும், அஞ்சலி.
கருவறையில் இருக்கும் போதும் போராட்டம், பிறந்து இந்த மண்ணுக்கு வந்துவிட்ட பிறகும் போராட்டம், தனது அப்பா யார்..? தனது எதிர்காலம் என்ன ..? என்பதை அறியாமலேயே – அந்தப் பிஞ்சு வயதிலேயே முகத்தில் கவலை ரேகைகளுடன் , கயல்விழி.
ராதாரவி பாணியிலேயே சொல்லவேண்டுமானால்,
..த்தா நீ மொள்ளமாரியா முடிச்சவிக்கியா குடிகாரக்கபோதியா இருப்ப அல்லது இன்னொருத்தி கூடச் சல்லாபம் பண்ணிக்கிட்டு இவளைக் கல்யாணம் பண்ணுவ, ”தக்காளி” உன்னைத்திருத்தி நல்வழிப்படுத்துவதற்காடா நாயே எங்கவீட்டுப்பொண்ண உனக்குக் கல்யாணம் கட்டித்தரணும்..? நீ என்ன மகாத்மாவா..? மானம்கெட்டவனே! படத்தில் பொன்னியைப் பெண்கேட்டுவரும் மைக்கேல் மாதிரி ஆண்களைச் சந்திக்க நேரிட்டால் இப்படித்தான் ராதாரவி, இறைவி மேடை உட்பட பலமேடைகளில் பேசுவது போன்ற தமிழில் வசைபாடத்தோன்றும்.
ஊர்ப்பெரிய கிழவிங்க அஞ்சலி முன்னாடி உட்கார்ந்து இப்படித்தான் நான் என்வூட்டுக்காரரைத் திருத்தினேன் என்று சொல்லும் போது அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதா அல்லது தலையிலடித்துக்கொள்வதா என்று தெரியவில்லை.
ஒரு இயக்குநர் இப்படித்தான் இருப்பானா..? என்று சதா சர்வகாலமும் பாட்டிலும் கையுமாக வந்து ரசிகர்களை மிகவும் எரிச்சலடைய வைக்கும் கதாபாத்திரம் தான் என்றாலும், எஸ் ஜே சூர்யா தனது மேஜிக்கல் நடிப்பால் குறைகளை நிறைகளாக்கிவிடுகிறார்.
தன் மூதாதையார்கள் படைத்த, கோயில் சிலைகளைத் திருட குடும்பத்தோடு தயாராகும் போது கப்பலேறிவிடாத படைப்பாளியின் மானம், காசுபோட்டு படம் எடுத்த தயாரிப்பாளர் காலில் ஒருதடவை விழுந்துவிட்டால் போய்விடுமா என்ன..?
தயாரிப்பாளரைக் கூட அவசரப்பட்டுப்போட்டுத்தள்ளிவிட்டாரோ என்று நினைக்கும் போதே , கொஞ்சம் கூட தன்னை நம்பி வந்த பொண்டாட்டியைப் பற்றிச் சிந்திக்காமல் ஜெகனைப் போட்டுத்தள்ளும் மைக்கேல் , கொஞ்சம் நெருடல், ஆனால், அது தான் நடக்கவேண்டும், அப்பொழுதுதான் பொன்னியும் குழந்தையும் அ நாதைகளாக ஆவார்கள்.
உன்மனைவியையும் குழந்தையும் இனியாவது நல்லா பார்த்துக்கோ என்று சொல்வது குற்றமா..? தனது உடன்பணியாற்றுபவர்களின் மனைவியையோ அல்லது கணவையோ ஏடாகூடமான இடங்களில் பார்த்தால் , சொல்வது மனித இயல்பு. இனி அந்தத் தவறு நடைபெறாமல் நடக்க ஒரு வாய்ப்பு, அதனைப் புரிந்துகொள்ளாத ஆண் வர்க்கப் பிரதி நிதிகளாக மைக்கேலும் அருளும்.
பெண்கள் அனைவரையும் கண்ணகிகளாகப் பார்ப்பதால் தான், அவள் அரக்கர்களிடம் இருந்து விடுபடவேண்டும் என்று கதறுகிறான் ஜெகன். அப்படி அவன் மனதைக் கவர்ந்த கண்ணகி, இன்னொருவருடன் குடித்தனம் நடத்தியவளாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் நவீன கோவலனாக, இந்த ஜெகன்.
அவ்வளவு போராடி வெளிவரவேண்டிய அளவிற்கு அப்படி என்னதாண்டா இருக்கு அந்தப் படத்தில்..? என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.
எஸ் ஜே சூர்யா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, கமலினி முகர்ஜி, அஞ்சலி, பூஜா, கயல்விழி ராதாரவி, வடிவுக்கரசி, ஆர்கே விஜய்முருகன் என்று முக்கியக்கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் பட்டையைக்கிளப்பியிருக்கிறார்கள்.
அப்பா எப்பம்மா வருவாரு என்று குழந்தை -கயல்விழி கேட்கும் போது , அவள் உருவில் இறைவியை அதிகமாக உணரலாம், இன்னொரு வாய்ப்புக்குத் தயாராகும் பூஜா, கமலினி முகர்ஜி மற்றும் அஞ்சலியைவிட.
நேர விரயம் செய்யும் சில தேவையே இல்லாத காட்சியமைப்புகள் , தனிப்பட்ட பழிவாங்கும் எண்ணங்களைத் திரைக்கதையில் புகுத்தியிருக்கிறாரோ என்று எண்ணத்தோன்றும் சைக்கோத்தனமான கொலைகள் என்று சில குறைகள் இருந்தாலும், இறைவி, நிஜமாகவே மிகவும் சவாலான கதைக்களம், அதை இன்றைய தலைமுறை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஈடுபாட்டுடன் இயக்கியிருப்பதும் மெச்சத்தக்கதே!