இரும்புத்திரை – விமர்சனம்


இன்றைய ஸ்மார்ட் போன் யுகத்தில் ஒவ்வொரு மனிதனின் பணமும் அந்தரங்கமும் அவனை அறியாமல் எப்படி களவாடப்படுகிறது, அதற்கு யார் துணை போகிறார்கள் என்பதை இரும்புத்திரை மூலமாக வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்கள்..

கோபக்கார மிலிட்டரி ஆபீசராக இருக்கும் விஷால் மனநல மருத்துவரான சமந்தாவிடம் பிட்னெஸ் சான்றிதழ் வாங்கிவரும்படி உத்தரவிடப்படுகிறார். கவுன்சிலிங்கில் ஒரு பகுதியாக சமந்தாவின் அறிவுரைப்படி ஊரில் இருக்கும் அப்பாவையும் தங்கையையும் பார்க்க செல்லும்போது, தங்கையின் திருமணம் பணத்தால், தடைபட்டு நிற்பது தெரிய வருகிறது..

நிலத்தை விற்றத்தில் கிடைத்த பணம் போக, மீதியை வங்கியில் லோன் போட்டு ஏற்பாடு செய்கிறார்.. ஆனால் பணம் கணக்கில் ஏறிய சில மணி நேரங்களிலேயே மொத்தப்பணமான பத்து லட்சமும் கணக்கில் இருந்து யாராலோ ஆன்லைன் மூலமாக களவாடப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடையும் விஷால், இதன் பின்னணியில் சைபர் க்ரைம் மன்னனான டிஜிட்டல் கொளையனாக இருக்கும் அர்ஜூன் இருப்பதை கண்டுபிடிக்கிறார். மூளையையையும் உடல் பலத்தையும் பயன்படுத்தி ஹீரோ-வில்லன் டிஜிட்டல் யுத்தம் துவங்குகிறது.. ஜெயம் யாருக்கு என்பது மீதிக்கதை.

விஷாலின் ஆரம்பகட்ட பில்டப் காட்சிகள் தவிர்த்து பார்த்தால் மொத்த்ப்படத்திலும் விஷால் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். சென்டிமென்ட் காட்சிகளிலும், இடைவேளைக்குப்பின் வரும் சேசிங் காட்சிகளிலும் வேகம் எடுத்திருக்கிறார். மங்காததாவுக்குப்பின் மீண்டும் அசத்தலான வில்லனாக என்ட்ரி கொடுத்திருக்கும் அர்ஜூன் கேரக்டரை சமரசம் செய்துகொள்ளாமல் வடிவமைத்திருப்பதை பாராட்டலாம். விஷாலுக்கும் அர்ஜுனுக்குமான டிஜிட்டல் சேசிங் பரபரக்க வைக்கிறது..

சிம்பிள் அன்ட் க்யூட்டாக, இலையில் வைத்த ஸ்வீட்டாக சமந்தா. ஹீரோவுக்கு உதவும் வீரதீர பராக்கிரம பெண்மணியாகவும் அசத்துகிறார். ரோபோ சங்கரின் எக்ஸ்ட்ரா வால்களை எல்லாம் வெட்டி இருப்பதாலோ என்னவோ நீண்ட நாளைக்குப்பின் இதில் அவரது காமெடி இயல்பாக ரசிக்கும்படியாக இருக்கிறது. தந்தையாக டெல்லிகணேஷ் வழக்கம்போல.

பாடல்கள் மூலம் படத்தின் விறுவிறுப்புக்கு தடைபோடமல் பின்னணி இசையில் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார் யுவன்சங்கர் ராஜா. ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு மிரட்டல். பேஸ்புக், வாட்ஸ் அப், போகிற இடங்களில் கூப்பன்களை நிரப்பி கொடுப்பது என நம்மை பற்றிய தகவல்களை நம்மையறியாமலேயே எப்படி வெளிநபர்களுக்கு தாரைவார்த்து தருகிறோம் என்பதை பார்க்கும்போது நிஜமாகவே மொபைல் போன் மீது பயம் வரவே செய்கிறது.

ஆரம்ப காட்சிகள் ஒன்றிரண்டு சமீபத்தில் வெளியான சில படங்களின் காட்சிகளை நினைவூட்டுகிறது.. அதை கவனித்து தவிர்த்திருக்கலாம். அடாவடியாக வங்கிக்கடன் வசூலிக்க வந்தவனை புரட்டி எடுக்கும்போது கைதட்ட தோன்றுகிறது.. மொத்தத்தில் இந்த இரும்புத்திரை கமர்ஷியல் படமாக வெளியாகி இருக்கிறது.