ஜோதிகா ரேவதி இருவருக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகியிருக்கும் படம் தான் ஜாக்பாட்
சிறிதும் பெரிதுமாக ஆட்களை ஏமாற்றி திருட்டுக்களை நடத்தி மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டு வாழ்க்கையை நடத்துபவர்கள் ஜோதிகாவும் அவரது அத்தை ரேவதியும். நூறு வருடத்திற்கு முன்பு எங்கெங்கோ சுற்றி வந்த அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் ஒன்று அந்த ஊர் பண்ணையார் ஆனந்தராஜ் வீட்டில் புதைக்கப்பட்டிருப்பது இருவருக்கும் தெரிய வருகிறது.
அதை எப்படியாவது கைப்பற்றினால் காலம் முழுவதும் வசதியாக மற்றவர்களுக்கு உதவி செய்துகொண்டு வாழலாம் என திட்டம் தீட்டுகின்றனர் இருவரும். கோடாங்கி ஒருவரின் சாபத்தால் அவதிப்படும் யோகிபாபுவையும் துணைக்கு சேர்த்துக் கொண்டு அந்த அட்சய பாத்திரத்தை திருட முயற்சிக்கின்றனர். அது அவர்கள் கைக்கு கிடைத்ததா..? அதனால் நடக்கும் களேபரங்கள் என்ன என்பதுதான் மீதிக்கதை.
கொஞ்ச நாளைக்கு முன்பு காண்டிப்பான தலைமை ஆசிரியராக பார்த்த ஜோதிகாவா இது என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அப்படியே கதாபாத்திர உருமாற்றம் நிகழ்த்தியிருக்கிறார் ஜோதிகா.. ஒவ்வொருவரையும் ஆளுக்கு தகுந்தவாறு ஏமாற்றுவதிலாகட்டும் நேரத்திற்கு தகுந்த மாதிரி கெட்டப்பையும் கேரக்டரையும் மாற்றுவதிலாகட்டும், ஜோதிகா தான் நடிப்பு ராட்சசி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
அரங்கேற்ற வேளையில் பார்த்த, அதன்பிறகு குலேபகாவலியில் மீண்டும் பார்த்து ரசித்த அதே மாஷா கதாபாத்திரத்தில் அதே துறுதுறு கேரக்டரில் ரேவதி வழக்கம் போல தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.. அவரது மனம் ஒத்துழைக்கும் அளவிற்கு வயதும் உடலும் ஒத்துழைக்க மறுக்கிறது என்பது நன்றாகவே தெரிகிறது.
கோடாங்கியின் சாபத்தால் யோகிபாபுவின் உருமாற்றம் நிகழ்வது புதுவிதமான கற்பனை.. ஆனால் இடைவேளைக்கு முன்பு இரண்டு காட்சிகளில் மட்டுமே வரும் அவரை இடைவேளைக்கு பின்பும் இன்னும் கொஞ்சம் அதிகமாக பயன்படுத்தி இருக்கலாம்.. ஒன்றுக்கு இரண்டாக டபுள் ஆக்சன் அதிலும் லேடி கெட்டப்பிலும் மிரட்டுகிறார் ஆனந்தராஜ்.. மொட்ட ராஜேந்திரன் தலையில் ஹெவி வெயிட்டாக தூக்கி வைத்து விட்டதால் நிறைய காட்சிகளில் கணம் தாங்காமல் நன்றாகவே தடுமாறுகிறார்.. இருந்தாலும் ஓரளவு சமாளித்திருக்கிறார்..
டீசன்டான ரவுடியாக மன்சூரலிகான் கிடைத்த கேப்பில் கரெக்டாக ஸ்கோர் செய்து விட்டு போகிறார். இவர்கள் தவிர ஆனந்தராஜின் அல்லக்கைகளாக வருபவர்களில் ரெடின் கிங்ஸ்லி படத்துக்கு படம் ஏதோ ஒரு விதத்தில் கவனிக்க வைப்பதைப் போல் இந்த படத்திலும் நம்மை கவர்கிறார். மற்றபடி மைம் கோபி, சமுத்திரக்கனி, தேவதர்ஷினி, மனோபாலா, சச்சு என சில உப கதாபாத்திரங்களும் சில காட்சிகளில் தலை காட்டிவிட்டு மறைகின்றனர்.
விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை படத்திற்கு கலகலப்பை கூட்டுகிறது. நூறு வருடத்திற்கு முந்தைய அட்சய பாத்திரம் தோன்றும் காலகட்டமும் கிளைமாக்ஸ் காட்சியும் ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ்.ஆனந்தகுமாரின் திறமையை பறைசாற்றுகின்றன. குலேபகாவலி படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண் கிட்டத்தட்ட அந்தப்படத்தின் இரண்டாம் பாகம் போலவே இந்த படத்தை இயக்கியுள்ளார்..
அட்சய பாத்திரம் என்கிற விஷயத்தை ஆரம்பிக்கும்போதே இந்த படத்தில் லாஜிக் எல்லாம் பார்க்க முடியாது என்பதை உணர்ந்து நாமும் சிரிப்பதற்கு தயாராகிறோம். அட்சய பாத்திரத்தை கைப்பற்றுவதற்கான போராட்டத்தை சற்று நீளம் குறைந்து இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். ஜாக்பாட் எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு இந்தப்படம் ஆறுதல் பரிசை விட அதிகமான பரிசையே தந்து அனுப்பும் என்பதில் சந்தேகமில்லை