ட்ராவல்ஸ் தொழில் தொடங்க பணத்துக்கு அலைகிறார் ஜெய். நண்பன் டேனியல் மூலமாக கமிஷனுக்கு லோன் வாங்கிக்கொடுக்கும் இளவரசு அறிமுகமாக, இன்னொருவர் நிலத்தை போலியாக அடமானம் வைத்து, பணம் பெற்று கடையை திறக்கிறார். சில நாட்களிலேயே இந்த ஏமாற்று விபரம் தெரிந்த போலீஸ் அதிகாரி போஸ் வெங்கட் ஜெய்யை பத்து லட்சம் கேட்டு மிரட்டுகிறார்.
பாரில் அறிமுகமாகும் கோடீஸ்வரர் ரோபோ ஷங்கர், தனது காதலி ரெபா மோனிகாவை கடத்தி வந்து தன்னுடன் சேர்த்து வைத்தால் பத்து லட்சம் தருவதாக கூறுகிறார். ஜெய்யின் கடத்தல் திட்டம் வெற்றி பெற்றாலும் ரோபோ சங்கரால் பணம் தரமுடியாமல் போகிறது. அனால் புத்திசாலித்தனமாக அந்த கடத்தலை வைத்தே ரெபாவின் தந்தையிடம் ஜெய் பணம் கேட்க, அவரும் பணத்தை கொடுக்கிறார்.
எதிர்பாராத ட்விஸ்ட்டாக ஜெய் ஏமாந்த சமயத்தில் பணத்துடன் எஸ்கேப் ஆகிறார் ரெபா மோனிகா.
அதேசமயம் தனது வீட்டிற்கும் ரெபா மோனிகா போகவில்லை.. ரெபாவை ஜெய் கண்டுபிடித்து பணத்தை மீட்டாரா…? போஸ் வெங்கட்டை எப்படி சமாளித்தார்..? தப்பிய ரெபா ஏன் வீட்டிற்கு போகவில்லை..? என்கிற கேள்விகளுக்கான விடையை சிலபல ட்விஸ்ட்டுகளுடன் சொல்லி முடிக்கிறார்கள்.
ஆரம்பத்தில் கொஞ்சம் காமெடி, பின்னர் படம் முழுக்க சீரியஸ் ஆக்சன் என ஜெய்க்கு கமர்ஷியல் ஹீரோவுக்கான படமாக இது நிறைய வேலை வாங்கியிருகிறது. கதாநாயகி ரெபா ஓஹோவென இல்லாவிட்டாலும் ஓகே ரகம். டேனி, காது செவிடாகிவிடும் போல கத்திக்கத்தி பேசுவதுதான் உங்கள் பார்முலாவா..? அடுத்த படத்திலிருந்து மாற்றிக்கொள்ளவிட்டால் டேஞ்சர் தான்.
அதேசமயம் அலட்டல் இல்லாத காமெடிதான் என்றாலும் ரோபோ சங்கர் ஓரளவுக்கு சிரிப்பூட்டுகிறார். இளவரசும் போஸ் வெங்கட்டும் கதைக்கு திருப்புமுனையாக இருக்கிறார்கள். வில்லன் அன் கோ வழக்கம் போல.
ஒரு ஹீரோ, அவனுக்கு பண பிரச்சனை, எதிர்பாராத சிக்கல், அதன் பின் துரத்தும் வில்லன்கள் என ரெகுலராக தமிழ் சினிமாவில் இருக்கும் டெம்ப்ளேட்டில் கதையை சொல்லியிருக்கிறார் இயக்குனர் பிச்சுமணி. முதல் பாதியில் ஆளில்லா பைபாஸில் பயணிப்பதுபோல சுவாரஸ்யமாக கதையை நகர்த்தியவர், இடைவேளைக்குப்பின் சிட்டிக்குள் நுழைந்த கண்டெய்னர் மாதிரி ஏற்கனவே போட்டுவைத்த ரூட்டில் மெதுவாக கதையை நகர்த்தியுள்ளார். கதாநாயகி பணத்துடன் எஸ்கேப் ஆவது நல்ல ட்விஸ்ட்.
மொத்தத்தில் ஜாலியான பொழுதுபோக்கு படம் என்பதில் எல்லாம் எந்தக்குறையும் சொல்ல முடியாது.