ஜூங்கா – விமர்சனம்


கோபமும் காமெடியும் கலந்த ஒரு கஞ்ச டானின் கதை தான் இந்த ஜூங்கா.’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி-கோகுல் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியுள்ள படம் என்பதாலேயே மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது ‘ஜூங்கா’.. அந்த எதிர்பார்ப்பை இருவரும் நிறைவேற்றியுள்ளார்களா..? பார்க்கலாம்.

பொள்ளாச்சி பக்கம் கண்டக்டராக வேலைபார்க்கும் விஜய்சேதுபதிக்கு, தன் தந்தி, தாத்தா எல்லாருமே ஒரு ‘டான்’ என்பதும், சென்னையில் தங்களது பூர்வீக சொத்தான சினிமா தியேட்டர் ஒன்று தங்கள் கைவிட்டு போனதும் தனது அம்மா சரண்யா மூலம் தெரியவருகிறது.

உடனே நண்பன் யோகிபாபு மற்றும் அம்மா, பாட்டியுடன் சென்னைக்கு வரும் விஜய்சேதுபதி குடும்ப இலக்கணப்படி தன்னை ஒரு டான் ஆக மாற்றிக்கொள்கிறார்..அதன்மூலம் கிடைக்கும் பணத்தை சேர்த்து, தங்களது சினிமா தியேட்டரை வைத்துள்ள கோடீஸ்வரர் சுரேஷ் மேனனிடம் கொடுத்து தியேட்டரை திரும்ப கேட்கிறார். ஆனால் அதை தர மறுக்கும் சுரேஷ் மேனன், விஜய்சேதுபதியை அவமானப்படுத்தியும் அனுப்புகிறார்.

அவமானத்தில் கொதிக்கும் விஜய்சேதுபதிக்கு, சுரேஷ்மேனனின் மக்கள் சாயிஷா பிரான்ஸ் நாட்டில் படிப்பது தெரியவர, அவரை கடத்தி, தியேட்டரை தங்களுக்கு சொந்தமாக்க நினைத்து யோகிபாபுவுடன் பிரான்ஸ் பயணமாகிறார். தனது திட்டத்தை செயல்படுத்தி சுரேஷ் மேனனிடமிருந்து தியேட்டரை கைப்பற்றினாரா என்பது மீதிக்கதை.

ஒரு டானாக விஜய்சேதுபதி கெட்டப்பிலும் கேரக்டரிலும் தன்னை ரொம்பவே விசித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார். இப்படி ஒரு ‘கஞ்ச’ டானை பார்த்திருப்போமா என்பது சந்தேகம் தான். அசால்ட் பண்ண போகும்போது கூட, ஜீப்பில் ஸர் ஆட்டோ ரேஞ்சுக்கு ஆட்களை ஏற்றி காசு வசூலிக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.. விஜய்சேதுபதியின் கஞ்சத்தனத்திற்காக வைக்கப்பட்ட காட்சிகள் பல வெடிச்சிரிப்பை வரவழைக்கின்றன.. இன்னும் சில காட்சிகளோ இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா என்றும் கேட்க வைக்கின்றன.பிரான்சில் யோகிபாபுவை அவர் படுத்தும் பாடு எல்லாம் செம கலாட்டா.. ஆனால் வசனங்களை எல்லாம் ஸ்பீடாகவும் கத்தியும் பேசுவது தான் காதுகளை பதம் பார்க்கிறது.

நாயகி சாயிஷாவின் அழகு முகத்தை பார்த்ததுமே உற்சாகம் பிறக்கிறது. அதிலும் தனது கழுத்தை ஒரு வெட்டு வெட்டி நடனம் ஆடுகிறார் பாருங்கள்.. யப்பா.. அதிலேயே ரசிகன் விழுந்து விடுகிறான். அவரது . கொஞ்சநேரமே வந்து விஜய்சேதுபதியுடன் ரொமான்ஸ் பண்ணி கலகலப்பூட்டிய வேகத்தில் காணாமல் போகிறார் மடோனா செபாஸ்டியன்.

கிட்டத்தட்ட படம் முழுதும் ஹீரோவுடனேயே பயணிக்கும் யோகிபாபு, விஜய்சேதுபதியின் கஞ்சத்தனத்தில் சிக்கிக்கொண்டு படும் பாடு இருக்கிறதே.. அதிலும் பிரான்சில் மொழி புரியாமல் அவர் படும் பாடும் பண்ணும் அட்ராசிடியும் செம அலப்பறை. வரும் காட்சிகளில் எல்லாம் ஏதோ ஒருவிதத்தில் நம்மை சிரிக்க வைத்து விடுகிறார்.

சரண்யாவுக்கு இதுநாள்வரை நடித்துவந்த அம்மா வேடத்தில் இருந்து முற்றிலும் வித்தியாசமான கேரக்டர். வசன உச்சரிப்பு, உடல்மொழி என இரண்டிலும் அசத்துகிறார்.. காமெடியிலும் பின்னுகிறார். கூடவே டான் பாட்டியாக வரும் விஜயா பாட்டியும் சேர்ந்துகொண்டு ரணகளம் பண்ணுகிறார். கோடீஸ்வர வில்லத்தனத்தை சுரேஷ் மேனன் அப்படியே முகத்தில் காட்டினாலும் படம் காமெடிப்படம் என்பதால் அவ்வளவு சீரியஸாக தெரியவில்லை..ராதாரவி, மொட்டை ராஜேந்திரன் கேரக்டர்களை இன்னும் கொஞ்சம் வேலை வாங்கியிருக்கலாம்.

பிரான்ஸ் நாட்டில் டட்லியின் ஒளிப்பதிவின் வேகம் மிரள வைக்கிறது. குறிப்பாக அந்த கார் சேசிங் காட்சி. இசையமைப்பாளர் சித்தார்த் விபினும் தனது பங்கிற்கு சுவாரஸ்யம் கூட்டுகிறார். ஒன்றுமே தெரியாத கதாநாயகன், பிரான்ஸ் நாட்டில் போலீசுக்கும் மாபியா கும்பலுக்கும் தண்ணி காட்டுவதெல்லாம் நமக்கு புதுசா என்ன..? லாஜிக்கே பார்க்காமல் கடந்துபோவதுதான் படத்தை ரசிக்க உதவும்..

படத்தில் ரசித்து சிரிப்பதற்கு என ஐம்பது இடங்களில் காமெடி காட்சி அமைத்திருக்கிறார்கள் என்றால் அவற்றில் பலவற்றை முழுதுமாக ரசிக்க முடியாமல் காட்சிகள் சடார் சடாரென மாறுவது அயர்ச்சியை தருகிறது. இடைவேளைக்கு முன் காட்டிய சுவாரஸ்யத்தை இடைவேளைக்கு பின்னும் தக்கவைத்திருந்தால் படம் மாஸ் கிளாஸாக மாறியிருக்கும்..