காலக்கூத்து – விமர்சனம்


பெற்றோரை இழந்த பிரசன்னாவும், அம்மாவை இழந்த கலையரசனும் சிறுவயது முதலே நண்பர்கள்.. வேலைவெட்டி இல்லாமல் ஊரை சுற்றும் கலையரசன் கல்லூரி செல்லும் பணக்கார வீட்டுப்பெண் தன்ஷிகாவை காதலிக்கிறார்.. காதலிக்கும் எண்ணமெல்லாம் இல்லாமல் விறைப்பாக சுற்றும் பிரசன்னாவை சிருஷ்டி டாங்கே காதலிக்கிறார்..

ஆனால் சிருஷ்டியின் காதல் அவரது அப்பாவுக்கு தெரியவந்து வேறு மாப்பிள்ளையுடன் திருமணத்தை நிச்சயிக்கிறார். தன்ஷிகாவின் அம்மாவோ தனது தம்பிக்கு அவரை திருமணம் செய்து வைப்பதாக தனது தந்தையிடம் வாக்கு கொடுக்கிறார்.. தனது காதல் தோல்வியடைந்த நிலையில் நண்பன் கலையரசன் காதலை சேர்த்துவைக்க முடிவுசெய்யும் பிரசன்னா, தன்ஷிகவை வீட்டைவிட்டு வரச்செய்து இருவருக்கும் கோவிலில் திருமணம் செய்துவைக்கிறார்..

ஆனால் அன்றிரவே விதி அவர்களது வாழ்க்கையை புரட்டி போட முடிவு செய்கிறது.. அப்படி என்ன நடந்தது..?. விதியிடமிருந்து தப்பித்தார்களா..? இவர்கள் மூவரின் கதி என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்.

எந்நேரமும் உர்ரென்ற முகத்துடன் இருக்கும் பிரசன்னாவும் எப்போதும் கலாட்டாவாக திரியும் கலையரசனும் நடிப்பில் ஸ்கோர் பண்ணினாலும், பல படங்களில் பார்த்து சலித்த கதாபாத்திரங்கள் என்பதால் சுவராஸ்யம் கூட்டவில்லை.. சிருஷ்டியை அநியாயத்திற்கு வில்லியாக மாற்றியிருக்கிறார்கள்.. வேலைவெட்டிக்கு போகாத ஆணை காதலித்து அவதிப்படும் பெண்களுக்கு ஒரு உதாரண கேரக்டரில் தன்ஷிகா செமையாக பிட் ஆகியுள்ளார். அவரது முடிவுதான் பதற வைக்கிறது.

படத்தில் ஆர்.என்,ஆர் மனோகர், பாண்டி ரவி, ராஜலட்சுமி உள்ளிட்ட துணை கதாபாத்திரங்கள் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர்.. ஜஸ்டின் பிரபாகரனின் இசை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் வெகு சாதரணமாக கடந்து போகிறது.

பல காட்சிகளில் கலையரசனும் பிரசன்னாவும் எந்நேரமும் பைக்கில் போவதும் வருவதுமாக, அதிலேயே அரைமணி நேர படம் நகர்வது அயர்ச்சியை தருகிறது. படத்தில் பல கேரக்டர்கள் அவரவர் வசதிக்கேற்ப பொட்டு பொட்டென உயிரை விடுகிறார்கள்.. ஓஹோ. ஒருவேளை இதுதான் காலக்கூத்தோ..? வேலைவெட்டிக்கு போகாமல் எந்த தைரியத்தில் பணக்கார வீட்டு பெண்ணை காதலிக்கிறார்கள் என கலையரசன் கதாபாத்திரத்தின் மீது எரிச்சல் ஏற்படவே செய்கிறது. அது அவரது நடிப்பிற்கு பிளஸ்.. இயக்குனரின் கற்பனைக்கு மைனஸ். கொஞ்சம் புதிதாக இயக்குனர் நாகராஜன் மாற்றி யோசித்திருந்தால், காலக்கூத்து காலச்சுவடாக மாறி மனதில் நின்றிருக்கும்.