வித்தியாசமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்கிற பெயரை சமீபகாலமாக வெளியான அவரது படங்கள் தக்கவைக்க தவறிய நிலையில் கிருத்திகா உதயநிதி டைரக்சனில் அவர் நடித்துள்ள ‘காளி’ படம் வெளியாகியுள்ளது. இந்தப்படமாவது விஜய் ஆண்டனி ரசிகர்களின் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளதா..? பார்க்கலாம்.
அமெரிக்காவில் மிகப்பெரிய மருத்துவனைக்கு சொந்தக்காரரான விஜய் ஆண்டனிக்கு, தான் தத்துப்பிள்ளை என்கிற விபரம் தெரியவர, தனது உண்மையான பெற்றோர் யார் என தேடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். தனது அம்மா பெயர் பார்வதி என தெரிந்துகொண்ட விஜய் ஆண்டனி, தனது தந்தை யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக கனவுக்கரை என்கிற கிராமத்தில் கிளினிக் அமைத்து டேரா போடுகிறார்.
கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரின் ரத்தவகையை சோதித்து டி.என்.ஏ டெஸ்ட் மூலம் உண்மையை அறியும் மிகப்பெரிய வேலையில் இறங்குகிறார் விஜய் ஆண்டனி. அங்கே கிராமத்து தலைவர் மதுசூதனன், காட்டில் மறைந்து வாழும் திருடன் நாசர், சர்ச் பாதர் ஜெயபிரகாஷ் என ம்மோவர் இவரது சந்தேக வளையத்துக்குள் வருகின்றனர். ஆனால் இவர்கள் சொல்லும் கதை மூலம் தனது தாய் யார் என்கிற குழப்பமும் விஜய் ஆண்டனியிடம் சேர்ந்துகொள்கிறது. இந்த குழப்பம் இறுதியில் தீர்ந்ததா..? விஜய் ஆண்டனிக்கு தனது உண்மையான பெற்றோர் யார் என்கிற விபரம் தெரியவந்ததா என்பது க்ளைமாக்ஸ்.
விஜய் ஆண்டனி நன்றாகவே நடிக்கிறார்.. அதிலும் அவருக்கு பிடித்தமான டாக்டர் கேரக்டரில் விஜய் ஆண்டனி நடிக்கிறார் என்றால் சொல்லவா வேண்டும்.. இதுதவிர கதையோட்டத்தில் பிளாஸ்பேக்கில் இன்னும் மூன்று விஜய் ஆண்டனிகள் வெவ்வேறு கேரக்டர்களில் வந்து போகிறார்கள். ஒவ்வொன்றிலும் வித்தியாசம் காட்ட முயற்சித்திருந்தாலும் சர்ச் பாதர் கேரக்டரில் அவரை ரசிக்க முடிகிறது. ஆனால் விஜய் ஆண்டனிக்கான படமா இது என்றால் நிச்சயமாக இல்லை.. சொல்லப்பட்ட கதையில் தன்னை புகுத்திக்கொண்டிருக்கிறார் மனிதர்.
இந்தப்படத்தில் அஞ்சலி, சுனைனா, அம்ரிதா ஐயர், ஷில்பா மஞ்சுநாத் என நான்கு கதாநாயகிகளுக்கு என்ன வேலை என நினைப்பு தோன்றினாலும் ஒவ்வொரு பிளாஸ்பேக்கிற்கு ஒன்றாக அவர்களை இயக்குனர் கோர்த்த விதம் பாராட்டுக்குரியது. நால்வரும் ஒவ்வொருவிதமாக தங்களை முன்னிறுத்தினாலும் மேலுதட்டு மச்சத்துடன் கிராமத்து அழகியாக வரும் ஷில்பா மஞ்சுநாத் தான் பர்ஸ்ட் மார்க் வாங்குகிறார். அஞ்சலியின் கதாபாத்திர படைப்பு ரொம்ப ரொம்ப சாதாரணம். கொஞ்ச நேரமே வந்தாலும் சுனைனாவின் நடிப்பில் கம்பீரம். ரோமியோ ஜூலியட் நாயகியாக நம்மை கவர்கிறார் அம்ரிதா ஐயர்.
இவர்கள் தவிர படம் முழுதும் (பிளாஸ்பேக் தவிர்த்து) விஜய் ஆண்டனியுடன் பயணித்து கலகலப்பூட்டுகிறார் யோகிபாபு.. இருந்தாலும் நிறைய காட்சிகளில் அவருக்கு தீனி குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளது.. மதுசூதனன், நாசர், ஜெயபிரகாஷ் ஆகியோரின் கேரக்டர்களுக்கான பிளாஸ்பேக்கில் விஜய் ஆண்டனியையே கொண்டுவந்ததும் வித்தியாச முயற்சிதான்.. ஆரம்பத்தில் குழப்பினாலும் போகப்போக புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மதுசூதனன் பற்றிய பிளாஸ்பேக் தான் ரொம்ப இழுவை… கவனித்து கத்திரி போட்டிருக்கலாம். ஆர்.கே.சுரேஷ், வேலா ராமமூர்த்தி ஆகியோரின் வில்லத்தனம் வழக்கம்போல ஒகே.
ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவு கிராமத்து எபிசோடுகளிலேயே ஒவ்வொரு விதமாக வெரைட்டி காட்டுகிறது. நடித்துக்கொண்டே இசையமைத்திருப்பதாலோ என்னவோ பாடல்களில் விஜய் ஆண்டனி இசை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.. ஆனால் பின்னணி இசையில் அதை சரி செய்திருக்கிறார்.
இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஒவ்வொரு பிளாஸ்பேக் உத்தியை பயன்படுத்தி காட்சியையும் எடுத்திருக்கும் விதம் அழகு தான்.. ஆனால் தனது தாய் தந்தையை தேடிவரும் ஹீரோ, அவர்களை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகளால் விஜய் ஆண்டனிக்கு மட்டுமல்ல, நமக்கும் அயர்ச்சி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை பாதரை பழிவாங்க ஆர்,கே.சுரேஷ் 25 வருடங்களாக காத்திருப்பார்..? அதற்கான லாஜிக் எங்கேயும் சொல்லப்படவில்லை.. அம்மாவுக்கு ரெண்டு கிட்னியும் செயல் இழந்துபோன விஷயம் ஒரு டாக்டர்களாக இருக்கும் விஜய் ஆண்டனிக்கும் அவரது அப்பாவுக்குமே தெரியாது என்பதெல்லாம் காதுல பூ சமாச்சாரம். விஜய் ஆண்டனியின் குளிர் காய்ச்சலை போக்க சுனைனா எடுக்கும் ரிஸ்க் எல்லாம் எண்பதுகளிலேயே பார்த்து புளித்தவை. அதேபோல ஆரம்ப காட்சிகளில் ரொம்பவே பில்டப் ஆக காட்டப்படும் பாம்பு, மாடு ஆகியவை பற்றி பின்னர் எங்குமே காட்டாமல் ஏமாற்றி விடுகிறார் இயக்குனர்.
இந்த ‘காளி’ நல்லவன் தான்.. ஆனால் அவ்வளவு உக்கிரமானவன் அல்ல..