காஷ்மோரா – விமர்சனம்


பில்லி, சூனியம், ஏவல் இவற்றை கண்டுபிடித்து, நிவர்த்தி செய்யும் ‘காஷ்மோரா’ என்கிற ஹைடெக் மந்திரவாதியாக தன்னை காட்டி கொள்பவர் தான் கார்த்தி. தனது சித்து வேலையால் அரசியல்வாதி சரத் லோகித்ஸ்வாவுக்கு உதவி செய்து அவரது நம்பிக்கையை பெறுகிறார் கார்த்தி. இந்த நிலையில் வருமான வரி சோதனைக்கு பயந்து தன்னிடம் இருந்த நகை, பணம் அனைத்தையும் கார்த்தியிடம் கொடுத்து வைக்கிறார் சரத்.

ஆனால் கார்த்தியும் அவரது தந்தை விவேக் உள்ளிட்ட குடும்பத்தினரும் அந்த பணத்துடன் தப்பிச்செல்ல முயற்சிக்கின்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு பாழடைந்த பங்களாவில் சிக்கி கொள்கின்றனர் அங்கே அவர்களை சிக்க வைத்தது ஐநூறு வருடங்களுக்கு முன்பு அந்த இடத்தில் ஆட்சி செய்த ராஜ் நாயக் என்கிற மன்னனின் ஆவி தான்.

எதற்காக ராஜ் நாயக் ஆவி இவர்களை அங்கே சிறைப்படுதியது, அந்த ஆவியிடமிருந்து காஷ்மோரா கார்த்தியால் எப்படி தப்பிக்க முடிந்தது என்பதெல்லாம் மீதி கதை.

ஹாரர், காமெடி, சரித்திர பின்னணி என கலர்புல் மீல்சாக விருந்து பரிமாறியிக்கிறார் இயக்குனர் கோகுல். நிஜத்தை சொன்னால் மொத்த படத்தையும் தனி ஒரு ஆளாக சுமந்தது இருக்கிறார் கார்த்தி. காஷ்மோரா, ராஜ் நாயக், ராஜ் நாயக்கின் ஆவி என மூன்று விதமான கேரக்டர்களையும் மூன்று விதமான நடிப்பால் வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பதில் வெற்றி அடைந்துள்ளார் கார்த்தி. குறிப்பாக மொட்டைத்தலை, தாடியுடன் வரும் ராஜ்நாயக் கேரக்டர் மிரட்டலோ மிரட்டல்.

அரைமணி நேரமே வந்தாலும் நயன்தாரா தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார் .குறிப்பாக நயன்தாரா, ராஜ்நாயக் தலையை துண்டாகுவதும் ராஜ்நாயக், நயன்தாராவை கொல்வதும் ஒரே சமயத்தில் நடப்பது திகைக்க வைக்கிறது.

பேய்களை ஆராய்ச்சி செய்வதாக சொல்லி கொண்டு காஷ்மோரா கார்த்தியின் பின்னால் சுற்றும் ஸ்ரீதிவ்யாவின் கேரக்டரும் சுவராஸ்யம் கூட்டுகிறது. நீண்ட நாளைக்கு பின் விவேக்கின் என்ட்ரி அசத்தல். வில்லன் சரத் லோஹிக்த்ஸ்வாவை காமெடியனாக மாற்றி இருப்பதும் புதுசுதான்

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திருக்கு பலம் சேர்க்கின்றன. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு சரித்திர காலத்திருக்கே நம்மை அழைத்து செல்கிறது. மொத்தத்தில் குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கோகுல்.

Rating: 3/5