காட்டை அழித்து கூறுபோட்டு காசாக்க நினைக்கும் ஒரு கார்ப்பரேட் நிறுவன சமூக துரோகியுடன் மோதி தங்கள் இடத்தையும் இயற்கையும் காப்பாற்றும் பூர்வகுடி இன மக்களின் போராட்டம் தான் இந்த கடம்பன்..
கடம்பவனம் மலைப்பகுதியில் சிமெண்ட்டுக்கான மூலப்பொருட்கள் நிலத்தில் கொட்டிக்கிடக்கிறது என்பது சிமென்ட் ஆலை அதிபரான தீப்ராஜ் ராணாவுக்கு தெரியவருகிறது. அதை கொள்ளையடிப்பதற்காக ஆரம்பத்தில் அஹிம்சை முறையிலும் பின்னர் அடக்கு முறையையும் ஏவி அந்த இடத்தின் பூர்வீக மக்களை அப்புறப்படுத்த முயல்கிறார்..
ஆனால் கடம்பவனத்தின் பாதுகாவலனாக விளங்கும் கடம்பன் (ஆர்யா) இந்த கார்ப்பரேட் நரியின் சூழ்ச்சிக்கு இரையாகாமல் தனது இனத்தையும் இடத்தையும் இயற்கையையும் காக்க போராடுகிறார். சூழ்ச்சி வென்றதா..? உரிமை வென்றதா..?
இயற்கையை, காட்டை, விலங்குகளை நேசிப்பவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய படம் இது. மொத்தப்படத்திலும் ஆர்யாவின் மெனக்கெடலும் கடின உழைப்பும் நம்மை அசரவைக்கிறது.. அமுல் பேபி போல இதுவரை நாம் பார்த்த ஆர்யா, மலை கிராமத்து மனிதனாக, கடம்பனாகவே மாறியிருக்கிறார். இதுபோல நல்ல படங்களை ஆர்யா தேர்ந்தெடுத்து நடிக்கவேண்டும் என்பதே நம் விருப்பம்.
மலைவாழ் பெண்ணாக நடிக்க முயற்சித்தாலும் கேத்தரின் தெரசாவின் உடை, மேக்கப் இரண்டும் அதற்கு தடையாய் நிற்கிறது.. மற்றபடி கூட்டத்தோடு கூட்டமாய் எதிரி ஆட்களுடன் மோதும் அளவுக்கு கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி இருக்கிறார்.
முதலில் அஹிம்சை முறையிலும் பின்னர் அடக்கு முறையிலும் ஆதிவாசி மக்களை விரட்ட சாமர்த்தியமாக திட்டம் தீட்டும் காட்சிகளில் தீப்ராஜ் ராணா நடிப்பில் மிரட்ட முயற்சிக்கிறார்.. அவருக்கு துணையாக காட்டிலாக அதிகாரியாக வரும் ரேஞ்சரின் குரூரமான நடிப்பு அவரது தேர்வை நியாயப்படுத்துகிறது..
மனித உரிமை ஆர்வலர்களாக வரும் ஒய்.ஜி.மகேந்திரனும் மதுவந்தியும் ஆடும் குள்ளநரி ஆட்டம் செம சுவாரஸ்யம். வருஷம் தவறாமல் மனைவியை பிரசவத்துக்கு தயார் பண்ணும் ஆடுகளம் முருகதாஸின் கதாபாத்திரம் சிரிக்க வைப்பதுடன், பல காட்சிகளில் உணர்ச்சிகரமான குணச்சித்திர நடிப்பை வழங்கவும் தவறவில்லை. மதுசூதனன், சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலரும் மிகச்சரியான தேர்வு..
யுவனின் இசையில் பாடல்களும் கானக சூழலுக்கே உரித்தான பின்னணி இசையும் சிலிர்க்க வைக்கின்றன. சண்டைக்காட்சிகளில் திலீப் சுப்பராயனின் புதிய யுக்திகள் புருவங்களை உயர்த்த வைக்கின்றன. சதீஷ்குமாரின் கேமரா படத்தின் மற்றொரு ஹீரோ என்றே சொல்லலாம்.
முதல் படத்தில் தாத்தா-பேரனின் பாசத்தை சொன்ன இயக்குனர் ராகவா, அடுத்த படத்தை அதற்கு சற்றும் சம்பந்தமில்லாத, ஆனால் சமூகத்துக்கு தேவையான கதைக்களத்திற்கு மாற்றியது யாரும் எதிர்பாராதது.. பாராட்டுதலுக்குரியது..
முழுப்படத்தையும் காட்டில் படமாக்கியது சாதராண ஒரு விஷயம் அல்ல. ஆனால் அதை நேர்த்தியாக சாகச காட்சிகளுடன் படமாக்கியுள்ளார் ராகவா. படமாக்கலில் சிற்சில லாஜிக் குறைபாடுகள் இருக்கின்றன.. இருந்துவிட்டு போகட்டும்.. அவை ஒன்றும் படத்தை பெரிதாக பாதிக்கவில்லை. காட்டிற்குள்ளேயே இருந்து இந்த மொத்தப்படத்தையும் எடுக்க அத்தனை பேரின் உழைப்பும் பிரமிக்க வைக்கிறது.
இந்த சம்மர் சீசனில் இரண்டு மணி நேரம் காட்டுக்குள், திகில் கலந்த குளுகுளு பயணம் சென்றுவந்த அனுபவத்தை தருகிறது ‘கடம்பன்’.. இயற்கையை மீட்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதற்காக இயக்குனர் ராகவாவுக்கு ஒரு ஸ்பெஷல் பொக்கே கொடுக்கலாம்.