காதலை கடந்து போகாத மனிதனே இவ்வுலகில் இருக்க முடியாது. உலகத்தையே மறக்கடிக்கச் செய்கிற அதே காதலின் உன்னதமான தருணங்களில் தான் கண் கட்டுகிற அளவுக்கு இம்சைகளும் இருக்கும். இதனை தனது பாணியில் ‘காதல் கண் கட்டுதே’ என படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் சிவராஜ்.
பைக் ஷோரூமில் வேலைபார்க்கும் ஜி.கேவுக்கு பத்திரிக்கை நிருபராக வேலைபார்க்கும் அதுல்யா மீது காதல் துளிர்விடுகிறது.. அது அரும்பாகி மொட்டாகி மலரும் நேரத்தில் அதுல்யாவுக்கு வேறு ஊருக்கு ட்ரான்ஸ்பர் வந்துவிட, அங்கே இருக்கும் போட்டோகிராபர் அனிருத் கலகலவென் பேசிக்கொண்டே ‘ஐ லவ் யூம்மா’ என காதல் பொக்கேவை நீட்டுகிறார்..
சங்கடத்தில் சிக்கும் அதுல்யா இந்த விவரங்களை ஜி.கேவிடமும் அவ்வப்போது மறைக்காமல் சொல்லிவிடுகிறார். ஆனாலும் ஆணின் மனம் ரொம்ப பொசசிவ் ஆனதுதானே.. அதன்பின் காதலர்களுக்குள் நடக்கும் ஊடல்கள் தான் மீதிப்படம்.
பொருத்தமான ஜோடியாக அமைந்திருக்கிறார்கள் கே.ஜியும் அதுல்யாவும். அவர்களின் ஊடல், கூடல் எல்லாவற்றையும் ரசிக்க முடிகிறது. ஹீரோ கே.ஜி நம் பக்கத்து வீட்டில் இருக்கிற ஒரு சாதாரண இளைஞனைப் போல காட்சியளிக்கிறார். படித்து முடித்தவுடன் வேலை தேடுவதே ஒரு வேலையாக இருக்கும் இந்த காலகட்டத்தில் அந்த மாதிரியான தருணங்களில் காதலில் விழுந்து விட்டால் வாழ்க்கை எப்படி நகரும் என்பதை தனது கேரக்டரில் மிக அழகாக வெளிப்படுத்துகிறார்.
ஹீரோயின் அதுல்யா காதல் காட்சிகளில் கண்களாலேயே காதல் மொழி பேசுகிறார். காதலில் மென்மையைக் காட்டுகிற அதே சமயத்தில் துணிச்சலான பெண் நிருபராகவும் இன்னொரு முகம் காட்டுகிறார். சபாஷ்.. இன்னொரு ஹீரோவாக வரும் துதுரு அணிருத்தும் கவனிக்க வைத்திருக்கிறார்.
ஒரு காதல் ஜோடிக்கிடையே மூன்றாவதாக ஒருவர் வருகிற போது ஏற்படுகிற சங்கடங்களும், பின் சூழல் புரிந்து காதலர்கள் ஒன்று சேர்வது என்கிற தமிழ்சினிமா மரபை மீறாமல் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் சிவராஜ். பாடல்கள் பெரிய அளவில் நம்மை கவனம் ஈர்க்க செய்யவில்லை..
ஆனால் காதல் காட்சிகளை தாண்டி கதை நகர்வதற்கு சில் நேரங்களில் அதுவே தடையாகவும் நின்று விடுகிறது. காதலர்கள் அடிக்கடி சந்திப்பதும், பேசிக் கொள்வதுமாக நகரும் திரைக்கதையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
படத்தில் ஹீரோ, ஹீரோயின் என அத்தனை பேருமே புதுமுகங்கள் என்றாலும் கூட பங்கெடுத்த எல்லோருமே படத்தில் தங்களது பங்களிப்பை சரியாக அளித்துள்ளார்கள் என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.. மொத்தத்தில் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக் கூடிய வகையில் ஒரு மென்மையான காதல் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவராஜ்..