கடிகார மனிதர்கள் – விமர்சனம்


சென்னையில் குறைந்த வருமானத்தை கொண்டு பிழைப்பு நடத்துபவர்களின் வாடகை குடியிருப்பு அவலங்களை சொல்லும் படம் தான் இந்த கடிகார மனிதர்கள்.

சென்னையில் ரொட்டிக்கடை ஒன்றில் வேலைபார்க்கும் கிஷோருக்கு திடீரென வீடு மாறியாக வேண்டிய சூழல். கணவன்-மனைவி, குழந்தைகள் மூவர் என ஐந்துபேர் இருந்தாலும், கிடைத்த ஒரு வீட்டை தக்கவைத்துக்கொள்ள மகனை மறைத்து நான்கு பேர் தான் என சொல்லி குடிபோகிறார்.

கண்டிப்பான வீட்டு ஓனர் பாலாசிங்கின் பார்வையில் தனது மகன் தென்பட்டுவிடாமல், கிஷோர் சமாளிக்கும் வேதனை நிறைந்த வாழக்கை தான் மீதிப்படம். இதில் திடீரென அவர் மகன் காணாமல் போய்விட, அவனை தேடியலைகிறார் கிஷோர்..

அதுபோக அதே குடியிருப்பில் பாட்டியுடன் வசிக்கும் கருணாகரனுக்கு பாலாசிங்கின் மகள் மேல் காதல் வர, அங்கே இன்னொரு புதிய பிரச்சனை முளைவிடுகிறது. இவற்றையெல்லாம் இந்த கடிகார மனிதர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்.. சமாளிக்க முடிந்ததா..? என்பதை வருத்தமும் வலியுமாக சொல்லியிருக்கிறார்கள்..

சொற்ப வருமானம் கொண்ட ஒருவன் சென்னை போன்ற பெருநகரங்களில் அன்றாடம் குடும்ப நடத்துவதற்கு எப்படியெல்லாம் சிரமப்படுவான் என்பதற்கு உதாரண வாழ்க்கையை வாழ்ந்து காட்டியிருக்கிறார் கிஷோர். இருப்பதை வைத்து, கணவனின் தவிப்பை உணர்ந்து குடும்பம் நடத்த முயன்று மொத்த வாழக்கையை சமயலறைக்குள்ளேயே கழித்துவிடும் பெண்களின் முகமாக கிஷோரின் மனைவி கேரக்டரில் நடித்துள்ள லதாராவ், நடிப்பில் அவ்வளவு யதார்த்தம் காட்டுகிறார்.

கொடுத்த கேரக்டரில் வஞ்சனை இல்லாமல் புகுந்துகொள்ளும் பாலாசிங் ஹவுஸ் ஒனராக கச்சிதம். சீரியஸாக செல்லும் கதையில் கருணாகரன் கலகலப்பை ஊட்டினாலும் அவரையும் யதார்த்தம் அறையும் காட்சியில் நொறுங்கிப்போகிறார் மனிதர். பாலாசிங்கின் மகளாக வரும் ஷெரின், சிசர் மனோகர், பாவா லட்சுமணன் ஆகியோர் கதையில் இயல்பாக கடந்துபோகிறார்கள்..

சாம் சி.எஸ் ஸின் பின்னணி இசை இந்த கடிகார மனிதர்களின் வலியை, சோகத்தை நமக்கும் கடத்துகிறது. இந்தப்படத்தின் உயிர்நாடியும் இவரது பின்னணி இசை தான். கிடைத்த வாய்ப்பை வைத்து கமர்ஷியல் படம் எடுத்து கல்லா கட்ட முயற்சிக்காமல், எளிய மனிதர்களின் வலியை படமாக்கியதற்காக இயக்குனர் வைகறை பாலனை, படத்தில் தெரியும் குறைகளை மறந்து பாராட்டலாம்.

இந்தப்படத்தை எப்போதாவது பார்க்க நேர்ந்து அப்போதெல்லாம் ஒரு ஹவுஸ் ஓனர் தன்னை மாற்றிக்கொண்டார் என்றால் அதுவே இந்தப்படத்தின் மிகப்பெரிய வெற்றி.