ஜெய்யின் பூர்வீக சொத்தான பழங்கால டூரிஸ்ட் பங்களா ஒன்று காசியில் இருப்பதாகவும் அதன் நூறு வருட குத்தகை காலம் முடிந்துவிட்டபடியால் அது ஜெய்க்குத்தான் சொந்தம் என்றும் அவரது தந்தை சொல்கிறார். காசிக்கு செல்லும் ஜெய், அங்கே ஜீவா நடத்திவரும் தங்கும் விடுதியில் தங்கி தனக்கு சொந்தமான இடம் எது என தேட ஆரம்பிக்கிறார்.
இதற்கிடையே தனது தங்கைக்கு மாப்பிள்ளையாக சதீஷை தேர்வுசெய்யும் ஜீவா, சதீஷின் தங்கை கேத்தரின் தெரசாவுடன் காதல் வயப்படுகிறார். ஜெய்யோ அந்த ஊர் தாசில்தாரான நிக்கி கல்ராணி மீது காதலாகிறார். ஒருகட்டத்தில் ஜீவா நடத்தும் விடுதிதான் தனக்கு சேரவேண்டிய இடம் என்பது தெரியவர, முதலில் கோபமானாலும் பின் ஜீவாவுடன் சமரசம் ஆகிறார் ஜெய்..
ஆனால் தங்கள் இருவரிடமும் முன்பு பணத்தை ஏமாற்றிய மோசடி மன்னன் சிவா, தற்போது பொள்ளாச்சியில் மிகப்பெரிய செல்வந்தரின் வீட்டுக்கு தத்துப்பிள்ளையாக சென்று அங்குள்ள பணத்தை கொள்ளையடிக்க இருப்பதையும், அவரை தனது மகள் நிக்கி கல்ராணிக்கு மாப்பிள்ளையாக்க அவரது தந்தை விடிவி கணேஷ் முயல்வதையும் தடுப்பதற்காக இருவரும் பொள்ளாச்சி செல்கின்றனர்.
அதற்குள் காசியில் ஜெய்க்கு சொந்தமான இடத்தை போலி சாமியாரான யோகிபாபு அபகரிக்க முயல, தமிழக மந்திரி ஒருவரின் சீக்ரெட் லேப்டாப்பை வைத்துக்கொண்டு அவரிடம் பேரம் பேசும் முனீஸ்காந்த், ஜெய் & ஜீவா அன் கோவிடம் சிக்க, அதனால் மந்திரி ஆட்கள் இவர்களுக்கு குறிவைக்க, இறுதியில் யார் யாருக்கு என்ன என்ன நடந்தது, ஜெய்யின் சொத்து அவர் கைக்கு வந்ததா என்பது சுந்தர்.சி பாணியிலான க்ளைமாக்ஸ்.
சில வருடங்களுக்கு முன் வெளியான கலககலப்பு படத்தின் இரண்டாம் பாகம் தான் இது. அதேபோல வழக்கமான சுந்தர்.சியின் காமெடி கும்பமேளா தான் இந்தப்படமும்.. என்ன ஒன்று இந்தமுறை காசியில் வைத்து கலர்புல்லாக கும்பமேளா நடத்தியுள்ளார்கள்.. அதுதான் வித்தியாசம்..
ஜெய், ஜீவா, சிவா மூவருக்கும் சரிசமமான கேரக்டர் கொடுத்திருக்கிறார் சுந்தர்.சி.. ஹீரோக்களாக ஜெய், ஜீவா கெத்து காட்டும்போது, காமெடி ஏரியாவில் அவர்களை ஓவர்டேக் பண்ணுகிறார் சிவா.. ஜாடிக்கேற்ற கவர்ச்சி மூடிகளாக நிக்கி கல்ராணியும் கேத்தரின் தெரசாவும் படத்தை கலர்புல் ஆக்குகிறார்கள்.
சாமியார் கெட்டப்பில் வந்து கிடைக்கும் கேப்பில் சதாய்க்கும் யோகிபாபுவுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். சாமியாராக மாறத்துடிக்கும் சதீஷ் தீட்சை பெறும் காட்சி செம கலாட்டடா. மனோபாலாவும் சிங்கம்புலியும் வழக்கம்போல சுந்தர்.சி என்கிற பைக்கின் இரண்டு கண்ணாடிகளாக மாறியுள்ளார்கள்… ராதாரவியை சீரியஸாகவும் இல்லாமல் காமெடியாகவும் இல்லாமல் வீணடித்திருக்கிறார்கள்.. ஜார்ஜின் அம்மாவாசை அதிரடி குபீர் சிரிப்பு ரகம். முனீஸ்காந்த்தின் வித்தியாசமான வியாதி கிச்சுகிச்சு மூட்டுகிறது. கிராமத்து எபிசோடில் ரோபோ சங்கர் கலகப்பூட்டுகிறார்..
ஹிப் ஹாப் ஆதி இசையில் பாடல்கள் எல்லாம் வழக்கம்போல.. காசியின் அழகை கலர்புல்லாக காட்டிய யு.கேசெந்தில்குமாருக்கு பாராட்டுக்கள். கதை என பெரிதாக மெனக்கெடாவிட்டாலும் சொல்லியிருக்கும் கதைக்குள் சரியான முடிச்சுக்களை போட்டுக்கொண்டே போய், அதை லாஜிக்கெல்லாம் பார்க்காமல் சுவாரஸ்யமாக அவிழ்க்கும் சுந்தர்.சி இந்தப்படத்திலும் சேம் டிட்டோ அதையே செய்துள்ளார். ஆனால் ஒப்பீடு என வரும்போது சுந்தர்.சியின் சமீபத்திய படங்களை விட இதில் காமெடி சதவீதம் சற்றே குறைந்திருப்பது உண்மை..