களரி – விமர்சனம்


கேரளாவில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் மளிகை கடை நடத்துபவர் கிருஷ்ணா.. அப்பா எம்.எஸ்.பாஸ்கர் குடிகாரனாக மாறி குடும்பத்திற்கு ஆகாதவராக மாறிவிட, கல்லூரியில் படிக்கும் தங்கை சம்யுக்தாவுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துவைக்கும் வேலையில் இறங்குகிறார் கிருஷ்ணா..ஆனால் அவரது தங்கையோ பெண்களை வைத்து வியாபாரம் நடத்தும் விஷ்ணுவை, அவரது சுயரூபம் தெரியாமல் காதலிக்கிறார்.

இன்னொரு பக்கம் ஜெய்பிரகாஷிடம் வேலைபார்க்கும் ஆதரவற்ற கிருஷ்ணதேவா, எம்.எஸ்.பாஸ்கரிடம் அவ்வப்போது மது வாங்கி கொடுத்து ஆதரவு காட்ட, அவருக்கு தனது மகளை திருமணம் செய்துவைக்க நினைக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இதனால் ஏற்படும் களேபரத்தில் கிருஷ்ணாவுக்கும் விஷ்ணுவுக்கும் கைகலப்பு ஏற்பட, ஒருகட்டத்தில் தனது காதலை துறந்து கிருஷ்ணதேவாவை மணக்கிறார் சம்யுக்தா.

ஆனால் வரும் நாட்களில் தங்கை பழைய காதலனுடன் சுற்றுவதையும், அவளது கணவன் சோகமே உருவாக இருப்பதையும் கவனிக்கும் கிருஷ்ணாவும் அவரது அம்மா மீராவும் சம்யுக்தாவை சத்தம் போடுகின்றனர். அடுத்தநாளே சம்யுக்தா தீவைத்து தற்கொலை செய்துகொள்கிறார்.

இதற்கெல்லாம் காரணம் விஷ்ணு தான் என விஷ்ணுவை பழிவாங்க அரிவாள் தூக்குகிறார் கிருஷ்ணா.. ஆனால் இயல்பிலேயே பயந்த சுபாவம் கொண்ட அவரால் அதை செய்லபடுத்த முடியாமல் போகிறது. தவிர தங்கையின் மரணத்தில் இன்னொரு புதிய உண்மையும் வெளிப்படுகிறது. அது என்ன உண்மை, கிருஷ்ணாவால் தனது தங்கையின் தற்கொலைக்கு காரணமானவனை பழிவாங்க முடிந்ததா என்பது க்ளைமாக்ஸ்.

அண்ணன் தங்கை பாசத்தை முன்னிறுத்தி எண்பதுகளின் காலகட்டத்திற்கு நம்மை அழைத்து செல்கிறார்கள். அண்ணனாக கிருஷ்ணா பாசமழை பொழிகிறார். தனது பயந்த சுபாவத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் மிகச்சிறப்பாக வெளிப்படுத்துகிறார். க்ளைமாக்சில் வில்லனுக்கு தண்டனை கொடுக்க அவருக்குள் வரும் இயலாமை கலந்த துணிச்சல் கூட ஏற்றுக்கொள்ளும் விதமாகத்தான் இருக்கிறது.

கிருஷ்ணாவுக்கு ஜோடியாக வித்யா, மற்றும் தங்கையாக சம்யுக்தா என இரண்டு கதாநாயகிகள் என்றாலும் சம்யுக்தாவுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரும் அதை அழகாக பயன்படுத்தியுள்ளார். வித்யாவுக்கு இதில் டிபிகல் கதாநாயகி வேடம்.. ஆனால் அழகு முகத்தால் நம்மை வசீகரிக்கிறார். குடிகாரன் கடைசி வரை குடிகாரனாகத்தான் இருப்பான் என்கிற கேரக்டரில் போதை ஆசாமியாக எம்.எஸ்.பாஸ்கரின் அலமப்பால், சலம்பலில் அவ்வளவு யதார்த்தம்.

வில்லத்தனம் காட்டும் விஷ்ணு, நரித்தனம் காட்டும் கிருஷ்ணதேவா, கிருஷ்ணாவின் நண்பனாக வக்கீலாக வரும் பிளாக் பாண்டி என பலரும் கதையோட்டத்தில் இணைந்து கவனிக்க வைக்கிறார்கள். சரி, படத்தின் கதைக்கு பொருந்துகிற மாதிரி தலைப்பையாவது வைக்க வேண்டாமா..? கிருஷ்ணா பயந்த சுபாவம் கொண்டவர் என்பதற்காக கிளைமாக்ஸை அவ்வளவு நீளமாக இழுக்க வேண்டுமா என்ன..?

தொண்ணூறுகளில் டி ராஜேந்தர் பலமுறை அரைத்து சலித்த கதையை பட்டி டிங்கரிங் பார்த்து களரி என்கிற பெயரில் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் கிரண் சந்த்..