ஜீவா, அருள்நிதி இருவரும் சிறுவயது நண்பர்கள். அருள்நிதியின் காதல் தோல்வி அடைந்ததால் வேறு பெண்ணை திருமணம் செய்ய மறுக்கிறார். அவரது அம்மா ரேணுகாவின் வற்புறுத்தலால் மாமா மகள் மஞ்சிமாவை பெண் பார்க்க செல்ல, ஏற்கனவே ஜீவா செய்த குழப்பத்தால், மாமா பெண் தர மறுப்பதுடன் மஞ்சிமாவுக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் செய்கிறார்.
இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என மஞ்சிமா கூறியதால் கல்யாண தினத்தன்று அவரை தூக்கி வந்து அருள்நிதிக்கு திருமணம் செய்விக்க நினைக்கிறார் ஜீவா. ஆனால் அதற்கு அருள்நிதி மறுத்துவிடவே, பழி ஜீவாமீது விழுகிறது.
இதனால் ஒருகட்டத்தில் மஞ்சிமாவுக்கு ஜீவா மீதே காதல் வர, ஆரம்பத்தில் ஒதுங்கினாலும் பின் ஜீவாவும் காதலாகிறார். ஆனால் மீண்டும் அதே பையனுக்கு மஞ்சிமாவை மணம் முடிக்க நினைக்கும் மாமா, அருள்நிதியை அழைத்து, தனது மகள் திருமணத்திற்கு பாதுகாப்பாக இருக்கும்படி சத்தியம் வாங்கிக்கொள்கிறார்.
ஜீவா-மஞ்சிமாவின் காதல் விவரம் எதுவுமே தெரியாத அருள்நிதியும் மாமனுக்கு வாக்கு தருகிறார். விஷயம் தெரிந்து, பின்னர் ஜீவாவிடம் காதலை கைவிட கூறுகிறார். ஜீவா மறுக்கவே, நண்பர்கள் இருவரும் எதிரிகளாக மாறும் சூழல் ஏற்படுகிறது.
தடையை உடைத்து ஜீவா-மஞ்சிமாவை திருமணம் செய்தாரா, தாய்மாமனுக்காக ஜீவாவை பகைத்தாரா அருள்நிதி, நண்பனின் வற்புறுத்தலுக்காக மஞ்சிமாவை பெண் பார்க்க வந்த அருள்நிதி, பின் ஏன் மஞ்சிமாவை திருமணம் செய்ய மறுத்தார் என்பதற்கெல்லாம் மீதிக்கதை விடை சொல்கிறது.
சினிமாவுக்கு புதிய கதை இல்லை என்றாலும், தொய்வில்லாத திரைக்கதையால் படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை நேர்த்தியாக கொண்டுசென்றதால் படம் முழுதும் கலகலப்பாகவே செல்கிறது. நீண்டநாளைக்கு பிறகு அழகும் துருதுறுப்பும் நிறைந்த ஜீவாவை பார்க்க முடிகிறது. கதைப்படி அருள்நிதிக்கான முக்கியத்துவத்தை குறைக்க சொல்லாமல் விட்டுக்கொடுத்து விளையாடியுள்ள ஜீவாவின் பெருந்தன்மையை பாராட்டியே ஆகவேண்டும்.
அருள்நிதிக்கும் நீண்டநாளைக்கு பிறகு ஒரு கலகலப்பான படம். காதல் நட்பு என கலந்துகட்டி அடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் சரியான ஆக்ரோஷம் காட்டியுள்ளார். மஞ்சிமா மோகன் சீரியஸாக வசனம் போதெல்லாம் முன்பு சுவலட்சுமி என்கிற டீச்சர்த்தனமான நடிகை இருந்தாரே, அவர்தான் ஞாபகத்தில் வந்துபோகிறார். ஆனாலும் மஞ்சிமா அழகுதான்.. அதேபோல பிரியா பவானி சங்கரும் காதலுக்கு காதல், வீராப்புக்கு வீராப்பு என இரண்டு பரிமாணம் காட்டி நடித்துள்ளார்.
இந்த ஜோடிகள் தவிர, படத்தை கலகலப்பாக நகர்த்த உதவுகின்றனர் ராதாரவி, ரோபோ சங்கர், பாலசரவணன் கூட்டணி.. குறிப்பாக செட்டிநாட்டு அப்பச்சியாக ராதாரவிக்கு வித்தியாசமான கதாபாத்திரம். மூவரும் காமெடிக்கு உத்தரவாதம் தருகிறார்கள்.. இளவரசு, ரேணுகா, ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி, மாரிமுத்து எல்லோருமே கதையை சரியான கோணத்தில் நகர்த்த உதவி இருக்கிறார்கள்.
கதைக்கு தேவையான பாடல்.. கருத்தான பின்னணி இசையை வழங்கி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு குளிர்ச்சியாய் இதமளிக்கின்றன. ஆர்.அசோக்கின் வசனங்கள் படத்திற்கு பலம்.. அறிமுக இயக்குனர் என சொல்ல முடியாதபடி ஒரு ஜனரஞ்சகமான கதையை சரிவிகிதத்தில் கலந்து படமாக்கியுள்ளார் இயக்குனர் ராஜசேகர். நட்பு, காதல், சொந்தம், இவற்றுக்கு இடையே ஒரு கபடி போட்டி என போரடிக்காமல் படத்தை உருவாக்கியுள்ளார்.
ரசிகர்கள் தாரளமாக தியேட்டருக்கு சென்று இந்தப்படத்தை பார்க்கலாம்.