நடுக்காவேரி கிராமத்தை சேர்ந்த கமலி ப்ளஸ் ஒன் படிக்கும் குறும்புத்தனமான பெண். ஐஐடியில் முதல் மாணவனாக வந்த ரோகித்தை ஏதேச்சையாக ஒரு டிவி பேட்டியில் பார்த்ததும் அவர்மீது காதலாகிறார். ஆனால் அவரை சந்திக்க வேண்டும், காதலை சொலவேண்டும் என்பதற்காக தானும் ஐஐடி படிப்பு முடிவெடுக்கிறார்., ப்ளஸ் 2 படிக்கும்போதே, தனது ஊரில் உள்ள ரிட்டையர்டு புரொபசர் பிரதாப் போத்தனிடம் கோச்சிங் செல்கிறார்.
ஏற்கனவே நன்றாக படிக்கும் கமலி நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று, நினைத்தபடியே சென்னை ஐஐடியிலும் சேர்கிறார். ஆனால் கமலி, ஐஐடி அங்கே, படிப்பை மறந்துவிட்டு, ரோகித்தை பின் தொடர்வதையும் அவரிடம் தனது காதலை வெளிபடுத்த முயற்சிப்பதிலுமே கவனம் செலுத்துவதால், முதல் வருட தேர்வில் கோட்டை விடுகிறார். அத்துடன் இவர் யாரையோ காதலிப்பதற்காகத்தான் ஐஐடிக்கே வந்துள்ளார் என்கிற விபரம் கல்லூரியில் பரவுகிறது. அவர் ஒருதலையாக காதலித்த ரோகித்தே அதை கிண்டலடித்ததை தாங்கமுடியாமல், இரவோடு இரவாக ஊருக்கு கிளம்புகிறார்.
ஆனால் அங்கே தனது கோச் பிரதாப் போத்தன், தனது வெற்றி காரணமாக இன்னும் பல மாணவர்களுக்கு இலவச பயிற்சி கொடுப்பதையும், தன்னையே அதற்கு முன்னுதாரணமாக மற்றவர்களிடம் கூறுவதையும் பார்த்து, மனம் மாறி மீண்டும் ஐஐடிக்கு திரும்புகிறார் கமலி. அதைத்தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்துகிறார்.. அவருக்கு படிப்பில் எந்த அளவுக்கு வெற்றி கிடைத்தது, அவர் தேடிவந்த காதல் அவரை தேடி வந்ததா, அல்லது படிப்புக்காக காதலையே தூக்கி போட்டாரா என்பது மீதிக்கதை.
இந்தப்படத்தின் இயக்குனர் ஏற்கனவே சொன்னதுபோல கயல் ஆனந்தியை தவிர இந்த கமலி கதாபாத்திரத்தில் கயல் ஆனந்தியை தவிர வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை.. குறும்பு, நட்பு, பாசம், சென்டிமென்ட், உத்வேகம் என எல்லாவற்றையும் நேரத்துக்கு தகுந்தாற்போல கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார் ஆனந்தி. இந்தப்படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள் கமலிக்கு ரசிகர்களாக மாறிவிடுவது உறுதி.
ரசிகர்கள் மனதில் ஆழமாக பதியும்படியான கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரதாப் போத்தன். எப்போதாவது ஒரு படத்தில் மட்டும் ஏன் நடிக்கிறார் என்பது இப்போதுதான் புரிகிறது. கமலிக்கு அவர் கோச்சிங் கொடுக்கும் விதம் சபாஷ் சொல்ல வைக்கிறது. நுழைவுத்தேர்வு எழுத தயாராகும் மாணவர்களுக்கு இவரது கதாபாத்திரம் நிச்சயம் ஒரு ஊக்க சக்தியாக அமைந்துள்ளது.
கமலியின் மானசீக காதலானாக வரும் ரோஹித் பார்ப்பதற்கு கவுதம் கார்த்திக்கின் 2.ஓ வெர்ஷனாக இருக்கிறார். அதேசமயம் ஒரு அறிமுக ஹீரோவாகவும் நம் மனதில் பதிகிறார். அவருக்கும் கமலிகேகுமான ரயில் காட்சிகள் அழகான ஹைக்கூ.
கமலியின் கனவுக்கு முட்டுக்கட்டை போடாத கிராமத்து வெள்ளந்தி அப்பாவாக அழகம் பெருமாள், கமலிக்கு சமமான துறுதுறுப்பை படம் நெடுக வெளிப்படுத்தி இருக்கும் யூட்யூப் புகழ் நக்கலைட் ஸ்ரீஜா, கமலியின் முயற்சியை ஊக்கப்படுத்தும் ஆசிரியர் இமான் அண்ணாச்சி, தங்கை கமலியின் கனவுக்கு பொறாமை இல்லாமல் சப்போர்ட் பண்ணும் அவரது அண்ணன், கமலியின் ஹாஸ்டல்மேட்டாக வரும் அபிதா, கமலியை கண்டிக்கும் பேராசிரியர் என படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் எல்லாம் நேர்த்தியான, இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.
இடைவேளைக்கு முன் நடுக்காவேரி கிராமத்திற்குள் நம்மை அழைத்துச்சென்று சுற்றிக்காட்டும் ஒளிப்பதிவாளர் ஜெகதீசன் லோகைய்யன், இடைவேளைக்கு பிறகு ஐஐடியில் நாமே படிக்க சென்றது போன்ற உணர்வை தனது ஒளிப்பதிவால் ஏற்படுத்துகிறார். இசையமைப்பாளர் தீனதயாளனும் தன பங்கிற்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் உதவி இருக்கிறார்.,
குத்துப்பாட்டு, சிகரெட் புகைத்தல், மது அருந்துதல் உள்ளிட்ட காட்சிகள், ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் என எதுவுமே இல்லாமல் ஒரு படம் எடுக்க முடியும், அதையும் கூட, மாணவர்களுக்கு வழிகாட்டியாக அமையும் ஒரு பாடமாகவும் கொடுக்க முடியும் என, சினிமாவை மலிவாக அணுகும் பல படைப்பாளிகளுக்கு இந்தப்படம் சவுக்கடி கொடுத்திருக்கிறது.
இன்றைய கமர்ஷியல் சினிமா உலகில் மலிவான எந்த விஷயங்களையும் உள்ளே புகுத்தாமல், சிறிதும் சமரசம் செய்து கொள்ளாமல் இந்தப்படத்தை ஒரு பாடமாகவே இயக்கிய இயக்குனர் ராஜசேகர் துரைசாமிக்கு ஒரு சல்யூட்.
மொத்தத்தில் படிப்பில் கவனம் செலுத்த விரும்பும் மாணவர்கள் மட்டுமல்லாது அவர்களது பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்காகவே சென்று பார்க்க வேண்டிய படம்.