கதாநாயகன் – விமர்சனம்


அநியாயங்களை கண்டால் அடுத்த தெரு ச்வழியாக சைலன்ட் ஆக எஸ்கேப் ஆகிறவர் விஷ்ணு.. அவர் காதலிக்கும் கேத்ரின் தெரசாவின் அப்பாவோ துணிச்சலான ஆண்பிள்ளைக்குத்தான் தனது மகளை திருமணம் செய்து தருவேன் என கறார் காட்டுகிறார். சாதாரண ஆள் காதலிக்காக கதாநாயகனாக மாறினானா இல்லையா என்பதுதான் மீதிப்படம்..

இந்த கேப்பில் லோக்கல் ரவுடியை விஷ்ணு அடிப்பது, காயத்திற்கு சிகிச்சைக்குப்போன இடத்தில் கொடிய நோயால் தான் விரைவில் சாகப்போகிறோம் என தெரியவருவது, அக்காவின் திருமணத்தை நடத்த தேவைப்படும் பணத்துக்காக அரபு ஷேக்கிற்கு கிட்னியை விற்பது, தனக்கு நோயில்லை என தெரிந்தவுடன் ஷேக்கிடம் கிட்னி கொடுக்காமல் எஸ்கேப் ஆவது என சில் ஜாலி எபிசோடுகளை புகுத்தி கலாட்டா செய்திருக்கிறார்கள்.

ஹைவேஸில் ஆம்னி பச ஓட்டுவதை விட கிராமத்திற்குள் மினிபஸ் ஓட்டுவது மாதிரி இந்தப்படத்தில் ரிஸ்க் இல்லாத கதையையும் கேரக்டரையும் தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். அதிலும் காமெடி அவருக்கு இயல்பாகவே வருகிறது.. இந்தப்படத்திலும் அது ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

இன்னொரு ஹீரோ ரேஞ்சுக்கு சூரி.. அதிலும் விஷ்ணுவுடன் இவர் கூட்டணி சேர்ந்தால் கலாட்டாவுக்கு நூறு சதவீதம் கியாரண்டி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் சூரி.. கெஸ்ட் ரோல் தான் என்றாலும், அந்த கொஞ்ச நேரத்திலும் கூட தனது தேர்வை தனது ‘செம.. செம.. செமயான’ நடிப்பால் நியாயப்படுத்துகிறார் விஜய்சேதுபதி..

காமெடி கதையில் நாயகிக்கு என்ன வேலையோ அதை கொஞ்சம் கூட உறுத்தாமல் செய்துவிட்டு போகிறார் கேத்ரின் தெரசா. அரை மணி நேரம் வந்தாலும் அந்த அரபு ஷேக் கேரக்டரில் தான் வரும் காட்சிகளில் ‘மெர்சல்’ காட்டுகிறார் ஆனந்தராஜ்.

மகனின் காதலுக்கு வக்காலத்து வாங்கும் டிபிகல் அம்மாவாக சரண்யா. க்ளைமாக்ஸில் காதலுக்கு மரியாதை பாணியில் பெண் கேட்பது ஓவர் குசும்பு.. மீடியமான வில்லனாக அருள்தாஸ் டெரர் அன்ட் காமெடி என கலந்துகட்டுகிறார்.. க்ளைமாக்ஸிற்கு பத்து நிமிடத்திற்கு முன் என்ட்ரி கொடுக்கும் நான் கடவுள் ராஜேந்திரன் தனது காந்த குரலால் நடத்தும் இன்னிசை கச்சேரி இன்னொரு காமெடி ஜுகல்பந்தி.

ஷான் ரோல்டனின் இசையில் இரண்டு பாடல்கள் அடடே சொல்லவைக்கிறது. லட்சுமனின் ஒளிப்பதிவு காமெடி காட்சிகளில் கூட விதவிதமாக வித்தியாசமான டோன் காட்டுகிறது. அறிமுக இயக்குனர் முருகானந்தம் தானும் ஒரு காமெடி நடிகர் என்பதாலோ என்னவோ, கதையில் காமெடியின் கனம் குறைந்துவிடக்கூடாது என மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.. ஆனந்தராஜ் போர்ஷனில் கொஞ்சம் மரகதநாணயம் வாடை அடிக்கவே செய்கிறது..

ஆனாலும் என்ட் டைட்டில் போடும் வரை சிரிப்புக்கு உத்தரவாதம் தந்து நம்மை வெளியே அனுப்பி வைக்கிறார்கள்.. இதற்கு முந்தைய படமாகட்டும், இந்தப்படமாகட்டும் பந்தா காட்டும் சூரியும் அவரை அவ்வப்போது சிக்கலில் மாட்டிவிடும் விஷ்ணுவும், இதே பாலிசியை தொடர்ந்து கடைபிடித்தால் காமெடியில் சத்யராஜ்-கவுண்டமணி போல இரட்டையர்களாகவும் கலக்கலாம்